உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்


“கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் 2019 ல் தனது 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் விமல் பரம் அவர்களின் இச் சிறுகதை மூன்றாம் பரிசினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.”

என் வாழ்வின் சந்தோஷங்கள் அனைத்தும் என்னைவிட்டுப் போய் விட்டதாக உணர்ந்தேன். பெற்றோரை இழந்து பதினெட்டு வயதில் மீண்டுமொரு தடவை அநாதையாக நிற்கிறேன். என்னைப் பதின்மூன்று வருடங்கள் அன்பாலும், அரவணைப்பாலும் போற்றி வளர்த்தவர்களை ஏ9 வீதியில் நடந்த கொடிய விபத்தில் பறிகொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறேன்.

பிறந்த அன்றே பெற்ற தாயை இழந்து அணைத்துக் கொள்ள யாருமின்றி கிளிநொச்சியிலுள்ள சிறுவர் காப்பகத்தில் விடப்பட்டேன். அங்கு வளர்ந்த ஐந்துவருட வாழ்க்கை மங்கிய நிலவொளியில் தோன்றும் விம்பங்கள் போல நினைவில் தோன்றி மறைந்துவிட நினைவில் வருவதெல்லாம் என்னைத் தத்தெடுத்தவர்கள் தங்கள் குழந்தையாக பரந்தனுக்கு அழைத்து வந்து கொண்டாடிய நாட்கள்தான். அன்றைய வாழ்வின் வெளிச்சம் இன்று இருள் மூடிக்கொண்டதே….. இனி நான் என்ன செய்வேன்.

“ஏம்மா என்னை விட்டுப் போனாய். அப்பாவும் நீயுமில்லாம எப்பிடியிருப்பேன்” கண்களில் நீர்வழிய உரக்கக் கத்தினேன்.
என் கண் கலங்கினாலே தாங்காதவர்கள் இன்று கதற விட்டுப் போய்விட்டார்களே…

இந்தக் கண்ணீரைப் பார்த்துத்தானேயம்மா என்னை உன்மகனாய் சுவீகரித்தாய்.

“சின்னக் குழந்தை ஒன்றைத் தத்தெடுக்க வந்தபோது விளையாடிக்கொண்டிருந்த நீ
கல்லில தடுக்கி விழுந்தாய். காலில அடிபட்டு இரத்தம் வழியிறதைப் பார்த்து ஓடிவந்து தூக்க அம்மா…. அம்மா…. எண்டு என்ர கையைப் பிடிச்சு அழுதாயடா. என்னை அம்மா எண்டு கூப்பிட்ட உன்னை விட்டு வரமுடியாமல் நீதான் வேணும் எண்டு சட்டப்படி மகனாய் சொந்தமாக்கினேன்”

இதை எத்தனை தடவையம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாய்.

இவன் என்ர பிள்ளை என்று உரிமையாய்ச் சொல்லி சந்தோஷப்படுவாயே…… எப்பிடியம்மா என்னை விட்டுப்போக மனம் வந்தது. ஏம்மா போனாய்….

நான் வந்த அடுத்தnவருசம் நடந்த சண்டையில் வீட்டை விட்டு இடப்பெயர்ந்து ஊர் ஊராய் அலைந்ததும், கிளிநொச்சியிலிருக்கும் அப்பாவின் கடையிலுள்ள பொருட்களை எடுக்க முடியாமல் கையிலிருந்த பணத்தோடு முள்ளிவாய்க்கால் வரை சமாளிச்சதும், பணமில்லாமல் சனங்களோடு அகதிகளாய் செட்டிகுளமுகாமில் முள்கம்பிகளுக்குள் இருந்து துன்பப்பட்டதையும் கதைகதையாய் நீங்கள் சொன்னாலும் எந்தக் கஷ்டமும் என்னை நெருங்காது தாங்கினீர்களே. சாப்பாட்டுக்கான நீண்ட வரிசைகளில் கால்கடுக்க நின்று சாப்பாடு வாங்கி என்ர வயிற்றை நிரப்பிவிட்டு, இருப்பதைப் பகிர்ந்து சாப்பிட்டீங்கள். பட்டினியும் இருந்தீங்கள். இன்று பசி மறந்து இருக்கிறேனே எப்பிடி தாங்குவீங்கள்…..

ஒன்பது வயதில் மீள்குடியேற்றம் என்று திரும்பவும் ஊருக்கு வந்த போது தான் வறுமையை உணர்ந்தேன். இருக்க வீடில்லை. வருமானத்துக்கு அப்பாவின் கடையில்லை.

நிவாரணமாய் தந்த தடி தகரங்களால் இடிந்த சுவர்களுக்கு மேல் கூரையைப் போட்டு இருந்தோம். பழையபடி கடை போடுவதற்கு அப்பா முயற்சி செய்து கொண்டிருந்தார்.

“எங்களுக்கு உதவி செய்ய சொந்தக்காரர் இல்லையாம்மா” அம்மாவிடம் கேட்டேன்.

“இருக்கினம். அப்பாவுக்கு அக்காவும், எனக்கு அம்மாவும், அண்ணாவும் யாழ்ப்பாணத்தில வசதியாயிருந்தாலும் உதவி செய்யமாட்டினம். நானும் அப்பாவும் விரும்பிக் கலியாணம் செய்தது எல்லாருக்கும் கோவம். அம்மாவுக்கு மனமிருந்தாலும் அண்ணா விடேல. உன்ர மகள் வேணுமெண்டால் உன்ர பெட்டியோட போ. திரும்பி வராத எண்டு சொல்லிற்றார். அம்மாவும், எங்களை வேண்டாமெண்டுதானே போனனீ அவனைப் பகைச்சிட்டு வரமாட்டன் எண்டா. நாங்களும் அஞ்சு ஆறு வருசமாய் சமாதானத்திற்கு அலைஞ்சும் கோவம் குறையேல. எங்களுக்குக் குழந்தையில்லையே எண்ட கவலை. அதையே அவையள் குத்திக் காட்டிப் பேசுறதைத் தாங்கமுடியாம யாழ்ப்பாணத்தை விட்டு பரந்தனுக்கு வந்திட்டம். பிறகு ஒரு தொடர்புமில்லை. வசதியாய் இருக்கேக்க திரும்பிப் பார்க்காதவை கெட்டுநொந்து போய்க்கேட்டால் கேவலமாய் நினைப்பினம். வேண்டாமையா” என்றாள் அம்மா.

அப்பாவின் நண்பர் ரவிமாமாதான் வெளிநாட்டு நண்பர்களின் உதவியோடு கடை போடுவதற்கு உதவி செய்தார். அதிகவருமானம் இல்லாவிட்டாலும் அத்தியாவசிய தேவைகளைச் சமாளிக்கக் கூடியதாகயிருந்தது. அந்த வருசம் என்னுடைய பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாட அம்மா ஆசைப்பட்டாள்.

“கண்ணா, உன்ர பிறந்தநாளுக்கு என்னடா வேணும் சொல்லு” அம்மா கேட்டதும்,

“சைக்கிள் வேணும். வாங்கித் தாறீங்களாம்மா” ஆசையோடு கேட்டேன்.

பிறந்தநாளுக்கு சைக்கிள் தந்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன்.

கடை நடத்தவே கஷ்டமாயிருக்கு சைக்கிள் வாங்க பதினையாயிரத்துக்கு எங்கபோறது என்று அப்பா கவலைப்பட்டதும், பிள்ளையை வசதியாய், சந்தோஷமாய் வைச்சிருக்க வேணுமென்று ஆசைப்பட்டம் ஓடி ஓடிக் கஷ்டப்பட்டவன் ஆசைப்பட்டுக் கேக்கிறான் என்று அம்மா பிடிவாதமாயிருந்து வாங்கியதும் எனக்கு பின்புதான் தெரிந்தது.

“கஷ்டப்படுறியள். கடன்பட்டு சைக்கிள் வாங்கிக் குடுக்கவேணுமே. நல்லாய் செல்லம் குடுங்கோ. பெத்தபிள்ளையளே தாய்தகப்பனைப் பார்க்குதுகளில்லை. சின்னபிள்ளையெண்டால் உங்கள தாய்தகப்பன் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கும். இது விபரம் தெரிஞ்ச பெடியன். நாளைக்கு விட்டிட்டுப் போயிடும். கவனம்” பக்கத்து வீட்டு ஆச்சி சொன்னதுக்கு அம்மா பதில் சொன்னது ஞாபகமிருக்கிறது.

“என்ரபிள்ளை என்னைவிட்டுப் போகமாட்டான். எப்பவும் எங்களோட தான் இருப்பான்” என்னை இறுக அணைத்தபடி நம்பிக்கையோடு சொன்னியேம்மா. இன்று நானிருக்கிறன். நீதானம்மா இல்லாமல் போயிற்றாய்….

அப்பா கஷ்டப்பட்டு கடையை பழைய நிலைக்கு கொண்டுவர வீட்டுத்திட்டமும் வந்து வீடு கட்டுவதற்கு பணமும் கிடைத்தது. அந்தப் பணத்தோடு வசதியான வீடாய் திட்டம் போட்டுக் கட்டினார்கள்.

“கண்ணா, இது உன்ர வீடு. உனக்கு எந்த அறை வேணும் சொல்லுடா” அம்மா கேட்டாள்.

“அறையில படிக்கிறதுக்கு மேசை கதிரை, அலுமாரி, கட்டில் போடவேணும். காற்றோட்டமுள்ள அறையைப்பாரு. நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வரவேணும். அதைப்பார்த்து சந்தோஷப்பட வேணும். பெருமைப்பட வேணும் அது போதுமடா எனக்கு” அப்பா சொன்னார்.

சொந்தபந்தமில்லாமல் எங்கேயோ… அநாதை விடுதியில் இருக்கவேண்டிய என்னை மகனாய் கொண்டுவந்து உயிராய் இருக்கும் இவர்களுக்காக என்ன செய்யப் போகிறேன்.

படிப்பு….. படிப்பு. அப்பாவுக்காகப் படித்து ஏ.எல் பரீட்சையில் விசேட சித்தியில் பாஸ் பண்ணினேன். அன்று வீட்டில் எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாயிருந்தோம்.

“பெருமையாயிருக்கடா செல்லம். என்ர ப்ரண்ட் எனக்குத் தந்ததை உனக்காக வைச்சிருந்தனான். இது என்ர பிரசண்ட்” அப்பா தந்ததைப் பார்த்ததும் திகைத்துவிட்டேன். அதில் விலை உயர்ந்த போன் இருந்தது.

“உங்களுக்குத் தந்ததை ஏனப்பா எனக்குத் தாறீங்கள். நீங்கள் வைச்சிருங்கோ”

“எனக்கு பழசு போதும். உனக்கு கிடைக்கிறதெல்லாம் பெஸ்ட்டாயிருக்கவேணும்”

என்னை அணைத்தபடி சொன்னார் அப்பா.

உங்களிடம் வந்தபின் கிடைத்ததெல்லாம் பெஸ்ட்தானேப்பா. நீங்கள் தந்ததெல்லாம் என்னிடம் பத்திரமாய் இருக்கு. ஆனால் அதிஷ்டமாய்க் கிடைத்த உங்களைத்தான் இழந்து அநாதையாய் நிற்கிறேனே……

இந்த வீட்டை விட்டுப் போகவே மாட்டேன். இது என்ர கோயில் என்று சொல்லுவேனேயம்மா…..இன்று என்ர தெய்வங்கள் இங்க இல்லையே… நான் எப்பிடியிருப்பேன்….

நினைக்க நினைக்க என்னால் தாங்கமுடியவில்லை. அழுகை கதறலாய் வெளிப்பட்டது.

என்னை ஆதரவாய் தோளணைத்துக் கொண்டவரை நிமிர்ந்து பார்த்தேன். ரவிமாமா.

அப்பா, அம்மா போனபின் ஆதரவாய் என்னோடிருப்பவர்.

“என்னடா இது. இருபது நாளாகுது அழுது கொண்டேயிருக்கிறாய். நாங்களிருக்கிறம். முப்பத்தொண்டு காரியங்கள் முடிய எங்களோட வா” என்றார்.

“இல்ல மாமா. வீட்டை விட்டு எங்கையும் வரமாட்டன். அம்மா ஆசைப்பட்டபடி இங்கதான் இருப்பன். அப்பாவுக்காகப் படிப்பன். ஆனா தனிய எப்பிடியிருப்பன் மாமா”

கை பிடித்து அழுதேன். முன்பு அம்மா சொன்ன சொந்தக்காரர் நினைவுக்கு வந்தது.

“மாமா, அப்பா அம்மாவின்ர சொந்தக்காரர் யாழ்ப்பாணத்தில இருக்கினம். போய்ப் பார்ப்பமே” நான் திடீரென்று கேட்டதும் மாமா திகைத்து விட்டார்.

“என்னடா சொல்லுறாய். வருசக்கணக்கில போக்குவரத்தில்லை. அப்பா, அம்மா சமாதானத்துக்கு அலைஞ்சும் கோவமாய் ஏசிக் கலைச்சவை. அவையளை நம்பி போகப் போறியே. வேண்டாம் கண்ணா” மாமா மறுத்தும் நான் விடவில்லை.

“எனக்கு அப்பா அம்மான்ர ஊரை, வீட்டைப் பார்க்கவேணும் மாமா”

“இப்பிடிச் சொன்னா நான் என்னத்தைச் சொல்லுறது. சரி, நாளைக்குப்
போகலாம். என்ன நடக்குமோ” என்றார்.

“பெரிய இடியையே தாங்கி நிக்கிறன். இனி ஒண்டும் என்னைத் தாக்காது” என்றேன்.

அடுத்தநாள் யாழ்ப்பாணம் போய் இறங்கினோம். ஏற்கனவே மாமாவுக்கு அவர்களின் வீடு தெரியும். அப்பா வீட்டுக்குப் போனோம்.

“மாமா அவையளிட்ட கேக்காமல் திடீரெண்டு போகலாமே”

“கேட்டு வேண்டாமெண்டால் பிறகு போகேலாது. அப்பாவின்ர வீடு பார்க்கவேணும் எண்டாய். வா போவம்”

உள்ளே சென்று கதவின் மணியை அழுத்தினார்.

கதவைத் திறந்தவரைப் பார்த்து
“உன்ர மாமி” என்று மெல்லிய குரலில் சொன்னார்.

“நாங்கள் பரந்தனிலயிருந்து உங்களைப் பார்க்க வந்தனாங்கள். இவன் தேவனின்ர மகன். தேவனும், மைதிலியும் விபத்தில போய் மூண்டு கிழமையாகுது. பேப்பரிலையும் நியூஸ் வந்தது” மாமா சொன்னார்.

“தெரியும். உறவே வேண்டாம் எண்டு அவளை நம்பிப் போனான். பிள்ளையுமில்லை. எடுத்து வளர்த்ததும் தெரியும். அவனையே விட்டிட்டன் பிறகென்ன. அக்கா எண்டு என்னோட பாசமாயிருந்தவனை உன்ர அம்மா வந்து பிரிச்சாள். நீ வந்து இரண்டு பேரையும் மேல அனுப்பிட்டாய். நல்ல ராசியடா உனக்கு. என்ர சொல்லுக் கேளாமல் போனவனின்ர வாழ்க்கை இப்பிடி முடிஞ்சுதே”

இரக்கமின்றிச் சொன்னதைக் கேட்டு மாமா என்கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தார்.

“நொந்து போயிருக்கிறவனை நோகப்பண்ணுதுகள். இதுக்குத்தான் வேண்டாமெண்டு சொன்னனான். வா வீட்டை போவம்”

“அம்மா வீட்டுக்கும் போகவேணும். பிளீஸ் மாமா” என்றேன்.

அம்மா வீட்டுக்குப் போனோம். முற்றத்திலுள்ள பூக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பெரியவரைப் பார்த்து,

“துரையைப் பார்க்க வந்தனாங்கள்” என்றார் மாமா.

“ஐஞ்சு வருசத்துக்கு முதல் வீட்டை, காணியை எனக்கு வித்துப்போட்டு குடும்பமாய் வெளிநாட்டுக்குப் போறதாய்ச் சொல்லி கொழும்புக்கு போனவை தம்பி” என்றார் அவர்.

“வெளிநாட்டுக்கோ….வடிவாய்த் தெரியுமே….. எந்த நாட்டுக்குப் போனவை”

“எனக்குத் தெரியேல. பக்கத்து வீட்டு மாணிக்கத்தோட கதைச்சவராம். கேட்டுப்பாருங்கோ” என்றார்.

“இவன் மைதிலியின்ர மகன். அம்மா வளர்ந்த வீட்டைக் பார்க்க வேணுமாம். பார்க்கட்டும் நான் போய் கேட்டுக்கொண்டு வாறன்” மாமா சொல்லிவிட்டுப் போனார்.

வீட்டைச்சுற்றிப் பார்த்தேன். அம்மா இங்கதானே பிறந்து வளர்ந்திருப்பா…. இந்த நிலத்தில தானே கால் பதித்து நடந்திருப்பா…. திரும்பவும் இந்த வீட்டுக்கு வரத்தானே ஆசைப்பட்டா…… நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது.

மாமா வந்தார்.

“கனடாவுக்கு போயிட்டினமாம். வா போவம்” என்றார்.

திரும்பி வரும்போது என் நிலமையை நினைக்க எனக்கே பரிதாபமாக இருந்தது. அன்பு, பாசம் தெரியாமலே இருந்திருக்கலாம். இப்படி ஏங்கி அலைகிறேனே….

அடுத்த இரண்டு நாளும் வேலையிருப்பதாக மாமா வெளியே போனார். இருபது நாளாய் லீவில் என்னோடயிருக்கிறார். அவருக்கும் எவ்வளவு வேலைகள் இருக்கும். இனி தனிய இருந்து பழகத்தானே வேணும். மூன்றாம் நாள் மாமா,

“கண்ணா, உன்ர அலுவலாய் வவுனியாவுக்குப் போறன் நீயும் வா” என்றார்.

“ஏன் மாமா”

“நீ வாவன் சொல்லுறன்”

வவுனியாவிற்கு பஸ்ஸில் போய் இறங்கி ஓட்டோ எடுத்து அந்த இடத்துக்குப்போக மாலை நாலுமணியாகி விட்டது. வாசல்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தோம். மாமரங்களும் நிழல்தரும் மரங்களும் குளிர்ச்சியைத் தந்தது. அதன் நடுவே இருந்த வீட்டைப் பார்த்தேன்.

‘இனிய வாழ்வு இல்லம்’ என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் நெஞ்சு பக்கென்றது. தாய், தந்தையை இழந்து முதல்தடவை குழந்தையாய் இப்படியொரு இல்லத்துக்கு வந்தேன். மறுபடி இன்றும் வருகிறேனே…..ஏன்….
மாமாவைத் திரும்பிப் பார்த்தேன். வாவென்று சைகை காட்டிவிட்டு உள்ளே செல்ல நெஞ்சு படபடக்க பின்தொடர்ந்தேன்.

“வணக்கம் அம்மா. இது கண்ணன். இவனைப்பற்றித்தான் கதைச்சனான்” மேசையின் முன் அமர்ந்திருக்கும் பெண்மணியிடம் சொன்னார் மாமா.

“வாங்கோ. ரெடியாயிருக்கு. தம்பியும் சம்மதிச்சு கையெழுத்துப் போட்டால் எல்லாம் ஓக்கே” சொல்லிவிட்டு மேசையிலிருந்த மணியை அழுத்தினார்.
என் கையெழுத்தா…..எதுக்கு….! மூச்சு அடைத்துக்கொண்டு வந்தது.

அதேநேரம் அறைக்குள் நுழைந்தவரைப் பார்த்து மாமா,

“அம்மா, இவன்தான் கண்ணன். உங்களின்ர பேரன்” என்று சொல்லிவிட்டு என்னிடம் திரும்பினார்.

“கண்ணா இது அம்மம்மா. உன்ர அம்மாவின்ர அம்மா. சொத்துகளை வித்து வெளிநாட்டுக்கு போறதெண்டு அம்மாவையும் கூட்டிக்கொண்டு போனவை. கனடாவுக்கு குடும்பவிசாவுக்குப் போட மாமாவைக்கு கிடைச்சுது அம்மாவுக்குக் கிடைக்கேல. திரும்பிக் கொண்டு வந்து விட வீடில்லை. இந்த முதியோர் இல்லத்தில விட்டிட்டுப் போயிட்டினம். நாலு வருசமாய் மகன் வருவான்…. தன்னைக் கூட்டிக்கொண்டு போவான் எண்டு எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டு இருக்கிறா. பக்கத்துவீட்டு மாணிக்கமண்ணை சொன்னதும் வந்து பார்த்து உன்னைப்பற்றிச் சொன்னேன். இழப்புகளையும், உன் தனிமையையும் தாங்காமல் அழுதா. உன்னோட வர சம்மதிச்சு உன்னைப் பார்க்க துடிச்சுக்கொண்டிருக்கிறா”

என்னோடு….. எனக்குத்துணையாக…. அம்மம்மாவா…..

உடலெல்லாம் நடுங்க விக்கித்துப்போய் அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.

அம்மாவின் முகச்சாயல், அம்மாவின் கண்களில் தெரியும் அன்பு, என்னைக் காணும்போது மலரும் அம்மாவின் புன்னகையோடு கரங்களை நீட்ட

“அம்மம்மா” என்று அலறியபடி பாய்ந்து கட்டிக்கொண்டேன். அவரின் கண்ணீர்த் துளிகள் என் நெற்றியில் பட்டுத்தெறித்தன.

“என்ர செல்லமே….. நான் இருக்கிறனடா உனக்கு….”

அம்மம்மா தலைவருட அம்மாவே வருடியது போலிருந்தது.

 

நிறைவு…

 

– விமல் பரம்

 

நன்றி : கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்One thought on “உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்

 1. “பெத்த பிள்ளையெல்லாம் பிள்ளைகளுமல்ல…. தத்துப் பிள்ளையெல்லாம் வெத்துப் பிள்ளைகளுமல்ல….” என்பதற்கு இந்தச் சிறுகதையே சாட்சி.
  விரும்பித் திருமணம் புரிந்தால், அவள் விலக்கப்படவேண்டியவள் என்னும் அண்ணனின் வரட்டுக் கெளரவம், அந்த உறவுகளிடம் போவது கேவலம் என்னும் தங்கையின் சுயகெளரவம், கஷ்ட சூழலிலும் பிள்ளை ஆசைப்படுறதை வாங்கிக் கொடுக்கும் பெற்றோரின் பாசம், என்ரபிள்ளை என்னை விட்டுப் போகமாட்டான் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை, பெற்றவர்கள்மீதுள்ள கோபத்தை பிள்ளையிமீது சாடும் மாமியாரின் ஈனத்தனமான வார்த்தைகள், தாயாரை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு 4ஆண்டுகளாக கனடாக் காற்றைச் சுவாசிக்கும் மகன்……..
  அவ்வப்போ காட்சிகள் இதயத்தில் குத்திக்குத்தி வலியைத் தந்தாலும்………………….
  மகளின் பிள்ளை என்னும் ஒரே காரணத்தால், பெற்ற பிள்ளையை விட, பேரப்பிள்ளைப் பாசம் வலுவடைவதைக் காணுமிடம் உச்சத்தை எட்டிப்பார்க்கின்றது.
  அம்மாவின் முகச்சாயல், அம்மாவின் அன்பு, அம்மாவின் புன்னகையோடு நீட்டப்படும் அம்மம்மாவின் கரங்கள், உனக்கு நான் இருக்கிறேன்ரா செல்லம் என்னும் அரவணப்பு……. உச்சத்தை தொடவைக்கிறது.
  சகோதரி விமல்பரம் அவர்களே !
  உங்களுக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள். இந்தப் போட்டியில், 3வது பரிசு பெற்ற இன்னுமொரு எழுத்தாளன், (ஸ்ரீராம் விக்னேஷ்) (bairaabaarath@gmail.com) இரத்தினசிங்கம் விக்னேஸ்வரன் தான் இதை எழுதுகின்றேன்.
  . ஒரு வேளை 3வது பரிசு ஒருவருக்கு மட்டும் என இருந்திருந்தால், அது உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும். உங்களின் எழுத்துப்பணி தொடர, சிறக்க வாழ்த்துகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *