என் பொண்டாட்டிக்குப் புரியும்படியா சொல்லுங்க! | குட்டிக் கதை


ஒரு நாள் சங்கரன்பிள்ளை மது அருந்துவதற்காக நண்பர்களுடன் பாருக்குச் சென்றார். அன்று வழக்கத்தைவிட அதிகமாக மது அருந்திய சங்கரன்பிள்ளை நிதானம் இழந்து அங்கிருந்த கண்ணாடி டம்ளர்களைப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.

பிறகு, நண்பர்களின் உதவியால் அங்கிருந்து வெளியேறிய சங்கரன் பிள்ளை, வழியெங்கும் பல கலாட்டாக்களை நடத்திவிட்டு கடைசியாகத் தனது தெருவில் செல்லும்போது பெண்களையும் வம்புக்கு இழுக்க ஆரம்பித்தார்.

சங்கரன் பிள்ளையின் இதுபோன்ற செயல்களால் ஏற்கெனவே வெறுப்படைந்திருந்த தெருமக்கள் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் போய் நிறுத்தினர். அடிக்கடி இப்படி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதால், நீதிபதிக்கு சங்கரன்பிள்ளை நன்கு அறிமுகமாகி இருந்தார். வழக்கை தீர விசாரித்த நீதிபதி, “என்ன சங்கரன் பிள்ளை, அடிக்கடி இப்படி வந்துவிடுகிறீர்களே, இந்த பாழாய்ப்போன மதுதானே இவ்வளவுக்கும் காரணம்“ என்று கூற ஆரம்பித்தவுடனேயே, குறுக்கிட்ட சங்கரன்பிள்ளை, “நீதிபதி அவர்களே, நீங்கள் மிகவும் நல்லவர், நேர்மையானவர். இந்தத் தவறுகளுக்கெல்லாம் காரணம் மதுதான் என்பது உங்களுக்குத் தெரிகிறது. ஆனால், என் மனைவி இதைப் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறாள். எதற்கெடுத்தாலும் நீதான் காரணம் என்று என்னையே திட்டிக்கொண்டு இருக்கிறாள்” என்று புலம்ப ஆரம்பித்தார்.

சங்கரன்பிள்ளைக்குப் புற்றுநோய் வந்து படுத்த படுக்கையில் இருந்தார். அவர் இனி பிழைக்க முடியாது என்று மருத்துவர்களும் நாள் குறித்து விட்டனர். சங்கரன் பிள்ளைக்கு பங்குப் பத்திரங்கள், வீடு, நிலம், எஸ்டேட் என்று ஏராளமான சொத்துக்கள் இருந்தன. அவர் நன்றாக நடை உடையுடன் இருந்தபோதே அனைத்தையும் மனைவி பெயருக்கு உயில் எழுதியிருந்தார்.

இப்போது, இறக்கும் தறுவாயில் மீண்டும் அந்த உயிலில் திருத்தம் செய்ய விரும்பினார். எனவே வழக்கறிஞரை வரவழைத்து அவர் முன்னிலையில் அந்த உயிலின் கடைசியில், ‘என் சொத்துக்கள் அனைத்தும் என் மனைவிக்குத்தான் போய் சேர வேண்டும், ஆனால் நான் இறந்து 6 மாதத்திற்குள் அவள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அவர் அந்த சொத்தை அனுபவிக்க முடியாது’ என்று புதிதாகச் சேர்த்து எழுதினார்.

இதைப் படித்த வழக்கறிஞர், “அனைத்து சொத்துக்களையும் உங்கள் மனைவிக்குத்தான் கொடுக்கிறீர்கள், பின் ஏன் இந்த புதிய நிபந்தனை?” என்று கேட்டார். அதைக் கேட்ட சங்கரன்பிள்ளை சொன்னார், “நான் செத்துவிட்டேனே என்று ஒரு ஜீவனாவது வருந்த வேண்டும்!”

 

 

 

நன்றி : இன்று ஒரு தகவல் | தமிழ் நேசன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *