சிறுகதை | ஒரு கிழவரும் மூன்று மகன்களும் | மகாலிங்கம் பத்மநாபன்


நான் சொல்லப் போவது உண்மைக் கதையல்ல. முழுவதும்  கற்பனை யுமில்லை. இதனை உண்மை கலந்த கற்பனைக் கதை என்றோ அல்லது கற்பனை கலந்த உண்மைக் கதை என்றோ கூறலாம்.

கிழவருக்கு மூன்று மகன்கள் தவிர மனைவியும் மகள் மாரும் இருந்தனர். அவர்களைப் பற்றியும் எழுதினால் நாவலாக மாறி விடும். எனவே அவர்களைப் பற்றி இருட்டடிப்பு செய்து விடுகிறேன்.

விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள். கிழவரின் மகன்களான மூத்தவன், நடுவிலான், கடைக்  குட்டி ஒருவரிடமும்  அதை ஆரம்பத்தில் காணவில்லை. பெயர்களை விட்டு விடுவோம். ஏன் சோலி?

குடுக்கிற கடவுள் கூரையைப் பிய்ச்சுக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். எந்தக் கடவுளும் அந்தக் கிழவருக்கு அப்படிக் கொடுக்கவில்லை. ஒரு வேளை பொடியன்களின் சாதக பலன் தானோ?

sam_0962

கிழவர் யாழ்ப்பாணத்தில் ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறப் போட்ட நெல்லிக் காய், தோடம்பழ இனிப்பு, மில்க் ரொபி, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, சுருட்டு, பீடி, சிகரெட் இவை தான் விற்பனைப் பொருட்கள். மூன்று வேளை சாப்பாட்டுக்கே தானம் போடும் நிலை. இவர் பிள்ளைகளைப் படிக்க வைத்ததே சாதனை தான்.

நான் வன்னியில் இருந்து படிக்க யாழ்ப்பாணம் போனவன். என் தந்தை ஒரு சிறிய அரச உத்தியோகத்தவர் என்பதனால் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு நடுத்தரப் பாடசாலையில் எங்களைப் படிக்க விட்டிருந்தார். நாமிருந்த வீட்டிற்கு அருகில் தான் பெட்டிக் கடை.

நடுவிலி எனது தோழன். படிப்பும் நடுத்தரம். ஒருவேளை என்னைப் போல டியுசன் வகுப்புகளுக்கும் போயிருந்தால் நல்லாய் படித்திருப்பானோ, என்னமோ? நல்லவன் எல்லோருடனும் நன்கு பழகுவான். கஷ்டங்களையும் கூறுவான்.

மூத்தவன் புலமைப் பரிசில் கிடைத்து புகழ் பூத்த கல்லூரிக்குப் படிக்கப் போனவன். பல்கலைக்கழகம் சென்று கலைப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்தான். இறுதி ஆண்டு படிக்கும் போது எழுதிய கிலெரிக்கள்  பரீட்சை பாஸ் பண்ண, பட்டம் பெற்று வெளியேறும் போது அரச உத்தியோகமும் பெற்றான். கிழவரின் குடும்பமும் நிம்மதியாகச் சாப்பிட்டது.

நடுவிலானும் நானும் ஓ எல் பரீட்சையை மட்டுமட்டாகப் பாஸ் பண்ணி, நான் ஏ எல் படிக்கப் போனேன். நடுவிலான் படித்தது போதுமென்று மறித்து விட்டார்கள்.

நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அடுத்த வீடு, ஒரு பங்களா. சுற்று மதில். வீட்டுக்காரர் கொழும்பில் பெரிய உத்தியோகம். ஒவ்வொரு கிழமை இறுதியிலும் மெயில் ரெயினில் வந்து போவார். இரண்டு பெண் பிள்ளைகள். தாயாருடன் இருந்து பெரிய பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்கள். கல்லூரி செல்ல வாடகைக் கார். எங்கள் கண்களில் பட மாட்டார்கள்.

என் தங்கையின் வயதை ஒத்தவர்கள். எப்போதாவது அரிதாக தங்கள் வீட்டுக் கேற்றில் நின்று, எங்கள் வீட்டுக் கேற்றருகே நிற்கும் தங்கையிடம் சில வேளை கதைப்பார்கள். அதுவும் ஒரு சில நிமிடங்கள் தான். கதை முடிவதற்குள் தாயார் பெயர் சொல்லி அழைத்து  விடுவார். அதனால் அவர்களின் பெயர் தெரியும். துணிந்து போய் அவர்களைப் பார்க்கும் தைரியம் இல்லை.

அவர்களின் தகப்பனாரின் கண்களில் தெரியும் இறுமாப்பு கொஞ்ச நஞ்ச தையிரியத்தையும் இல்லாமல் செய்து விடும். அவர்களின் அழகு மனதை சிறுது சலனப் படுத்தியது உண்மை தான். படிக்க வந்த நாங்கள் படிப்பை மட்டும் பார்ப்போமென்று விட்டு விட்டோம். யாழ்ப்பாணத்து வசதி மிக்க கன்னியர்கள் வாடகைக் கார்களில் பெண்கள் கல்லூரிக்குச் செல்வது அப்போது, ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், ஒரு பாஷன்.

என்னடா? இவன் கிழவன் கதையை எழுதுவதாகக் கூறி யாழ்ப்பாணத்துக் கன்னியரைப் பற்றி எழுதுறானே? என்று ஐமிச்சப் படாதீர்கள். அவசரமும் பட வேண்டாம். விசயம் இருக்கிறது.

கடைக் குட்டியைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டேனே? என்று யோசிக்காதீர்கள். எட்டாம் வகுப்புடன் படிப்பிற்கு பாய் கூறி விட்டான். நல்ல உடற் பலசாலி. எல்லோருடனும் வீண் சண்டைக்குப் போவான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சண்டை. அடி, உதை குடுப்பான். அடி , உதை வாங்குவான். எப்போவாவது மேஷன் வேலைக்குப் போவான். தேர்தல்கள் வந்தால் பிரச்சார வேலைகள், அது சம்பந்தமான அடி தடியில் முன்னுக்கு நிற்பான்.

என்னுடைய நண்பனான நடுவிலிக்கும் ஒரு வேலை வந்தது. எமது பக்கத்து வீட்டுச் சீமான் நான்கு சீமைப் பசுக்களை வாங்கினார். அவற்றுக்கு புல், வைக்கல் போடுதல், தவிடு, பிண்ணாக்குக் குழைத்து வைத்தல், சாணம் அள்ளுதல், பால் கறத்தல், காலையும் மாலையும் கறந்த பாலை கடைகளுக்குக் கொண்டு செல்லல் என்று முழு நாள் வேலைகளையும் நடுவிலான் ஓடி, ஓடிச் செய்வான். அவ்வப்போது நின்று என்னுடன் சிறுது நேரம் கதைப்பான். மற்றப்படி காணும் பொது ஒரு சிறு புன்னகை மட்டும்.

அவனை நினைக்கும் போது எனக்கு குற்ற உணர்வாக இருக்கும். எனக்கு படிப்பது, பாடசாலை செல்வது, பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்கு செல்வது, பிற்காலத்தில் பொது நூலகம் செல்வது இவை மட்டும் தான் வேலை. ஓம். முதலாம் குறுக்குத் தெருவிலோ, இரண்டாம் குறுக்குத் தெருவிலோ, யாழ்ப்பாணத்தில் ஒரு பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் அந்நாளில் இருந்தது.

அந்த நாள் யாழ்ப்பான நங்கையரைப் பற்றி மீண்டும் எழுத வேண்டி உள்ளது. மன்னித்து விடுங்கள். ஒரு உத்தரவாதம் தருகிறேன். கதைக்குத் தேவையானதை மட்டும் எழுதுவேன்.

நாங்கள் இருந்த தெருவிலேயே ஒரு ஐந்து, ஆறு  ஏக்கர் மதிக்கத்தக்க காணி உயர்ந்த சுற்று மதிலோடு இருந்தது. அந்தக் காணி உயர்ந்த பல மரங்கள் மா, பலா, தென்னை நிறைந்த சோலை. மதில் மேல் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப் பட்டிருக்கும்.

மேற்குப் பக்கம் எங்கள் தெரு. வடக்குப் பக்கம் ஒரு சிறு வீதி. கிழக்குப் பக்கம்  பிரதான வீதி. எங்கள் தெருப் பக்கம் ஒரு பெரிய கேற். அது திறந்திருந்து நான் பார்த்ததில்லை. பிரதான வீதிப் பக்கமாக ஐந்து, ஆறு பெரிய பங்களாக்கள்.  எல்லா வீடுகளிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வாழ்ந்தார்கள். இப்போ, அவை எப்படி இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதி இப்போ இருந்தால் என்ன பெறுமதி? காணியின் பெறுமதி கூற நான் வரவில்லை.

அந்தக் காணியின் வடக்குப் புறமாக அந்தக் குடும்பத்தினருக்கென்றே கட்டப்பட்ட தனிக் கோவில். பிள்ளையாரோ? வைரவரோ? மறந்து விட்டது. “கடவுளை மறந்து விடுவீர்கள், கன்னியரை மறக்க மாட்டீர்கள்” என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. குடும்பத்தினர் மட்டும் உள்ளே போய் வணங்குவர். நாங்கள் வெளியாட்கள் கம்பிக் கேற்றுக்கு வெளியே நின்று வணங்கலாம்.

அந்தக் குடும்பத்திலும் நிறைய பெண்பிள்ளைகள். ஆண் பிள்ளைகள் குறைவு. ஆண் பிள்ளைகளில் ஒருவன் என்னுடன் “சாம்” மாஸ்டரிடம் “கெமிஸ்றி” யும் “லோரன்ஸ்” மாஸ்டரிடம் “மற்ஸ்” சும் ஒன்றாய் படித்தவன். வகுப்பில் நல்லாய் கதைப்பான். கோவிலில் சகோதரிகளுடனும் மச்சாள்மாருடனும் நிற்கும் போது தெரிந்த மாதிரி காட்டமாட்டான். கவனிக்காமல் இருந்து விடுவான்.

8c60ff9e-7855-4709-bdb8-bc4153993b6fWallpAutoWallpaper2கடவுளை வணங்கப் போவோமோ? கன்னியரைப் பார்க்கப் போவோமோ? ஆனால் ஒவ்வொரு நவராத்திரி பூசைக்கும் நானும் என் நண்பர்களும் ஆஜராகி விடுவோம். கம்பிக் கேற்றுக்கு மேலாலை தாற பிரசாதமும் ஒரு காரணமாய் இருக்கலாம். அங்கே நட்சத் திரங்களுக்கு மத்தியிலே ஒரு சந்திரனைப் போல ஒரு பேரழகியும் வருவதுண்டு.

நாங்கள் கிழவரின் கதைக்கு வருவோம்.அவர் நிம்மதியாகச் சாப்பிடுவது அந்த இறைவனுக்குப் பிடிக்கவில்லையோ? என்னவோ?

யாழ்ப்பாணத்தில் இந்நாளிலேயே காதலுக்கு வரவேற்பில்லை. அந்த நாளில் பெற்றோருக்குக் காதல் என்றால் சிம்ம சொர்ப்பனம். காதலிப்பவர்களுக்கு ஒரே தெரிவு. விரும்பியவர்கள் இருவரும் தத்தம் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போவது தான். நான் இது வரை ஒரு விடயத்தைக் கூற மறந்து விட்டேன். குடிசையில் வாழ்ந்தாலும் கிழவரும் மகன்களும் நல்ல தோற்றப் பொலிவு உள்ளவர்கள்.

நவராத்திரி பூசை முடிந்ததும் எங்களுக்கு அந்த அதிர்ச்சி செய்தி கிடைத்தது. மூத்தவன் நாங்கள் கோவிலில் கண்ட அந்தப் பேரழகியைக் கூட்டிக் கொண்டு ஓடி விட்டானாம்.பிறகு தான் அவர்கள் பல்கலைக்கழகத்தில் பல நாட்காதலர்கள் என்று அறிந்தோம். கொழும்பில் வேலை பார்த்ததால் அங்கு ஒரு அறை வாடகைக்கு எடுத்துக் காதலியை மெயில் ரெயினில் கூட்டிச் செல்வது இலகுவாயிற்று. கிழவர் தான் பாவம். புதுக் குடித்தனக்காரன் இனி தகப்பனுக்குக் காசு அனுப்ப எங்கே போவது? பெண் வீட்டார் அப்போதைக்கு பேரழகியைக் கை கழுவி விட்டனர். ஏழைக் கிழவரை சம்பந்தியாக ஏற்க அவர்கள் மனம் துணியவில்லை.

எனக்கும் நண்பர்களுக்கும் எதையோ இழந்தது போலிருந்தது. சரி. எங்கள் படிப்பை நாங்கள் பார்ப்போம். நாட்களும் ஓடின. பரீட்சையும் முடிந்தது. “கெமிஸ்றி”, “பிசிக்ஸ்” இரண்டு பாடங்களும் “பிறக்ரிக்கல் ரெஸ்ட்”  செய்ய அனுமதி கிடைத்து, பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு “பிறக்ரிக்கல் ரெஸ்ட்” செய்யச் சென்று சோதனையையும், “ராக்கிங்” என்ற வாதனையும் முடித்து மீண்டும் வந்தேன். மீண்டு வந்தவனுக்கு மீண்டும் அதிர்ச்சிச் செய்தி. நடுவிலான் தான் மாட்டுப் பண்ணை வேலை செய்த எங்கள் பக்கத்து வீட்டுக் கன்னியைக் கூட்டிக் கொண்டு கொழும்பிற்கு தமயனிடம் ஓடி விட்டான். பக்கத்து வீட்டுக் காரர் உண்மையிலேயே நல்லவர்.

மகளையும் மருமகனையும் அழைத்து வந்து, பதிவுத் திருமணம் செய்ய வைத்து, நடுவிலானை அவன் விரும்பிய பண்ணைத் தொழிலைக் கற்க வெளி நாடு ஒன்றுக்கு அனுப்பி வைத்தார். அவன் பட்டம் பெற்று வந்ததும் மகளை முறைப்படி திருமணம் செய்து கொடுத்தார். சில நாட்களில், வறுமை ஒழிய இருந்த நிலையில் கிழவர்  ஏழையாகவே இறைவனிடம் போய்ச் சேர்ந்தார்.

பொறுங்கள், இன்னும் கதை முடிவுக்கு வரவில்லை.அந்தத் தெருவில் அவர் ஒரு அரசியல் பிரமுகர். அவரது பிரசாரக் குழுவில் கடைக்குட்டி முதன்மையானவன். அந்த அரசியல் பிரமுகர் ஆதரவாக இருக்கும் தலைவரே பெரும்பாலும் எம்பியாக வருவார்கள். நடுவிலான் அவர் சொல்லும் வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பான். போஸ்டர் ஒட்டும் குழுவிற்கு அவனே லீடர். எதிர்க் கட்சிக்காரரின் போஸ்டர்களைக் கிழிப்ப தற்கும் அவனே லீடர். தேர்தல் முடந்தது. பிரமுகரால் ஆதரிக்கப் பட்டவர் எம்பியாக வெற்றி பெற்றார். வெற்றிக் களிப்பு முடிந்த ஒரு நாட்காலை பிரமுகர் எழுந்து பார்த்த போது அவரது பட்டதாரி மருமகளைக் கடைக்குட்டி கூட்டிக் கொண்டு ஓடி விட்டான்.

பிறகு என்ன? பேரப்பிள்ளைகள் பிறந்ததும் எல்லாக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்தனர். மனைவிமாரின் பணத்தில் மகன்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். கிழவர் பெரிதான படத்தில் சிறந்த பிறேமில் மூன்று வீடுகளிலும் புன்னகையுடன் காட்சியளிக்கின்றார்.

 

 

 

நிறைவு……

 

 

 

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வு நிலை அதிபர்

 

 

 3 thoughts on “சிறுகதை | ஒரு கிழவரும் மூன்று மகன்களும் | மகாலிங்கம் பத்மநாபன்

  1. உண்மைக் கதையோ கற்பனைக் கதையோ மிகவும் நகைச்சுவையுடன் கதாசிரியர் எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்.

  2. இது உண்மைக் கதையல்ல. முழுவதும் கற்பனை யுமில்லை என்று எழுதினாலும்
    இரண்டும் கலந்து, நேரில் சொல்வது போல வித்தியாசமான நடையில் கதை எழுதப்பட்டிருக்கிறது வாசிக்க சுவாரசியமாக இருந்தாலும், முடிவும் மனதைத் தொடுகிறது.

  3. உண்மை பாதி கற்பனை பாதி என எழுதப் பட்ட இக் கதையின் கரு நன்றாக இருக்கிறது. யதார்த்தமான கதை அமைப்பு. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்று வாசிக்கும் போது அன்றைய நிலைமையை எங்கள் கண் முன்னே கொண்டு வந்தது போல் இருந்தது.

Leave a Reply to Vimalparam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *