வானம் வசப்படுமா…….! | சிறுகதை | விமல் பரம்


 

அம்மாவோடு கதைத்து ஒரு கிழமையாகிவிட்டது. அதன் பிறகு வேலைக்குப் போகவில்லை. என் அறையிலேயே அடைபட்டுக் கிடந்தேன். வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது. சொந்த ஊர் விட்டு சிட்னிக்கு வந்து இவ்வளவு காலமும், கஷ்டப்பட்டதுக்கு பலனில்லாமல் போனது போல் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவிட்டேன் என்று எவ்வளவு பெருமைப்பட்டேன். எல்லாம் அம்மா என்னிடம் கேட்ட அந்த கேள்வியில் அடிபட்டு போய்விட்டது.

என்னைப் பார்த்து அம்மாவா…. இப்படிக் கேட்டாள் என்று நினைத்து நினைத்து மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.

அதன் பிறகு அம்மா நாலைந்து தடவை போன் பண்ணியும் நான் எடுக்கவில்லை.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. படுக்கையைவிட்டு எழுந்துபோய் கதவைத்திறந்தேன்.

பாபு , கோபி, மகேஷ் , ரவி எல்லோரும் கதவுக்கு அருகில் நின்றிருந்தார்கள். துங்காபியில் நாலு அறைகள் உள்ள இந்த வீட்டில் என்னோடு இருப்பவர்கள்.

“ எந்த நேரமும் கதவைப்பூட்டிக்கொண்டு என்ன செய்யிறாய் . ஏன் முகமெல்லாம் வாடிக்கிடக்கு. சுகமில்லையா. காலமையும் சாப்பிட வரேல. சாப்பிடப் போறம் வாறியா . ” என்றார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டிலிருக்கிறார்கள்.

“தலையிடிக்குது . பசிக்கேல நீங்கள் சாப்பிடுங்கோ “ என்று சொல்லியும் கேளாமல் சாப்பாடு கொண்டுவந்து தந்தார்கள். சாப்பிட மனமில்லாவிட்டாலும் அவர்களுக்காக சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தேன்.

படுக்க மனம் வரவில்லை. ஜன்னலோரமாக நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். குளிர்காலமானதால் சூரிய வெளிச்சமில்லை. நாலுமணிக்கே வானம் இருண்டுபோயிருந்தது. மின் விளக்குகள் ஆங்காங்கே மின்னிக்கொண்டிருந்து.

இந்த குளிர் பனி பாராமல் ,வெயில் மழை பாராமல், இரவு பகல் பாராமல் உழைக்க வேணும், காசு சம்பாதிக்க வேணும் எண்ட வெறியில் ஓடி ஓடி உழைத்தேனே… பதினெட்டு வயசில வந்து உழைக்கத்தொடங்கி எவ்வளவு கஷ்டப்பட்டேன். எனக்கு கஷ்டமென்று ஒருநாளும் அம்மாவிடம் சொன்னதில்லை. என் செலவு போக, கடனையும் கொடுத்து முடிக்காமல் உழைப்பு முழுவதையும் அனுப்பினேனே… பொறுப்புக்களை முடித்துவிட்டு எனக்காக சேமிக்க வேண்டும் என்று நினைத்ததால் தானே அம்மா என்னிடம் அந்தப் கேள்வியைக் கேட்டாள்.

அன்று அம்மா கேட்டது திரும்ப திரும்ப நினைவில் வந்து மனதை நோகவைத்தது.

போன் அடிக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அம்மாவிடமிருந்து போன். எடுக்கவில்லை. சிறிது நேரம் அடித்துவிட்டு ஓய்ந்தது. வந்து கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டேன். முன்பு அம்மாவிடமிருந்து போன் வந்தால் சந்தோஷத்துடன் ஓடிவந்து எடுப்பது நினைவு வர கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

அம்மா எங்களோடு நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறாள். குடிப்பழக்கமுள்ள அப்பாவின் உழைப்பில் பாதிதான் வீட்டுச்செலவுகளுக்கு வரும். காசு கொடுத்ததோடு தன் பொறுப்பு தீர்ந்தது என்று அப்பா இருந்துவிடுவார். அம்மாதான், போதாததற்கு வீட்டில் மரக்கறிகள் வைத்தும் கோழிகள் வளர்த்தும் கஷ்டப்பட்டு சமாளித்து எங்கள் நால்வரையும் வளர்த்தாள்.

சமாளிக்க முடியாத நேரங்களில்,

“ இப்பவே இவ்வளவு கஷ்டமெண்டால் மூண்டு பொம்பிளைப்பிள்ளைகளை வைச்சிருக்கிறன். அதுகளை கரையேத்த நான் என்னசெய்வன்” என்று அடிக்கடி புலம்புவாள்.

அதுக்கு அப்பாவிடமிருந்து உடனும் பதில் வரும்.

“ அதுக்குத்தான் ஒரு பொடியனை பெத்து வைச்சிருக்கிறியே “ என்பார்.

“ அந்த தைரியத்தில தான் நானிருக்கிறன். என்ர பிள்ளை வளந்து எங்களைப் பாக்கும். இப்பிடியென்னை கலங்கவிடாது “ என்பாள்.

அம்மா இப்படி சொல்லும் போதெல்லாம் அம்மாவின் முகத்தில் தென்படும் ஆதங்கமும், எதிர்பார்ப்பும் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அம்மாவை சந்தோஷமாய் வைத்திருக்கவேணும் என்ற ஆசையும் என் கூடவே வளர்ந்து வந்தது.

நான் ஏ.எல் படித்துக்கொண்டிருந்த நேரம் அம்மாவின் பெரியப்பாவின் மகன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஊருக்கு வந்து எங்களோடும் ஒரு கிழமை தங்கியிருந்தார்.

அப்பாவின் பொறுப்பில்லாதன்மையையும் அம்மா படும் கஷ்டங்களையும் பார்த்து கவலைப்பட்டவர்,

“ சிவகாமி, மதனின் படிப்பு முடியட்டும். நான் அவனை அவுஸ்திரேலியாவுக்கு வர உதவி செய்யிறன். அவன் வந்திட்டால் உழைச்சு உங்களைப்பாப்பான். நீ கவலைப்படாத “ என்றார்.

மாமா சொன்னது கேட்டு அம்மா சந்தோஷப்பட்டாள்.

இரவு முழுக்க அம்மா நித்திரை கொள்ளவில்லை. யோசனையிலிருந்தாள். அடுத்தநாள்

“ அண்ணை நீங்கள் சொன்னபடியால கேக்கிறன். தம்பிக்கு இந்த வருசத்தோட ஏ.எல் முடிஞ்சிடும். தொடர்ந்து படிப்பிக்க கஷ்டமண்ணை. இப்பவே கூப்பிடுங்கோ. இப்ப போய் உழைச்சு அவன் காலூண்ட இதுகளுக்கும் வயசு வந்திடும்.” என்றாள்.

“ கூப்பிடுங்கோ எண்டால் உடன கூப்பிடேலாது. முதல் “விசா” எடுக்கவேணும். இப்ப படிக்கிறவனை குழப்பாதை. படிச்சு முடிக்கட்டும். “ஸுடண்ஸ்” விசாவில கூப்பிட்டால் ரிக்கற் செலவு குறைவாயிருந்தாலும் அங்க போய் படிக்கவேணும். அவன் எப்பிடி உழைச்சாலும் படிப்புக்கே போயிடும். அங்கத்த “விசா” எடுக்குமட்டும் படிக்கவேணும் இல்லாவிட்டால் திருப்பியனுப்பி போடுவான். “ என்றார்

“ வீட்டுக்கஷ்டத்தில அனுப்பிறன். படிக்காமல் உழைக்கேலாதே “ என்றாள் அம்மா. “ஏஜென்சி ” மூலம் கூப்பிடலாம். அதுக்கு “விசா” எடுக்க லட்சக்கணக்கில முடியும்.” என்றார்.

“ அண்ணை, காணி இருக்கு. அதை வித்து காசு தாறன். காணாததுக்கு நீங்கள் போடுங்கோ இல்ல வட்டிக்கு வாங்கியெண்டாலும் இந்த உதவியை செய்து விடுங்கோ. அவன் வந்ததும் உழைச்சு எல்லாகடனையும் குடுத்திட்டு எங்களைப் பார்க்கட்டும்.” என்றாள் அம்மா அவசரமாய்.

“ கொழும்பில எனக்கு தெரிஞ்ச ஒராள் இருக்கு. நான் போகேக்க அவனோட கதைச்சுப் பாக்கிறன். “ போகும் போது சொல்லிவிட்டுப் போனார்.

அம்மாவும் காணியை வித்து அனுப்ப மாமா சொன்னமாதிரியே கதைத்து ஒழுங்குகளைச் செய்தார். “விசா” கையில் வந்தபோது சந்தோஷத்தை விட செலவழித்த லட்சங்கள் தான் கண்முன்னே வந்து பயமுறுத்தியது. அம்மாவோ தன் கஷ்டமெல்லாம் தீர்ந்தது என்று சந்தோஷப்பட்டாள்.

ஊரை விட்டு புறப்பட்டபோது அம்மா சொன்னது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

“ சின்னவயசில உன்னை அனுப்பிறன் எண்டு கவலைப்படாதேயப்பு. முதல் போய் உன்னைப் பார்த்துக்கொள். பிறகு மாமாவின்ர கடனைக் குடுத்திட்டு தங்கச்சிமாரைப் பாரு. அதுகள் உன்னைத்தான் நம்பியிருக்குதுகள். எனக்கு உன்னை விட்டிட்டு இருக்கிறதை நினைக்க கவலையாயிருக்குதடா “ அழுது கொண்டே வழியனுப்பிவைத்தாள்.

நிறைய கனவுகளோடும் , எதிர்பார்ப்புகளோடும் வந்து சிட்னியில் இறங்கினேன். என்ன செய்யப்போகிறேன் என்ற திகைப்பும், அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவேனா என்றதவிப்பும் என்னைக் கலங்க வைத்தது. மாமாதான் ஆறுதல் சொன்னார்.

“ கொஞ்சநாள் எங்களோட இரு. இங்கத்த “விசா” எடுக்க ஆறுமாதமோ ஒருவருசமோ செல்லும்.அதுவரைக்கும் எங்கட தமிழ்கடைகளில தான் வேலை செய்யவேணும். இடங்கள் பழகினபிறகு தனிய போகலாம்” என்று சொல்லி என்னைக் கூட்டிப் போய் இடங்களைக் காட்டி என் பயத்தைப் போக்கினார்.

மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு மரக்கறிக்கடையில் வேலையெடுத்து அருகில் அறையும் எடுத்துக்கொண்டு போனேன்.

வேலை தந்தாலும் விசா இல்லையென்றதால் சம்பளத்தை குறைத்து தந்தார்கள்

அறை வாடகைக்கும், சாப்பாட்டு செலவுக்குமே சரியாகயிருந்தது.எப்படி கடனைக் கொடுத்து முடிப்பது என்று திகைப்பாகயிருந்தது.

மாமாவிடம் சொன்னேன்.

“ முதல் இப்பிடித்தானிருக்கும். இடங்கள் பழகிட்டாய். இனி உன்ர கெட்டித்தனம். வேலை தேடு, கிழமை நாளில வேலை செய். இரவு வேலை செய். உழைக்கத்தானே வந்தனி. நல்லாய் கஷ்டப்படவேணும் “ என்றார்.

வெளிநாட்டுக்குப் போனால் சொகுசான வாழ்க்கை. கஷ்டப்படாமல் நிறைய உழைக்கலாம் என்ற கனவோடு வந்த எனக்கு உழைப்பின் கஷ்டமும் பணத்திற்காகப்படும் துன்பமும் முகத்தில் அறைந்தால் போல் உணர்த்தியது.

வேலை தேடியலைந்து கிடைக்கும் வேலைகளைச் செய்யப்பழகிக்கொண்டேன். சாப்பாட்டுக்கடைகளில் சமையலும் செய்தேன். இறைச்சிக்கடைகளில் கையுறை போட்டு இறைச்சியும் வெட்டினேன். கட்டிடவேலைகளுக்கும் போனேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் காசு சேர்த்து மாமாவின் கடனைக்கொடுக்க தொடங்கலாமென்று நினைத்து மாமாவிடம் போனேன்

“ முதல் “விசா” எடுக்கவேணும். அதுக்கு வைச்சுக்கொள்” என்று சொன்னார்.

லோயர் மூலம் கேஸ் போட்டு விசா எடுக்க ஒருவருசம் சென்றது.அதற்கும் மாமாதான் உதவி செய்தார்.

வீட்டுக்கு அனுப்பாமல் நாலு வருசம் உழைத்து மாமாவின் பாதிக்கடனைத்தான் கொடுக்க முடிந்தது.

“ இனி என்ர கடனை பிறகு தா. வீட்டுக்கு அனுப்படா. அதுகளின்ர கஷ்டம் கொஞ்சமாவது தீரட்டும்” என்றார் மாமா.

வீட்டுக்கு அனுப்பத்தொடங்க வீட்டுச் செலவுகளும் அதிகமாகிக்கொண்டேவந்தது.

“ முதல் இருக்கிற வீட்டைத் திருத்த வேணும். மழை வந்தால் ஒழுகத்தொடங்கிடும்.

நீ காசு அனுப்ப திருத்தப்போறன்.” என்றாள் அம்மா.

“ உங்களுக்குத் தெரியும் தானேம்மா. பார்த்து செய்யுங்கோ” என்று அனுப்பி வைத்தேன். மூன்று மாதத்துக்கொரு முறை பணத்தை சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தேன்.

ஐந்து வருடங்கள் சென்றிருக்கும்…..

“ வாணிக்குவீடு கட்டவேணும். இப்பவே கொஞ்சம் கொஞ்சமாய் கட்டத்தொடங்கினால்தான் கட்டி முடிச்சு கலியாணம் பேச சரியாயிருக்கும்” என்றாள் அம்மா.

வாணிக்கு, வீடு கட்டி நகைகள் செய்து கலியாணம் செய்துமுடிய எனக்கு பத்து வருடம் எடுத்தது. சந்தோஷமாய் இருந்தது. அம்மாவின் முதல் ஆசையை நிறைவேற்றிவிட்டேன். அதே உற்சாகத்தோடு கலா, மாலாவிற்குத் தேவையான பணத்தையும் சேர்க்கத்தொடங்கினேன். இரண்டு வருடத்தில் கலாவை விரும்பிக் கேட்டு வந்தவர்கள் வீடு வேண்டாம் . அதற்குரிய பணத்தைக்கேட்டார்கள். இருந்த பணத்தோடு கடனும் வாங்கி அவளின் திருமணத்தை நடத்தினேன். அடுத்து நாலு வருடத்தில் மாலாவிற்கும் நடந்தது. அம்மாவின் சந்தோஷத்தைப்பார்க்க சாதித்துவிட்டேன் என்று பெருமையாகயிருந்தது.

ஊரிலிருந்து புறப்படும்போது அம்மா

“ தம்பி, உனக்கும் முப்பத்தினாலு வயசாச்சுது குறிப்பு எடுத்து பார்ப்பமே. “ என்றாள்.

“ மாமான்ர கடனிருக்குது அம்மா. அதையும் குடுத்து நானும் செலவுகளுக்குக் கொஞ்சம் சேர்க்கவேணும். இரண்டு வருசம் போகட்டும்” என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வந்தேன்.

முன்பு உழைக்கும் பணத்தில் என்செலவுகளுக்கு எடுத்துக்கொண்டு முழுப்பணத்தையும் அம்மாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். இப்பொழுது வீட்டுச்செலவுக்கு அனுப்பிவிட்டு மற்றதை நான் சேர்த்து வைக்கலாமென்றால் அதற்கும் அடிக்கடி செலவு வருகிறது.

“ அப்பாவுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருகுது . ஒப்பிரேசன் செய்யவேணுமாம். காசைப் பாக்காமல் பிரைவேற் கொஸ்பிற்றலில் செய்வம். காசு கூட முடியுமாம். பார்த்து கெதியில அனுப்பிவிடு தம்பி.” வருத்தம் என்றதும் கேட்டதைவிட அதிகம் அனுப்பிவைத்தேன்.

“ கலாவின்ர பழைய வீடு. திருத்தி அதோடு இரண்டு அறையும் சேர்த்து கட்டப்போறாளாம் . நாங்கள் அவளுக்கு வீடு குடுக்கேலதானே. கட்டுறதுக்கு காசு நீயும் அனுப்பிவிடு “

“ வீடு வேண்டாம் காசு தாங்கோ எண்டு கேட்டு குடுத்தனாங்கள். அதில எடுத்து கட்டச்சொல்லுங்கோவன்” என்றேன்.

“ அதை அவரின்ர தங்கச்சிக்கு சீதனமாய் குடுத்திட்டினமாம். இவள் என்ன செய்யிறது. பாவம் அனுப்பிவிடு தம்பி.” அம்மா கேட்கும்போது மறுத்து பேச மனம் வரவில்லை. அனுப்பினேன்.

கேட்கும்போதெல்லாம் அனுப்பிக்கொண்டிருந்ததால் என்னால் ஒன்றும் சேர்க்கமுடியவில்லை. அம்மாவோடு இதைப்பற்றி கதைக்கவேணும் என்று நினைத்துக்கொண்டிருந்த போதுதான் போனகிழமை அம்மா எடுத்து கதைத்து என்னைப் பதறவைத்தாள்.

திடீரென போன் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். மாமாவின் போன். எடுத்து

“ சொல்லுங்கோ மாமா” என்றேன்.

“ வீட்டில தானே நிக்கிறாய். நான் வாறன்” என்றார். வீட்டுக்கு வந்ததும்,

“ என்னடா, என்ன பிரச்சனை ஏன் அம்மாவோடை கதைக்கேல“ என்றார்.

நான் கதைக்கவில்லை என்றதும் அம்மா மாமாவுக்கு போன் பண்ணியிருக்கிறாள்.

“அம்மா என்ன சொன்னா மாமா” என்று மாமாவிடம் கேட்டேன்.

“ அம்மான்ர கதையை விடு . நீ சொல்லு “ என்றார்

“ உங்களுக்குத்தெரியும் மாமா. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு மூண்டு பேருக்கும் கலியாணம் செய்து வைச்சேன் எண்டு. பிறகும் பட்ட கடனை குடுத்திட்டு காசு சேர்க்க வேணும் எண்டு கஷ்டப்படுறன் மாமா. ஆனால் காசு சேர்க்க ஒவ்வொரு செலவு வருகுது. வீட்டு செலவுக்கு அனுப்பினாலும் அம்மா, கலா வீட்டைத்திருத்துறாள் காசு அனுப்பிவிடு எண்டு அனுப்பினனான் . போன கிழமை அம்மா எடுத்து மாலா வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சு சாமான்கள் வாங்க இரண்டு லட்சம் முடிஞ்சுதாம் . அனுப்பச்சொன்னா. அவளுக்கு அனுப்பினனி. இவளுக்கும் அனுப்பிவிடு என்கிறா. இனி அவையளின்ர செலவை அவையள் பார்க்கட்டும் நீங்கள் விடுங்கோ எண்டதுக்கு தங்கச்சிமாருக்கு அனுப்பிறதுக்கு கணக்குப் பார்க்கிறியே. முந்தி அனுப்பேக்கை கணக்கு கேக்கிறேல. இப்பகேக்கிறாய். நாங்கள் வசதியாய் இருக்க அதுகள் கடனோட இருக்கிறதே என்கிறா.

எப்பவும் நான் கணக்குப் பார்த்ததேயில்லை மாமா.என்ர முமு உழைப்பையும் தானே அனுப்பினனான். ஏன் மாமா அம்மா அப்படி சொன்னா. எனக்கு எவ்வளவு கடன் இருக்குதெண்டு அம்மாவுக்கு தெரியாது. வந்து பதினெட்டு வருசம் எனக்கெண்டு ஒரு வீடில்லை. இப்பவும் ஒரு அறையில இருக்கிறன். என்னைப்பார்த்து வெளிநாட்டுக்குப் போய் நீயும் மாறிட்டாயா. என்கிறா. எனக்கு தாங்கேலாமல் இருக்குது மாமா. மனம் விட்டு கதைக்கவும் ஆருமில்லை. நான் என்ன செய்கிறது. “

மாமா கேட்டதும் மனதிலுள்ள வேதனைகளையெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டேன்.

“ நீ பட்ட கஷ்டம் எனக்குத்தெரியும். அம்மாவுக்குத் தெரியாது. பெரும் செலவு செய்து கலியாணத்தை நடத்தியவனுக்கு இந்த செலவுகளெல்லாம் சாதாரணம் எண்டு நினைச்சிட்டா போல. கவலைப்படாதே. நீ ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்குப் போய் அம்மாவோட இருந்திட்டுவாவன் “ என்றார்.

“ நான் படுற கஷ்டம் நேரில பார்த்தாத்தான் அம்மாவுக்கு விளங்கும். நான்போய்ச்சொல்லி விளங்காது. நான் போகேல மாமா. “ என்றேன்.

“ அப்ப தனிய இருக்கவேண்டாம். எங்களோட வந்து இரு” என்றார்.

“ வேண்டாம் மாமா. தனிய இருந்து பழகிட்டுது. இப்பிடியே இருந்திட்டு போறன். என்னை விடுங்கோ” சொல்லும்போது குரல் அடைத்துக்கொண்டு வந்தது.

மாமா சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்

பின் எழுந்து போய் போனை எடுத்து நம்பரை அழுத்திவிட்டு ஸ்பீக்கருக்கு மாற்றினார்.

“ சிவகாமி, நான் அண்ணை கதைக்கிறன்” என்றார். மறு முனையில் அம்மாவின் குரல் பதட்டத்துடன் வந்தது.

“ ஏன் அண்ணை அவன் கதைக்கேல. நான் கதைச்சது அவனுக்கு கோவமே . வருத்தமில்லாமல் சுகமாயிருக்கிறான்தானே. நீங்கள் அவனைக்கண்டு கதைச்சனீங்களே.”

“ கண்டு கதைச்சிட்டன். சுகமாயிருக்கிறான். தனியயிருந்து கவலைப்படுறான். நான் சொல்லுறதைக் கேளு. நான் ஸ்பொன்ஸர் பண்ணி உன்னை கூப்பிடுறன் . வந்து அவனோட கொஞ்சநாள் இருந்திட்டுப்போ “ என்றார்.

நான் திடுக்கிட்டு மாமாவைப் பார்த்தேன்.

“ அவரை விட்டுட்டு, வீடு வாசலை விட்டு, உடன என்னெண்டு நான் வாறது அண்ணை”

என்று அம்மா சொன்னாள்.

“ பொடியன் உனக்கு வேணுமெண்டால் வா. அவரை மற்றப் பிள்ளையள் பார்க்கட்டும். ” என்று சிறிது கோபத்துடன் சொல்லிவிட்டு போனை வைத்தார்.

“ அம்மாவை நான் கூப்பிடுறன். உன்னோட வந்து கொஞ்சநாள் இருக்கட்டும். மனதைப்போட்டு குழப்பாமல் சாப்பிட்டு விட்டு நிம்மதியாய் படு.” என்று சொல்லிவிட்டு போனார்.

மாமாவோடு கதைத்த பின் மனப்பாரம் குறைந்ததுபோலிருந்தது.. அம்மா வாறதும் மனதுக்கு சந்தோஷமாயிருந்தது.

அம்மா வந்து இறங்கியபோது என்னை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு மாமா தான் போய் கூட்டிவந்தார். வீட்டில் என்னைத்தவிர யாருமில்லை. வந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது மாமா இங்கு நடந்ததெல்லாம் சொல்லியிருப்பார் என்று தோன்றியது.

“ நான் போறன். ஆறுதலாய் இரண்டுபேரும் வீட்டுக்கு வாங்கோ” என்று சொல்லி

மாமா போனதும் இருவரும் அறைக்குள் வந்தோம்.

அம்மா அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு என்பக்கம் திரும்பினாள். கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.

“ உன்னை நான் கஷ்டப்படுத்தி விட்டிட்டனேடா… கஷ்டத்தோட போராடி களைச்ச நேரம் நீ உழைச்சு காசு அனுப்ப எங்கட கஷ்டமெல்லாம் போட்டுது எண்டு நினைச்சேனே தவிர நீ தனிய இருந்து கஷ்டப்படுறாய் எண்டு நினைக்கேலை. வெளிநாட்டில கை நிறைய உழைச்சு அனுப்பிறாய் எண்டு சாதாரணமாய் நினைச்சிட்டன். உன்னை வருத்தி நாங்களெல்லாரும் நல்லாயிருக்கோணும் என்று நான் நினைப்பேனா சொல்லு….

மாமாவும், தனிய வந்து காசுக்காக உழைச்சு,உழைச்சு மன விரக்தியில எத்தனை பொடியளின்ர வாழ்க்கை அழிஞ்சிருக்கு. நீயும் பொடியனை துலைக்கப்போறியோ என்று கேக்க நான் ஆடிப் போயிட்டன், என்ர சந்தோஷமே நீ தானேடா… “ அம்மா குரல் தழுதழுக்க என் கன்னம் தடவிச் சொல்ல எல்லா வலியும் மறந்து அவள் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.

இது போதும் எனக்கு. ஆண்டவா உனக்கு நன்றி என்று நினைக்க மாமாவின் முகமே மனதில் தோன்றியது.

 

– விமல் பரம்

நன்றி : ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை | செப்டெம்பர் 2018

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *