கிழக்கும் மேற்கும் | விமல் பரம் | சிறுகதை


“கதிர் முதல் அழைப்பிதழைச் சுவாமித்தட்டில வைச்சுக் கும்பிட்டிட்டு வாறன் மற்றதுகளை எடுத்து வை. அட்ரஸ் எழுத ஈஸியாயிருக்கும்”

அம்மா என் திருமண அழைப்பிதழ் பார்சலைப் பிரித்து ஒன்றை எடுத்துப் போக மீதியை மேசையில் வைத்து விட்டு ஒன்றையெடுத்துப் பார்த்தேன். கதிரவன் கயல்விழி திருமண அழைப்பிதழ் கீழே  மணமகன் வீட்டார் அழைப்பு திருமதி சிவகாமி என்றிருக்க நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தேன். அழைப்பிதழின் நான்கு மூலையிலும் மஞ்சள் குங்குமம் தடவி சுவாமித்தட்டில் வைத்து விளக்கேற்றி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். அறையிலிருந்து ஊதுபத்தியின் வாசம் காற்றில் மிதந்து வந்து மூக்கைத் துளைத்தது.

அம்மாவின் வேண்டுதல் எப்போதும் என்னைப்பற்றியேயிருக்கும். தவறே செய்யாமல் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கும்போது எனக்கு இதயமே வலிக்கும்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மாவின் கையைமட்டுமே பிடித்து நடந்திருக்கிறேன். வளர வளர அப்பாவின் பாசத்துக்கும் மனம் ஏங்கியது. அப்பா ஏன் எங்களோடில்லை. ஸ்கூலில் நடக்கும் கலைநிகழ்ச்சிகள் விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றி கிடைக்கும்போது அப்பாவும் பாராட்டவேணும் என்று மனம் தேடும்.

 

“வேலைக்கு லீவு போட்டிட்டு அம்மா வாறன்தானே. அப்பாவுக்கு நேரமில்லையடா பிறகு வருவார்” சமாதானம் சொல்வாள்.

“ஓட்டத்தில முதலாவதாய் வந்தனான். இரண்டாவதாய் வந்த பாபுவை அவன்ர அப்பா வந்து தூக்கிறார். அப்பா வந்தால் என்னையும் தூக்குவாரம்மா” ஏக்கம் குரலில் தெரியும்.

“நான் தூக்கிறனடா” அணைத்துத் தூக்கி மடியிலிருத்திக் கொஞ்சினாலும் அப்பாவின் ஏக்கம் குறையாது. பிறந்தநாளுக்கு கேக்  வெட்டும்போதும் அப்பா வருவதில்லை.

“எனக்கு அப்பா வேணும். வரச்சொல்லுங்கோ”  அழுது அடம்பிடிப்பேன்.

“ஏன் சிவகாமி என்ன நடந்தது எண்டு அவனுக்குத் தெரியாதே. வளர்ந்துகொண்டு வாறான் சொல்லு அவனுக்கு விளங்கும்” என் எட்டாவது பிறந்தநாளுக்கு வந்த பெரியம்மா சொல்லியும் அம்மா  ஒன்றும் சொல்லவில்லை. ஒரு பார்சலைத் தந்தாள்.

 

“லண்டனிலயிருந்து அப்பா உனக்கு கிவ்ட் அனுப்பியிருக்கிறார்”  பார்சலிலுள்ள பொருட்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் குதித்தேன். அடிக்கடி அப்பாவிடமிருந்து வரும் பார்சல்களில் எனக்குப்பிடித்த பொருட்களைப் பார்த்து அதிசயப்படுவேன். ஆசைப்பட்டு அம்மாவிடம் கேட்பவையெல்லாம் அப்பாவிடமிருந்து வரும்.

முதலாம் ஆண்டிலிருந்து பரந்தன் பாடசாலையில் என்னோடு படித்துக்கொண்டிருக்கும் பாபுவுக்கும் எனக்கும் படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி போட்டிதான். நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். எப்படியாவது என்னை முந்தவேணும் என்று அவனும் கடுமையாக படிப்பான் விளையாடுவான். வளரவளர போட்டி பொறாமையாக மாறி  எப்போதும் என்னோடு சண்டைக்கு நிற்பான்.

ஐந்தாம் ஆண்டில் நடந்த ‘ஸ்கொலஷிப்’ பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக மாக்ஸ் எடுத்தேன். அப்பா நிறைய பரிசுகள் அனுப்பினார்.  வகுப்பில் காட்டியபோது பாபு அப்பாவைப்பற்றித் தப்பு தப்பாய்ச் சொன்னான்.

“அப்பா வாங்கித்தந்தது எண்டு பொய் சொல்லுறான். இவனுக்கு அப்பா இல்லை. அம்மா சொன்னவா. இவனையும் இவன்ர அம்மாவையும் வேண்டாம் எண்டு ஓடிப்போயிட்டாராம்”

“ஓடிப்போகேல. என்ர அப்பா லண்டனில இருக்கிறார்” சத்தமாய்ச் சொன்னேன்.

“எங்கட மாமாவும் லண்டனில இருக்கிறார். ஒவ்வொரு கிழமையும் ‘ஸ்கைப்’ வீடியோவில பார்த்து கதைக்கிறவர். வீட்டுக்கு முன்னால காருக்கு முன்னால பனிக்கட்டிக்குள்ள நிண்டெல்லாம் படங்கள் எடுத்து அனுப்புறவர். உன்ர அப்பா படம் அனுப்புறவரா போன் எடுத்து கதைக்கிறவரா சொல்லு” என்றான்.

யோசித்துப் பார்த்தேன். பார்சல்கள் வருமே தவிர கதைத்ததில்லை. படங்களும் வருவதில்லை. அப்பா ஏன் என்னோட கதைக்கேல. பாபு சொன்னது உண்மையோ… இல்லை இவன்தான் பொய் சொல்லுறான். எவ்வளவு விளையாட்டுச் சாமான்கள் வாங்கி அனுப்பியிருக்கிறார்.

“இங்க சாமான்களை வாங்கி லண்டனிலயிருந்து வந்தது எண்டு பொய்சொல்லுறான். உனக்கு அப்பாவுமில்லை இது லண்டனில வாங்கவுமில்லை” சொல்லிக்கொண்டே என்னைத்தள்ளி விட்டான். கையிலுள்ள பொருட்கள் சிதற நிலத்தில் விழுந்தேன். எல்லோரும் பார்க்க அழுகை வந்தது. சுதன் ஓடிவந்து தூக்கிவிட்டான். ஓரே வகுப்பில் படித்தாலும் யாரோடும் கதைக்காமல் பின்வரிசையில் தனியாக இருப்பான்.

“அழாதை வா வீட்டை போவம். உன்ர அம்மாட்ட கேளு” என்றான்.

“எனக்கு அப்பா வேணும். நான் என்ன கேட்டாலும் அப்பா வாங்கியனுப்புவார். உன்ர அப்பாவும் வாங்கித் தருவார்தானே”

“அப்பா எங்களோட இல்லை. இருந்தாலும் வேண்டித்தரமாட்டார். குடிச்சுப்போட்டு வந்து அம்மாவைப்போட்டு அடிப்பார் நான் தடுத்தால் எனக்கும் தங்கச்சிக்கும் அடிவிழும்.  ஒருநாள்  பெரிய சண்டைவந்து அப்பா என்னை அடிக்க அம்மா அப்பாவை வேண்டாம் போ எண்டு கலைச்சுப்போட்டா. அம்மா வீட்டு வேலைக்குப் போவா. கொப்பி பெஞ்சில் கேட்டால் காசு இருந்தால் வாங்கித்தருவா இல்லையெண்டால் பிறகு வாங்கித்தாறன் எண்டு சொல்லுவா பாவம் அம்மா” அவன் சொன்னதைக் கேட்டதும் அப்பா அடிப்பாரா என்று நினைத்தேன்.

வீட்டுக்கு வந்து வேலை முடித்துவிட்டு வரும் அம்மாவுக்காகக் காத்திருந்தேன்.

“என்னடா உடுப்புக்கூட மாத்தாமல் இருக்கிறா. சாப்பிட்டியா”   அம்மா உள்ளே போய் உடுப்பு மாற்றி விட்டு வந்த போதும் நான் அப்படியேயிருந்தேன்.

“அம்மா அப்பா எங்க… எப்ப வருவார்” கேட்டதும் திகைத்து நின்றுவிட்டாள்.

“இப்ப எதுக்குக் கேக்கிறா”

“அப்பாவை வேண்டாம் எண்டு கலைச்சுப்போட்டீங்களா இல்லை எங்களை வேண்டாம் எண்டு  ஓடிப்போயிட்டாரா”

“என்னடா சொல்லுறா யாரடா சொன்னது”

“பாபு” அழுகையோடு சொன்னதும் கண்கலங்க அணைத்துக் கொண்டாள்.

“சொல்லுறன். அப்பா ஓடிப்போகேல. எங்களை விட்டு சட்டப்படி பிரிஞ்சு போயிட்டார்”

“என்னைப் பார்க்கவும் இனி வரமாட்டாரா… லண்டனிலயிருந்து நிறைய வாங்கித்தந்தாரே”

“இங்கதான் வாங்கி பார்சல் பண்ணித்தந்தனான்”

“ஏம்மா பொய் சொன்னா. நீ சொன்னதை நம்பி ஸ்கூலில போய் எல்லாரிட்டையும் சொல்லிட்டன் பாபு நாளைக்கு கேப்பான் பொய் எண்டால் கேலியாய் சிரிப்பானே”

அப்பா இல்லையே என்ற அதிர்ச்சியிலும் நாளைக்கு பாபு என்னைப் பார்த்து சிரிப்பானே என்ற பயத்திலும் காய்ச்சல் வந்து ஸ்கூலுக்குப் போகமுடியவில்லை.

மூன்றாம் நாள் பயத்துடன் ஸ்கூலுக்குப் போக

“என்னடா நான் சொன்னது சரிதானே. அப்பா ஓடிட்டாரா” பாபு கேட்க நான் பேசாமல் நின்றேன். என் புத்தகப்பையைப் பறித்தான்.

“எல்லாம் லண்டனில வாங்கினதாம். எந்தக்கடை எண்டு சொல்லுடா. மாமாட்ட சொல்லி வாங்கப்போறன்” என்றான். எல்லோரும் சிரிக்க எனக்கு அழுகை வந்தது.

அப்பா வேணுமென்று நான் நினைக்க அவர் ஏன் என்னைவிட்டுப் போனார். நினைத்து நினைத்து அழுதேன்.  நல்ல அப்பாவைக் கொடுக்காத சாமியிடம் கோபம் வந்தது. வளர வளர அம்மாவையும் நினைத்து கவலைப்பட்டேன். அம்மாவைப்பற்றி மற்றவர்கள் பேசும் கேலிப்பேச்சிலும் குத்தல் கதையிலும் நெஞ்சுவலிக்க மனதில் கோபுரமாய் உயர்ந்து நின்றவர் நொருங்கிச் சரிவதை உணர்ந்தேன். அம்மாவிடம் காரணம் கேட்டேன்.

“முதல் கோணம் முற்றிலும் கோணம் எண்டு சொல்லுவினம். அப்பாவுக்கு என்னைச் செய்ய விருப்பமில்லை. தாயில்லாமல் கஷ்டப்பட்டு தான் வளர்த்த பிள்ளை தன்ர சொல்லுத்தான் கேட்க வேணுமெண்டு ஆரையோ விரும்பிக் கொண்டிருந்த உன்ர அப்பாவை கட்டாயப்படுத்தி என்ர கழுத்தில தாலியைக் கட்ட வைச்சார் உன்ர அப்பப்பா. எனக்குத் தெரியாது. இரண்டு வருசம் ஏனோதானோயெண்டு போன வாழ்க்கையில மூண்டாவது வருசம் நீ பிறந்து சந்தோஷத்தைத் தந்தாய். அடுத்த வருசம் அப்பப்பா வருத்தத்தில போய்ச்சேர அப்பாவுக்கு பழையபடி குணம் மாறிட்டுது. தன்னை விரும்பியிருந்தவள் கலியாணம் செய்யாமலிருக்கிறாள்  எண்டு சொன்னார். அடிக்கடி அவளைச் சந்திக்கப் போறதை அறிஞ்சதும் எனக்கு மனசே விட்டுப் போச்சு. விவாகரத்து கேட்டதும் இனிமேல் எங்களைச் சந்திக்கக்கூடாது எண்டு சம்மதிச்சுப் பிரிஞ்சோம். பிறகு அவர் வரவேயில்லை. அவளை கலியாணமும் செய்திட்டார்” அம்மா சொன்னதைக்கேட்டு வெறுத்துப்போனேன்.

“ உங்களுக்கு கோபமே வரேலையாம்மா”

“விருப்பமேயில்லாமல் என்னைச் செய்தாலும் தங்கவிக்கிரம் மாதிரி உன்னை எனக்குத் தந்தாரே அதுக்காக எல்லாத்தையும் மறந்திட்டன். நீயும் மறந்திடு. நீ போதுமடா எனக்கு”

அம்மா மன்னிச்சாலும் நான் மன்னிக்கவே மாட்டேன்.

அம்மாவைத் தவிக்கவிட்டு விரும்பினவளைத் தேடிப் போனாரே… அம்மாவும் நானும்  எவ்வளவு அவமானங்களைச் சந்திப்போம் என்று தெரியாதா. சுயநலமாய் தன் வாழ்க்கையைத் தேடிப் போனவரையா மூச்சுக்கு மூச்சு அப்பா….அப்பா என்று உருகினேன்.

“எப்பபார்த்தாலும் அப்பாதான் உனக்கு. பக்கத்திலயிருந்து செய்யிறதெல்லாம் நான். என்னைப்பற்றி கேட்கமாட்டாயா” என தன் கவலையை மறைத்து சிரித்துக்கொண்டே கேட்கும்  அம்மாவை நினைத்தேன் வலித்தது எனக்கு.

அம்மாவோடு இன்னும்  நெருக்கமானேன். அதன் பிரதிபலிப்பு அம்மாவின் முகத்தில் தெரிந்தது. அன்று அம்மாவோடு சேர்ந்து அலுமாரியிலுள்ள புத்தகங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன்.  மேல்தட்டிலிருந்த ஒரு அல்பம் கண்ணில் பட்டதும் எடுக்கமுயன்றேன்.

“பழசு அதை எடுக்காத. உன்ர அல்பங்கள் கீழ்தட்டில இருக்கு” அவசரமாய்த் தடுத்தாள். மீறி எடுத்தேன். நான் பார்க்காத அம்மாவின் திருமண அல்பம். சந்தோஷமாயிருக்கும் அம்மாவைப்  பார்த்ததும் தாங்கமுடியவில்லை.  எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பாள் எல்லாவற்றையும்  காலில் போட்டு மிதிச்சிட்டாரே. தாலிகட்டும் படமுமிருந்தது. தாலியோடு அம்மாவை நான் பார்த்ததேயில்லை……

“அம்மா தாலி எங்க போடுங்கோ. பார்க்க வடிவாயிருக்கும்” என்றேன்.

“முதல்ல வேலையை முடிப்பம். அத வைச்சிட்டு வா”

இல்லையென்று அடம்பிடிக்க அம்மா சொன்ன பதிலில் அதிர்ந்துபோய் நின்றேன். இருவரும் பிரியும் போது தான் கட்டிய தாலி தனக்கு வேணும் என்று எடுத்திட்டாராம். அம்மாவே வெறுத்து நீயும் வேண்டாம் உன் தாலியும் வேண்டாம் என்று கழட்டிக் கொடுத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும். அம்மாவின் வாழ்க்கையையும் பறித்து தாலியையும் பறித்து எவளோ ஒருத்திக்கு வாழ்வு கொடுக்கப் போனாரே….. மனதுக்குள் வெதும்பினேன்.

அன்று புதுவருடப் புத்தாண்டு. முருகண்டி பிள்ளையார் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அம்மா திடீரென என் கைபிடித்து இழுக்க திரும்பினேன். வெளிறிய முகத்தோடு சுட்டிக்காட்டிய இடத்தைப்பார்த்தேன். யாரைப் பார்க்க வேணும் என்று பத்துவயதுவரை ஏங்கினேனோ….யாரை இனி பார்க்கவே கூடாது என்று இந்த ஐந்து வருசமாய் வெறுத்திருந்தேனோ அவரைப் பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணுடன் சிரித்துக் கதைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார். பெண்ணின் முகத்தைப் பார்க்கும்போது  கழுத்தில் மின்னிய தாலி கண்ணில் உறுத்தியது. ஆத்திரம் கோபம் வெறுப்பு ஒன்று சேர அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன். இறுகிய முகத்தோடு என் கைபிடித்து மறுபக்கம் இழுத்து வந்தாள்.

“எப்பிடியம்மா எல்லாத்தையும் தாங்கிறா”

“உனக்காக…. நீ வேணும் எனக்கு”  அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதேன்.

அம்மாவை சந்தோஷமாய் வைத்திருக்கவேண்டும் என்ற வெறி நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது. படித்தேன். நல்ல வேலையும் கிடைத்தது. என் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அம்மாவின் சந்தோஷத்தைக்கண்டேன். என் திருமணப்பேச்சைத் தொடங்கியதும் மீண்டும் நெஞ்சைக்கிழிக்கும் பேச்சுக்கள்.

தாய் தகப்பன் ஒற்றுமையில்லை அந்த குடும்பம் வேண்டாம்….  தகப்பனிருந்தும் இல்லாமல் வளர்ந்த பெடியன் வேண்டாம்…..  புருஷனோட சண்டைபோட்டு விட்டிட்டு இருக்கிற மனுசி என்ர பிள்ளையை சந்தோஷமாய் வைச்சிருக்குமே வேண்டாம் என்று தட்டிக் கொண்டே போக மனம் வெறுத்துப்போனது.

அந்த நேரத்தில்தான் அலுவலகத்திற்கு புதிதாக வந்தாள் கயல்விழி. அனைவரோடும் அன்பாய் பழகுவதையும் முன்னின்று உதவிகள் செய்வதையும் பார்த்து அவளிடம் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. ஒருமுறை அம்மாவோடு வெளியே போகும்போது எதிர்பாராத விதமாக கயலை சந்தித்தோம். அம்மாவோடு கதைத்துச் சிரித்த அந்த பதினைந்து நிமிடத்தில் மரியாதை தெரிஞ்ச பாசமான பிள்ளை என்று பெயரெடுத்தாள். கிட்டத்தட்ட ஒருவருடப் பழக்கத்தின் பின் கயல் தன் விருப்பத்தைச் சொன்னபோது

“அம்மா அப்பா டிவோஸ் பிரிஞ்சிட்டினம். நானும் அம்மாவும்தான். முதல்ல உங்க வீட்டில  சொல்லுங்கோ சம்மதிச்சால் இதைப்பற்றிக் கதைப்பம்”

“பிறகு சொல்லலாம்” என்று கயல் சொன்னபோதும் நான் சம்மதிக்கவில்லை. நாட்கள் கடந்து போனது. கயலிடமிருந்து பதில் இல்லை. இதை எதிர்பார்த்திருந்தாலும் மனதின் ஓரத்தில் வலித்தது. மூன்று மாதங்கள் கடந்து போக ஒருநாள் சந்தோஷ சிரிப்போடு என்னிடம் வந்தாள்.

“வீட்டில எல்லாருக்கும் சம்மதம். அம்மாவும் நீங்களும் எப்ப எங்க வீட்டுக்கு வரப்போறீங்கள்”

“அம்மாவோடு கதைக்கிறன்” என்றேன்.

அன்று இரவு அம்மாவோடு கதைத்துக்கொண்டிருக்கும் போது கயலிடமிருந்து போன் வந்தது. கயலில் அப்பா கதைத்தார். தங்கள் சம்மதத்தை தெரிவித்து வீட்டுக்கு அழைத்தார். போனபோது  பழைய விஷயங்களைத் தவிர்த்து சந்தோஷமாய் கதைத்தார்கள்.  அடுத்தநாள் கயலைச் சந்தித்தபோது மூன்று மாத மௌனம் ஏன் கேட்டேன்.

“அப்பாவுக்கு முதல்ல விருப்பமில்லை. நான் பிடிவாதமாய் நிண்டும் சம்மதிக்கேல. அப்பாவின்ர தங்கச்சி எங்களோடயிருந்துதான் கலியாணம் செய்து லண்டன் போனவா. ஒண்டாய் வளர்ந்ததால என்னில பாசம். மாமிட்ட சொல்லி அழுதேன். விரும்பிட்டாள். ஏன் பிரிக்கிறீங்கள். நல்ல பெடியன் எண்டால் செய்து வையுங்கோ எண்டு மாமி சொல்லியும் அப்பாவுக்கு தயக்கம்தான். கடைசியாய் மாமி நானும் விரும்பித்தானே செய்தனான். எனக்கு ஆதரவாய் இருக்கிற நீங்கள் அவளை ஏன் பிரிக்கிறீங்கள். அப்ப என்னையும் விட்டிடுங்கோ எண்டு மாமி கோவமாய் போனை வைச்சிட்டா. பிறகுதான் அப்பா உங்கடை குணங்களை விசாரிச்சிட்டு சம்மதம் சொன்னார். மாமி இல்லையெண்டால் எங்கட கலியாணம் நடக்காது. வெடிங்கிக்கு வருவினம். தாங்ஸ் சொல்லோணும்” கேட்டதற்கு பெரிய விளக்கமே கொடுத்தாள்.

“கதிர்….  கதிர்….”  அம்மாவின் குரல்.  நினைவிலிருந்து விடுபட்டேன். அட்ரஸ் எழுதிய அழைப்பிதழ்களைத் தந்தாள். அனுப்பிவிட்டு வந்தேன்..

திருமணநாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க அந்த நாளும்வந்து திருமணமும் நல்லபடி நடந்தது. கயலின் மாமாவுக்கு கார்விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் மாமியாலும்  வரமுடியவில்லை. மாமி வரவில்லை என்றதும் கயல் அழுததைப் பார்த்தேன்.

கயல் எங்கள் வீட்டுக்கு வந்தபின் வீடே கலகலப்பானது. வீட்டிலிருக்கும்போது அவளின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அம்மாவைச் சந்தோஷப் படுத்துவதில் ஆர்வமாயிருந்தாள்.  அம்மாவும் கயலும் பழகும் விதமும் ஒருத்தரை ஒருத்தர் நோகவிடாமல் தாங்குவதும் எனக்கு நிம்மதியைத் தந்தது. ஆறுமாதங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை.

இன்று திடீரென கயலின் அப்பா கயலை தங்கள் வீட்டுக்கு வரச்சொன்னதால் அவள் அங்கு போக நான் வேலைக்கு வந்தேன். மதியம்  கயலிடமிருந்து போன் வந்தது.

“கதிர் மத்தியானத்தோட லீவு போட்டிட்டு இங்க வாங்கோ  உங்களுக்கு ஒரு சேப்பிரைஸ் இருக்கு” என்றாள். என்னவென்று கேட்க முன் போனை வைத்து விட்டாள்.

கயலின் வீட்டுக்குப் போக வாசலில் ஒருகார் நின்றது. யாரோ வந்திருக்கிறார்கள். யாராயிருக்கும் என்று நினைத்தபடி உள்ளே சென்று வந்தவர்களைப் பார்த்ததும் தீயை மிதித்தது போல் துடித்து நின்றேன். மூச்சு விட முடியாமல் நெஞ்சை நீவி கொண்டேன். இரண்டாவது முறையாக மீண்டும் பார்க்கிறேன். மனதில் எழுந்த கோபத்தை மறைத்துக் கொண்டேன். என்னைப் பெத்தவர் இவர் தான் என்று இவர்களுக்கு எப்படித் தெரியும். என்னை மகன் என்று எப்படி அறிந்து கொண்டார். கயலுக்கு நான் சொல்லவில்லையே. இவ்வளவு நாளும் வராமல் இன்று எப்படி வந்தார்கள். மனதில் பல கேள்விகள் எழுந்தன.

“என்ன கதிர் திகைச்சுப் போய் நிக்கிறீங்கள். யாரெண்டு சொல்லுங்கோ பார்ப்பம்”  கயல் என் அருகில் வந்தபடி கேட்டாள். என்னால் எப்படிச் சொல்லமுடியும். அவர்களைத் தவிர்த்து கயலைப் பார்த்தேன்.

“இவங்க தான் எங்களைச் சேர்த்து வைச்ச என் செல்ல மாமி இவர் மாமா. மாமி கதிர் எனக்கு கிடைச்சதுக்கு எத்தனை தடவை உங்களுக்கு நன்றி சொன்னாலும் போதாது. தங்யூ சோ மச்” தன் மாமியை இறுக அணைத்த படி கயல் சொன்னதைக் கேட்டு தலையில் இடி விழுந்தது போல் திடுக்கிட்டு நின்றேன். தூர விலக்கிவைத்த கசப்பான நினைவுகள் வந்து ஒட்டிக்கொண்டன.

“என்ன பேசாமல் நிக்கிறீங்கள். நீங்களும் தாங்ஸ் சொல்லுங்கோ. மாமியும் வாழ்க்கையில சரியா கஸ்டப்பட்டுப் போனா. நாலு வருசம் விரும்பியிருந்து இடையில பிரச்சனை வந்து ஐந்து வருசம் பிரிஞ்சு பிறகுதான் கலியாணம் செய்தவை. அதால தான் எங்கட கஷ்டம் விளங்கி சேர்த்து வைச்சிருக்கிறா”

விரும்பிய எங்களைச் சேர்த்து வைச்ச கயலின் மாமியால் அம்மாவின் கஷ்டத்தை உணர முடியவில்லையா….எதுவும் புரியாமல் ஒரு கணம் குழம்பி நின்றேன்.

சிரிப்பும் சந்தோஷமுமாய் சொல்லிக்கொண்டிருக்கும் கயலைப் பார்த்தேன். இவர்கள் மீதான என் வெறுப்பைக் காட்டினால் தாங்க மாட்டாள். சிரித்த முகத்தோடு எல்லோரையும் அரவணைக்கும் கயல் எனக்கு வேணும். மகளாய் கொண்டாடும் அம்மாவுக்கு கயல் வேணும். என் கயலுக்காக…..

வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தேன். கண்ணில் எதுவும் உறுத்தவில்லை. அருகில்  வந்து கைகுலுக்கி வாழ்த்து சொல்லி

“சாப்பிட்டுக்கொண்டே கதைக்கலாம் வாங்கோ” என்றார் என்னை யாரென்று அறியாமலே.

என் மாமனாரும்

“நேரமாச்சு வாங்கோ எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றார்.

மகனாய் இல்லாமல் அந்த வீட்டு மருமகனாய் அவர்களோடு சேர்ந்து சாப்பிட அமர்ந்தேன்.

 

நிறைவு..

 

விமல் பரம்

 

நன்றி : தினக்குரல் பத்திரிகை

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *