ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்- விஞ்ஞானிக்குள் ஒரு இசைக்கலைஞன்!


அந்தக் குழந்தை பிறந்தபோது அதன் தலை மட்டும் அளவில் பெரியதாக இருந்தது, அதன் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அந்தக் காலத்தில் மருத்துவர்களும்,  என்ன காரணத்தால் இப்படி தலை பெரிதாய் ஆகியிருக்கிறது என்பதைக் கண்டறிய முடியாமல் தவித்து இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் பாட்டி,  முதல் முறையாக அக்குழந்தையைப் பார்த்த போது “அய்யய்யோ! பெரிசா இருக்கே! தலை ரொம்ப பெரிசா இருக்கே!” என்று அழுது புலம்பி இருக்கிறார். மருத்துவர்கள், பெற்றோர்கள் எல்லோருடைய கவலைகளும் சில தினங்கள்தான், பிறகு தானாகவே தலை சரியாகி இருக்கிறது.

ஒரு குழந்தை தன்னுடைய மழலைக் குரலால்,  ‘அம்மா…’ எனத் திக்கித் திக்கி அழைக்கும் அந்த முதல் வார்த்தைதான் ஒரு தாய்க்கு கிடைக்கக் கூடிய மிகப் பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாய் இருக்க முடியும். ஆனால், இக்குழந்தை இரண்டு வயது வரை சரியாய் பேசக் கூட முடியாத குறைபாட்டோடு இருந்து இருக்கிறது. துறுதுறு என குறும்பு செய்து திரியும் ஒரு குழந்தை,  தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் குதூகலத்தோடு வைத்திருக்கும். ஆனால், இந்தச் சுட்டியோ ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் ஒரு துறவியைப் போல அமைதியாய் இருந்திருக்கிறது. இந்தக் கவலைகளோடு கூட, சரியான கவனிப்புத் திறனும் இல்லாதிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள் அதனுடைய பெற்றோர்கள்.

கவனிப்புத் திறன் சரியாய் இல்லாமல் இருப்பதைக் கண்டறிந்தது கூட அந்தக் குழந்தையின் ஒரு செயலால் தான். அந்தக் குழந்தைக்கு இரண்டரை வயதானபோது, புதிதாய்ப் பிறந்த அதன் தங்கையை முதல் முறையாகப் பார்த்தபோது, “இந்தப் பொம்மைக்கு சக்கரமே இல்லியே எப்படி இது போகும்” எனத் திக்கித் திக்கிக் கேட்டிருக்கிறது அந்தக் குழந்தை. ஆறு வயதில் பள்ளியில் சேர்த்த போது, ஆசிரியர்களும் இவன் ஒரு மக்குக் குழந்தை என பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார்கள்.

இத்தனைக் குறைபாடுகளோடு பெற்றோரைக் கவலைக்கு உள்ளாகிய ஒரு குழந்தை, ஆசிரியர்களால் மக்கு என அழைக்கப்பட்ட ஒரு குழந்தை எப்படி இயற்பியல் துறையில் மிகப் புரட்சிகரமான கோட்பாடுகளை வெளியிட்டு, இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவியல் அறிஞராக பெயரெடுத்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஐன்ஸ்டைனின் சிறுவயது வாழ்க்கையை, அவரின் செயற்பாடுகளைப் பார்க்க வேண்டும்.

அவர் சிறு வயதில் பேசமுடியாமல் இருந்தது, கவனிப்புத் திறன் குறைவாய் இருந்தது எல்லாமே உண்மை. அவை படிப்படியாக சரியாகி வந்ததும் உண்மை. ஆனால், ஆசிரியர்கள் அவரை மக்கு என்றழைத்தது? அது மட்டும் உண்மையாக இல்லை. காரணம், அன்றைய கல்விமுறையின் மீது ஐன்ஸ்டைனுக்கு வெறுப்பு இருந்தது. அதுவும் ஆறு அல்லது ஏழு வயதிலேயே.

அந்தக் காலத்தில் பள்ளிகள் அனைத்துமே மதம் சார்ந்தவையாக இருந்தன. ஐன்ஸ்டைனின் குடும்பம் யூத மதத்தைச் சேர்ந்ததாய் இருந்தாலும், அவரது தந்தை ஹெர்மான், ஐன்ஸ்டைனை ஒரு கத்தோலிக்க (கிறித்துவத்தின் ஒரு பிரிவு) பள்ளியில் சேர்த்தார். சில காலம் கழித்து இன்னொரு யூத மத பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிகள் மட்டும் மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், பாடத்திட்டங்களும் மதம் சார்ந்தவையாக இருந்தன. எளிமையான அறிவியல் விசயங்கள் கூட மதம் சார்ந்த பார்வையுடனே போதிக்கப்பட்டன. ஐன்ஸ்டைனுக்கு சிறு வயதில் கடவுள் மீதான பக்தி இருந்தாலும், இப்படி அறிவியலை மதம் சார்ந்து போதிக்கப்படுவதில் விருப்பம் இல்லை.

அதேபோல, அன்று ஆசிரியர்கள் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ, அதை மனனம் செய்து அப்படியே ஒப்புவிக்க வேண்டுமென எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐன்ஸ்டைனோ தான் எவ்வாறு விளங்கிக் கொண்டாரே அப்படியே பதில் சொல்லவும், எழுதவும் செய்தார். எக்கச்சக்க சந்தேகங்களை ஆசிரியர்களை நோக்கிக் கேள்விகளாக வீசினார். சில ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததைச் சொன்னார்கள், சிலரோ ஒரு குட்டிப்பையன் கேள்வி கேட்பதா என பொருமினார்கள். இந்த சுதந்திரச் சிந்தனையும் கேள்வி கேட்கத் தூண்டிய தேடல் நிறைந்த மனமும் கொண்ட ஐன்ஸ்டைனைத் தான், அந்தக் கால கல்வி போதித்த ஆசிரியர்கள் மக்கு என்ற முத்திரையைக் குத்தி, பள்ளி படிப்பை முடிக்க ஓராண்டு இருந்த நிலையில் பள்ளியை விட்டு வெளியேறச் செய்தார்கள். அதன் பிறகு, அவர் எதிர்பார்த்த மாதிரியான கல்வியை வழங்கிய ஸ்விட்சர்லாந்து நாட்டு கல்வி நிலையம் ஒன்றில் படிப்பைத் தொடர்ந்தார்.

ஐன்ஸ்டைனுடைய இந்த சுதந்திர சிந்தனைக்கும், எதையும் ஆராய்ந்து கேள்வி கேட்கும் குனத்திற்குமான அடிப்படையெல்லாம் அவருடைய ஐந்து வயதிலிருந்தே துவங்குகிறது.

ஐந்து வயதில் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருந்த ஐன்ஸ்டைனுக்கு, அவரது தந்தை ஒரு காந்தத் திசைகாட்டியை (Magenetic Compass) வழங்கினார். அவர் முதன்முதலில் தொட்டுப் பார்த்த அறிவியல் சார்ந்த ஒரு பொருள் அதுவாகத்தான் இருக்கக்கூடும். அந்தத் திசைகாட்டியை எந்தப் பக்கம் திருப்பினாலும், அந்த முள் அதற்கேற்றவாறு திரும்பி எப்படி ஒரே திசையைக் காட்டுகிறது என்று யோசிக்கத் தொடங்கினார். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி தன் மாயக்கரங்களைக் கொண்டு இந்த முள்ளை இயக்குவதாகக் கணித்தார். அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தியின் பெயர் காந்தவிசை என்று புரியாத வயது அது. இருந்தாலும், அவர் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதில் இருந்து துவங்கியது அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மை.

பின்னாட்களில் பொருட்களுடைய இயக்கம், அவை ஏன் அப்படி இயங்குகின்றன, அதை இயக்குவது எது? இந்த மாதிரியான விசயங்களை அவர் யோசிக்க அடித்தளமாக இருந்தது அந்தக் காம்பஸ் தான். இந்தப் பொருட்களைப் பார்த்து யோசிக்கும் திறமை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்னாட்களில் பொருட்களை நேரடியாகத் தொட்டு ஆய்வு செய்யாமலேயே அந்தப் பொருட்களுக்கான கோட்பாடுகளை உருவாக்கிய ஒரு விஞ்ஞானியாக அவரை உருவாக்கியது. என் மேசை மேல் இருக்கும் தாளும், பென்சிலும் தான் என் ஆய்வுக்கருவிகள். என் மூளைதான் ஆய்வகம் என்று அவரை சொல்ல வைத்தது.

மிகப்பெரிய ஆளுமைகள் எல்லோருடைய இளம்பிராயத்தையும் பார்த்தால் அவர்களுடைய அறிவை விசாலமாக்கியவை எல்லாம் புத்தகங்களாக மட்டுமே இருக்கும். அதுவும் அறிவியல் சார்ந்த புத்தகங்களை விடவும், அவர்களுடைய குனாதிசயங்களை வடிவமைத்த புத்தகங்கள் பெரும்பாலும் கதைகளாகவும், தேவதைக் கதைகளாகவுமே (Fairy tales) இருந்திருக்கின்றன. அது போலவேதான் ஐன்ஸ்டைனுடைய வாழ்விலும் நடந்திருக்கிறது.

ஐன்ஸ்டைனுடைய வீட்டில் ஒரு நூலகம் இருந்தது. அவருடைய தந்தை மற்றும் சித்தப்பாவுடையது. அவருடைய 12-ம் வயதில் வரைகணிதம் (Geometry) தொடர்பான ஒரு புத்தகம் கிடைக்கிறது. இந்தப் புத்தகம் அவருக்கு கணிதம் மீதான காதலை ஏற்படுத்துகிறது. மதத்தின் தொடர்புடைய அறிவியலை மட்டுமே பள்ளி போதித்துக்கொண்டிருந்த வேளையில், ஆற்றலும் பொருளும் (Energy and Matter) என்ற புத்தகத்தை அவருடைய வீட்டிலிருந்த நூலகத்தில் படித்தார். மதக் கருத்துகள் இல்லாத வகையில் எளிமையாக அறிவியலை இந்த புத்தகம் போதித்தது. பள்ளியில் கணிதத்திலும், இயற்பியலிலும் சிறப்பான மதிப்பெண்களையே பெற்றார்.

பள்ளியில் போதிக்கப்பட்ட கணிதம் அவருக்கு வெறுப்பானதாய் இருந்தாலும், வீட்டில் அவருடைய சித்தப்பா ஜேக்கப் ஐன்ஸ்டைனுக்கு கணிதத்தை அருமையாக போதித்தார். அல்ஜீப்ராவைப் பற்றி அவர் கதையாகவே ஐன்ஸ்டைனுக்கு படம் நடத்தினார். அதாவது இப்படி, ‘அல்ஜீப்ரா என்பது ஒரு விளையாட்டு. பெயர் தெரியாத ஒரு சிறு விலங்கைத் தேடிக் காட்டுக்குப் போகிறோம். முதலில் அந்த விலங்குக்கு X எனப் பெயர் வைக்கிறோம். தேடிக் கண்டுபிடித்த பிறகு அதற்குப் பெயர் சூட்டுகிறோம்.’

இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் கூடவே இன்னொரு அருமையான துணையும் அவருக்குக் கிடைத்தது. யூத மத வழக்கப்படி ஒரு ஏழை மாணவருடன் ஐன்ஸ்டைனுடைய குடும்பம் வாரம்தோறும் தங்களுடைய உணவைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்த ஏழை மருத்துவ மாணவரின் பெயர் Max Talmud. ஐன்ஸ்டைனுடைய அறிவை விரிவாக்கியதில் இவருடைய பங்கு மிக முக்கியமானது. வாரந்தோறும் அவர் வரும்போதெல்லாம் ஐன்ஸ்டைனுக்காக ஒரு புத்தகத்தைக் கொண்டு வருவார். அவர்தான் ஐன்ஸ்டைனுக்கு கணிதம், இயற்பியல், தத்துவம் போன்ற துறைகளில் பெரும் ஆர்வத்தை வர வழைத்தவர். இவர் அறிமுகப்படுத்திய புத்தகங்களில் அறிவியல் புனைகதைகள் பல ஐன்ஸ்டைனை தீவிரமாக யோசிக்க வைத்தன.

பள்ளியில் இவர் கற்றுக்கொண்டதை விடவும் இவருடைய வீட்டின் நூலகத்திலிருந்த புத்தகங்களே ஐன்ஸ்டைனை பெரிய அறிவாளியாகச் செதுக்கியது என்றால் மிகையில்லை. இப்படி விசாலமான அறிவைக்கொன்டு அவர் பள்ளியில் ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்க, ஆசிரியர்களோ இவரை வெறுத்தார்கள். ‘இவன் தொடர்ந்து பள்ளியில் படித்தால் பிற மானவர்களையும் கெடுத்துவிடுவான்’ என்றே அஞ்சினார்கள். இவனைப் பள்ளியிலிருந்து எப்படி விலக்குவது என அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்விமுறையை வெறுத்த ஐன்ஸ்டைனும் இந்தப் பள்ளியிலிருந்து வெளியேறிவிட யோசித்துக்கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டு இருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி பள்ளியிலிருந்து வெளியேறினார்.

இவருடைய சிந்தனை முறைக்கு ஒத்து வரும் பள்ளியாக சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்த ஸ்விஸ் பெடரல் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்க சென்றார். அங்கு நடந்த நுழைவுத் தேர்வில் கணிதத்தையும், இயற்பியலையும் தவிர வேறு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், இவருக்கு கணிதத்தில் இருந்த திறமையைக் கண்டு, அவர் முடிக்காமல் விட்ட பள்ளிப் படிப்பை ஸ்விட்சர்லாந்திலெயே இருந்த ஒரு பள்ளியில் முடிதுட்விட்டு வந்தால் இங்கு படிக்க அனுமதி தருவதாக, அந்தக் கல்லூரியின் முதல்வர் உறுதியளித்தார். அதேபோல பள்ளிப்படிப்பை முடித்தபிறகு அந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அதன்பிறகு நடந்தவை எல்லாம் வரலாறு.

பதினாறு வயதிலேயே, தான் விரும்பிய வகையில் கல்வி கற்பதற்காக தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்குச் சென்று படிக்கும் அளவிற்கு மனஉறுதி உடையவராகவும், அறிவின் மீதான தீராக்காதலுடையவராகவும் இருந்தார். கல்வியில் மட்டுமல்ல, சிறு வயதிலிருந்தே வயலின் வாசிப்பதிலும் திறமையானவராக விளங்கினார். வயலின் வாசிக்கும் பழக்கம் அவருடைய தாயிடமிருந்து அவருக்கு வந்திருந்தது. பெரும் விஞ்ஞானியாக ஆனபிறகும், வயலினை விடாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார்.

 

 

நன்றி : அனிதா | இன்று ஒரு தகவல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *