எதிர்பார்ப்பு | சிறுகதை | தாமரைச்செல்வி


ஒரு விஷயம் சொல்ல வேண்டும். கயலுக்காக காத்திருக்கிறேன். அவள் வேலை முடிந்து வர எப்படியும் ஏழு மணியாகி விடும். மனதுக்குள் என்னமோ நெருடிக் கொண்டிருக்கிறது.

எந்த விதமாக அவளுக்கு இதைச் சொல்வது…..  நான் சொன்னதும்   மறுபடியுமா அப்பா… என்று சலித்துக் கொள்வாளோ…

தேசம் விட்டு தேசம் வந்தாலும் பெண்ணின் திருமணம் என்பது பிரச்சனைக்கானதுதானா…. எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது. மறுபடி ஒரு ஆரம்பம் என்று நினைத்தேன். நல்லதாய் எல்லாம் நடக்கவேண்டும் என்ற ஆவலுக்கும் போன தடவை மாதிரி ஆகிவிடுமோ என்ற பதட்டத்துக்கும் இடையே மனசு கிடந்து அல்லாடியதற்கு ஒரு முடிவு வந்து விட்டது.

குகதாசன் சொல்வதும் சரிதான். இங்கே வளரும் பிள்ளைகள் கதைத்து பழகி மனசுக்குப்  பிடித்தால் தான் கல்யாணம் செய்ய சம்மதிக்கிறார்கள்.  பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். பிறதேசம் வந்தாலும் இந்த ஊருடன் ஒத்துவாழ முனைந்தாலும் மனதின் அடியில் ஊறிப் போயிருந்த எங்கள் மண்ணின் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட முடியாமல்தான் இருக்கிறது.  இங்கே பெண்ணின் திருமணம் பயமுறுத்தும் விஷயமாய் மாறிவிட்டது.

இப்படியான நேரங்களில் நந்தினியின் நினைவு ஆதங்கத்தோடு எழுந்து நிற்கும். அவள் இருந்தால் நான் இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டியதில்லை . மூன்று வருஷத்துக்கு முன் இப்படித்தான் ஒரு மாலை நேரம் மயங்கி விழுந்த நந்தினியை சிட்னி வெஸ்ற்மீற் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்திருந்தோம். பத்து மணி நேர சிகிச்சை பலனின்றி எம்மை விட்டு பிரிந்து போனாள். மாரடைப்பு என்றார்கள். அன்பைத்தவிர வேறு ஏதும் அறியாத பெண் .அந்த இதயத்துக்குள் அடைப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை.

அவுஸ்திரேலியாவுக்கு திருமணமாகி வந்த இரண்டாவது வருடத்தில் பிறந்தவள்  கயல்.  ஒரே பெண்ணை நல்ல விதமாக வளர்த்ததில் நந்தினிக்கே முழுப்பங்கும் இருந்தது. இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தாலும் கயல் அத்தனை அழகாக தமிழ் கதைப்பாள். தமிழ் பாடசாலைக்கு கூட்டிப் போவதும் கலை நிகழ்வுகளில் பங்கு பற்ற வைப்பதும் வீட்டில் இருக்கும் போது முழுக்க முழுக்க தமிழில் கதைப்பதுமாக நந்தினிதான் பார்த்துப் பார்த்துக் கவனிப்பாள். கயலை  தைரியம் கொண்ட பெண்ணாகத்தான் வளர்த்திருந்தாள் .

நந்தினி பிரிந்த நேரம் உலகமே இடிந்தது போன்ற துயரத்தில் இருந்த என்னை  தைரியம் சொல்லி மீண்டெழ வைத்தது கயல்தான். நானும் கயலுமான எங்கள் உலகத்தில் ஒரு தாயின் பரிவோடு என்னை கவனித்துக்கொண்டவள் அவள். போன ஏப்ரலில் குகதாசன் வந்து முதல் தடவையாக கல்யாணப் பேச்சை எடுத்த போது,

“ஐயோ அங்கிள் எனக்கு இப்ப எதுக்கு கல்யாணம். இப்பதான் யூனிவர்சிற்றி முடிச்சு வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கிறன். நாலைஞ்சு வருஷம் போகட்டும்.”

என்று சொல்லி விட்டாள். எனக்குத் தெரியும்  தான் போய் விட்டால் அப்பாவை யார் கவனிப்பது என்ற கலக்கம் அவள் மனதில் இருந்திருக்கும்…..       அதற்காக பெண்ணை என்னோடு எவ்வளவு நாள் வைத்திருக்க முடியும்… என்றோ ஒரு நாள் அந்த பிரிவு நிகழத்தான் போகிறது. அதற்கு நான் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.  ஏப்ரலில் முதல் தடவையாக குகதாசன் பேசிய சம்பந்தம் சரிவரவில்லை.  கன்பராவில் இருப்பவர்கள். குகதாசனுக்கு தெரிந்தவர்கள் மூலம் வந்த சம்பந்தம். பெடியன் எஞ்சினியராய்  வேலை செய்யுதாம்.

“கயலோட கதைக்கவேணும் எண்டு பெடியன் கேட்குதாம்.”   என்று குகதாசன்  என்னைக் கேட்டபோது கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.

“இப்பத்த பிள்ளையள் கதைச்சுப் பார்க்காமல் செய்ய வராதுகள். கதைச்சுப்பழகி பிடிச்சிருந்தால் தான் ஓம் எண்டு கலியாணம் செய்யுங்கள். ஊரோட ஒத்ததாய் போச்சு. நாங்கள் மட்டும் மறுக்க ஏலுமே.”

குகதாசன் சொல்வதிலும் உண்மை இருக்கத் தான் செய்தது.

ஒரு மாதம் கயலோடு போனில் கதைத்து ஒரு தடவை நேரிலும்  வந்து சந்தித்த பின் தனக்கு விருப்பமில்லை என்று அந்தப் பையன் சொன்ன போது  வருத்தமாக இருந்தது.

“கயலை பிடிக்கேலை எண்டால் என்ன காரணமாம்.”  குகதாசனிடம் கேட்டேன்.

“கயலின்ர குணம் தனக்கு ஒத்து வராதாம். கயல் கல கலவெண்டு கதைக்கிறாளாம். தான் நினைச்சதை செய்யிற பிடிவாத குணம் இருக்காம். இப்பிடி றாங்கியாய் இருக்கிற பிள்ளை தன்னோட ஒத்து நடக்காதாம்.. அந்தப் பெடியனின்ர காரணங்கள் அது. அதை விட்டுத் தள்ளு. பெடியளுக்கு தங்களை மிஞ்சி பொம்பிளை இருந்திடக் கூடாது  எண்ட நினைப்பு. இந்த இடம் போனா போகட்டும். நாங்கள் வேற இடம் பாப்பம்.”

குகதாசன் சமாதானமாகச் சொன்னாலும் மனதுக்குள் இருந்த வருத்தம் மாறாமலே இருந்தது.      ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையும் தைரியமும் அகம்பாவம் என்று எடுத்துக்கொள்ளப்படுமா.. புரியவில்லை… எனக்குத்தான் கவலை இருந்தது. கயல் அதைப்பற்றிய எந்தப் பாதிப்பும் இல்லாமல் இயல்பாக இருந்தாள். வழமை போல் வேலைக்குப் போய் வந்தாள். இரவில் அவளுக்கு பிடித்தமான சாப்பாட்டை அவள் வருவதற்கு முன் செய்து வைத்து விடுவேன். தாங்ஸ் அப்பா என்று சொல்லி ரசித்து சாப்பிடுவாள். தொலைக்காட்சி பார்ப்பாள். அலுவலகத்தின் வேலை தொடர்பான பல விஷயங்கள் பேசுவாள். ஒன்பது மணிக்கு மேல்  “படுக்கப்போறன் அப்பா குட்நைற்” என்று சொல்லி தன் அறைக்குப் போவாள். ஒரு மணி நேரத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டுக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்.  நான் தான் இவளை நினைத்து கொஞ்சம் அதிகமாக குழம்பிப் போகிறேனோ என்று தோன்றியது.

என் மனதுக்குள் ஏதும் வருத்தங்கள் இருந்தால் சிட்னி முருகன் கோவிலுக்கு போய் அமைதியாய் இருந்து விட்டு வருவேன். வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிப் பூஜையில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனோ அந்த நேரம் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைப்பது போல் உணர்வேன். அன்றும் ஒரு வெள்ளிக்கிழமை…..  கோயிலுக்கு போனபோது  செந்தில்நாதனைப் பார்த்தேன் . அவர் நந்தினியின் தூரத்துச் சொந்தம். மாமா முறை.  நந்தினி  இருந்த போது வீட்டுக்கு வந்திருக்கிறார். பின்னர் இப்படி எங்காவது பார்த்தால் நின்று நலம் விசாரித்துக் கொள்வார் . கோவில் பூஜை முடிந்து மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு வெளி வாசலுக்கு வந்த போது என்னைப் பார்த்து விட்டு வந்து கதைத்தார்.

“கயலுக்கு கனபராவில கலியாணம் பேசினீங்களாம். அது சரி வரேலை எண்டு அறிஞ்சன்.”

எனக்குத் ‘திக்’ என்றது.   இவர் வரைக்கும் கதை போயிருக்கிறதா….. என்ற குழப்பத்துடன்  ‘ம்’  என்று தலையசைத்தேன்.

“அவையள் என்ர மிஸிஸின்ர சொந்தக்காரர்தான். அவையள் இதுக்கு முந்தியும் ரெண்டு இடத்தில கலியாணம் பேசி பெடியன் ஒவ்வொருதரோடயும் கதைச்சு கதைச்சுப் பார்த்து பிறகு பிடிக்கேலை பிடிக்கேலை எண்டு சொல்லியிட்டுதாம். கயலைப் பேசினது முதலே தெரிஞ்சிருந்தால் நான் மறிச்சிருப்பன். ஒரு சொல்லு எனக்குச் சொல்லேலை பாருங்கோ”

நான் பேசாமல் கோயில் வாசலைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

“இப்பத்த பெடியள் கதைச்சுக் கதைச்சு என்னத்த கண்டு பிடிக்குதுகளோ தெரியேலை. ஏன்பாருங்கோ  பொம்பிளைப் பிள்ளையளும் சில இடங்களில அப்பிடித்தான். பிள்ளையளைப் பெத்த நாங்கள் இப்பவெல்லாம் வெறும் பார்வையாளர்கள்தான். முடிவெடுக்க ஏலாது. இதுதான் இப்ப உள்ள நிலமை.சரி. நான் வாறன். எங்கையாவது நல்ல இடம் இருந்தால் சொல்லுறன்.”

என்று சொல்லி அவர் போன பின்பும் சிறிது நேரம் அந்த வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன் .முருகா நீதான் ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்று மனசு வேண்டியது.

நாலைந்து மாதங்கள் அமைதியாய் நகர்ந்த பின் திரும்பவும் ஒரு சம்பந்தம் குகதாசன் மூலம் வந்தது. சிட்னியில் ஹோம்புஷ்ஷில் இருந்தார்கள். அரை மணி நேரத் தூரம்தான்.

“ஒருக்கா எல்லாரும் சந்திக்கலாமோ எண்டு அவையள் கேக்கினம். “

எனக்கும் அது சரி என்று தோன்றியது.

“எங்க சந்திக்கலாம். ஏதும் சொன்னவையே.”

“ஹோம்புஷ்ஷில பேர்லிங்டன் றோட்டில இருக்கிற  ஜனனி ரெஸ்ரோரண்டில வாற ஞாயிற்றுக்கிழமை  பின்னேரம் சந்திக்கலாமாம். உங்களுக்கும் ஓக்கே எண்டால் அவையிட்ட சொல்லி விடுறன்.”

“சரி. சந்திப்பம்”

“அந்தப் பையன் நிரஞ்சன் தான் கயலோட கதைச்சுப் பார்க்க வேணும் எண்டு சொன்னதாம்.”

இதைக்கேட்டதும் மனதுக்குள் ஒரு வித பய உணர்வு……

“கதைச்சாப்பிறகு போன தடவை மாதிரி வந்திட்டால் என்ன செய்யிறது…”

“நெடுகவும் ஒரே மாதிரி நடக்கப் போகுதே. இப்ப உள்ள நிலமையை ஒத்துத்தான் நாங்களும் நடக்க வேணும்.எங்கட காலம் மாதிரி இப்பவும் இருக்குமோ சொல்லுங்கோ.. நீங்கள் யோசிக்காதேங்கோ.. கதைக்கட்டுமன் பார்ப்பம்.”

எனக்கு என்னமோ யோசனையாகத்தான் இருந்தது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்குப்பிறகு  மனதுக்குள் ஒரு வித நம்பிக்கை ஏற்பட்டது உண்மைதான் . தாய் தகப்பனைப் பார்க்க நல்லவர்களாகத் தெரிந்தார்கள். அந்தப் பையன் நிரஞ்சன் வந்து என் கைகளைக் குலுக்கி இயல்பாய்க் கதைத்த போது நல்ல பிள்ளை என்றே தோன்றியது.

அதன் பிறகு கயலுடன் தொலைபேசியில் கதைக்கத்தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிய போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது.

அளவாய் கதைத்துக்கொள் கயல் . கலகலப்பாய் இருக்கிறது கூட பலருக்குப் பிடிக்கிறதில்லை.

என்று கயலிடம் சொல்லலாமா என்று கூட யோசித்தேன். ஆனால் சொல்ல வாய் வரவில்லை .

அவளின் இயல்பிலிருந்து அவள் ஏன் மாறவேண்டும்.

இரண்டு மாதத்துக்கும் மேலாகியது. எந்த வேலையிலும் ஈடு பட முடியாமல் மனம்  தத்தளித்துக் கொண்டிருந்தது.

நான் குகதாசனிடம். “அவையள் ஒரு முடிவும் சொல்லேலை. இப்பிடியே  கதைச்சுக் கொண்டிருக்கிறதும் சரியில்லை. என்ன முடிவு எண்டு ஒருக்கா கேட்டுப்பாருங்கோ.”  என்றேன்.

“தாய் தகப்பனுக்கு கயலைச் செய்ய நல்ல விருப்பம். பெடியன்தான் இன்னும் கொஞ்ச நாளில தன்ர முடிவைச் சொல்லுறன் எண்டு  சொல்லுதாம். . கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ .தம்பி முடிவைச் சொல்லட்டும் எண்டு சொல்லுகினம். கொஞ்ச நாள் பார்ப்பம்.”

குகதாசன் என்னவோ தைரியமாகத்தான் சொன்னார். எனக்குத்தான் ஒரே மனக்குழப்பமாக இருந்தது. அன்று இரவு சாப்பிடும் போது “எப்பிடி கயல் …நிரஞ்சன் என்னவாம்”  என்று பொதுவாக கேட்டேன்.

“நான் அதிகம் கதைக்கிறேலை அப்பா. நிரஞ்சன் இடைக்கிடை  எடுத்துக் கதைப்பார்.  தன்ர அக்காவின்ர மகளின்ர  பேர்த்டேக்கு என்னை பிரிஸ்பேர்னுக்கு வரச்சொல்லிக் கேட்டவர். நான் வரேலை எண்டு சொல்லியிட்டன். பிறகு இப்ப இங்க சிடனியில  நியூஇயர் பார்ட்டிக்கும்  வரச் சொல்லி கேட்டவர். நான் போகேலை.”

கயல் சொல்லிக்கொண்டே போனாள். கயல் நிதானமாகத்தான் நடந்து கொள்கிறாள் .சரிபிழைகளை தீர்மானிக்கத் தெரிந்த பெண். ஆனால் பெற்ற மனம்தான் பதகளிப்படுகிறது.

ஒரு முடிவுக்கு வருவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் அந்தப் பையனுக்குத் தேவைப்படும். ஒவ்வொரு நாளும் நகர்வது பெரும்பாடாய் இருந்தது .எந்த முடிவையாவது சொல்லி விட்டால் நல்லது போலிருந்தது.  இந்த தவிப்பு மிச்சமாகுமே.

இன்று மாலை ஐந்து மணியளவிலேயே வீட்டுக்கு வந்து விட்டேன். கைபேசியில் இரண்டு தடவை குகதாசன் அழைத்திருந்தார். பார்த்து விட்டு அவருக்கு எடுத்தேன்.  அவர் சொன்ன விஷயம் எல்லா தவிப்புக்கும் முடிவைச் சொல்லி விட்டது.  உடைகளை மாற்றி விட்டு தேனீர் போட்டுக் குடித்தேன். கயலுக்குப் பிடித்த நூடில்ஸ் செய்து வைத்தேன். சோபாவில் அமர்ந்து கயலுக்காக காத்திருக்கிறேன் .

ஏழரை மணி கடந்த போது கயல் வந்தாள். களைத்துப்போய் வந்தவள் குளித்து விட்டு சாப்பிட வந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு சாப்பிட்டோம்.

“நூடுல்ஸ் நல்லாய் இருக்கப்பா.தாங்ஸ்.”  என்று ரசித்து சாப்பிட்டாள்.  கை கழுவி விட்டு பாத்திரங்களை கழுவி அடுக்கி வைத்து விட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தாள்.

எப்படி சொல்வது…..  அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ….. என்ற கவலையோடு  அவள். முகத்தைப் பார்த்தேன்.

“என்னப்பா ….ஏதும் விஷயமா….யோசிச்சுக்கொண்டிருக்கிறீங்கள்…” என்று திரும்பிக் கேட்டாள். நான் தயக்கத்துடன்”   குகதாசன் அங்கிள் போன் பண்ணினவர் கயல்.”  என்றேன்.

“என்னவாம்?” பார்வையை தொலைக்காட்சியில் பதித்தபடி கேட்டாள்.

“அது ….. நிரஞ்சன்ர விஷயம….. அது சரி வரேலை.”

“ம். ஓக்கே. “

“தாய் தகப்பனுக்கு விருப்பம்தானாம். ஆனா என்னமோ நிரஞ்சனுக்கு பிடிக்கேலையாம்.”

“அப்பா அதை ஏன் கவலையோட சொல்லுறீங்கள்.”

“உனக்கு…..”

“எனக்கென்னப்பா. சரி அதை விடுங்க. .ஏன் பிடிக்கேலை எண்டு காரணம் சொல்லேலையாமா”

“நீ அவ்வளவாய் கதைச்சுப் பழகிறாயில்லையாம். பத்து விஷயம் தான் கதைச்சால் நீ ஒரு விஷயம் கதைக்கிறியாம். இப்ப இருக்கிற சூழலுக்கு ஏற்ற மாதிரி நாகரீகமாய் பழக தெரியேலையாம். உன்ர குணங்கள் தனக்கு சரி வராதாம். அதாலதான் தனக்கு…”

“வேண்டாம் எண்டு சொன்னதாக்கும். ஓக்கே அப்பா பரவாயில்லை.. விடுங்கோ.”

மெல்லிய சிரிப்புடன் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

“கொஞ்சம் ஜூஸ் குடிக்கப்போறன்.  நீங்களும் குடிக்கிறீங்களா.”  என்று கேட்டு எழுந்து நடந்தவள் நின்று திரும்பிக் கேட்டாள்.

“நான் கலகலப்பாய் கதைச்சுப் பழகிறன் எண்டு முதல்ல வந்தவனுக்குப் பிடிக்கேலை. நாகரீகமாய் பழகத் தெரியாமல் அமைதியாய் இருக்கிறன் எண்டு இப்ப வந்தவனுக்கு பிடிக்கேலை. அப்ப நான் எப்பிடி அப்பா இருக்கிறது சொல்லுங்கோ.”

விடை சொல்ல முடியாத கேள்விதான். ஆனாலும் ஒன்று மட்டும் தெரிந்தது.  கயல் கயலாக இருப்பதே போதுமானது. இவளின் இயல்பை விரும்பக் கூடிய யாராவது ஒருவன்  வராமலா  போகப் போகிறான்.

 

நன்றி:   “ஞானம்” மாத இதழ்  ஜனவரி.  2018.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 17 =