சிக்மண்ட் ஃப்ராய்டு | உளவியலறிஞர்


உணர்வு கடந்த நிலைகளின் தொடர்பு விளைவுகளை ஆராயும் உள நிலைப் பகுப்பாய்வு முறையினைக் கண்டுபிடித்த உளவியலறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு ஆவார். இவர் இன்று, செக்கோஸ்லாவாக்கியாவில் உள்ளதும், அன்று ஆஸ்திரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததுமான ஃபிரீபர்க் நகரில் 1856 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய நான்கு வயதிலேயே இவரது குடும்பம் வியன்னாவில் குடியேறியது. அங்குதான் இவர் தமது ஆயுள் முழுவதையும் கழித்தார்.

பள்ளியில் ஃப்ராய்டு மிகச் சாதாரண மாணவராக விளங்கினார். வியன்னா பல்கலைக் கழகத்தில் 1881 ஆம் ஆண்டில் இவர் மருத்துவ பட்டம் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகள் இவர் உடலியல் ஆராய்ச்சிகள் நடத்தினார். பின்னர், நரம்பியல் மருத்துவத்தில் தனியாகத் தொழிலாற்றி வந்த ஓர் உளவியல் மருத்துவ மனையில் பணியில் சேர்ந்தார். புகழ் பெற்ற ஃபிரெஞ்சு நரம்பியலறிஞர் ஜீன் சார்க்கோட் என்பாருடன் பாரிசில் பணியாற்றினார். வியன்னா மருத்துவ வல்லுநர் ஜோசப் பிராயர் என்பவருடன் இவர் சிறுது காலம் பணிபுரிந்தார்.

உளவியல் பற்றிய தமது கொள்கைகளை ஃப்ராய்டு படிப்படியாக வகுத்துக் கொண்டு வந்தார். இசிவு நோய் பற்றிய ஆராய்ச்சி (studies in Hysteria) என்ற தமது முதலாவது நூலை பிராயருடன் கூட்டாகச் சேர்ந்து எழுதி 1895 இல் வெளியிட்டார். நரம்புக்கோளாறு காரணமாகப் பெண்டிரின் உடல் உளப் பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு நோய் பற்றி இந்நூல் ஆராய்கிறது. “கனவுகளின் பொருன்கோள்” என்ற இவரது அடுத்த நூல் 1900 ஆம் ஆண்டில் வெளியாகியது.

இது இவருடைய நூல்களிலேயே மிக முக்கியமான தற்சிந்தனை வாய்ந்த நூலாகக் கருதப்படுகிறது. இந்நூல் முதலில் மெதுவாவே விற்பனையாகிய போதிலும், இது இவருடைய புகழைப் பெருமளவுக்கு உயர்த்தியது. தொடர்ந்து வேறு பல முக்கிய நூல்கள் வெளி வந்தன. அமெரிக்காவில் 1903 ஆம் ஆண்டில் இவர் தொடர்ச் சொற்பொழிவுகள் ஆற்றியபோது, ஏற்கனேவே இவர் உலகப் புகழ் பெற்றிருந்தார்.

வியன்னாவில் 1902 ஆம் ஆண்டில் “உளவியல் விவாதக் குழு” ஒன்றை அவர் அமைத்திருந்தார். இக்குழுவின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராக விளங்கியவர் ஆல்ஃபிரடு ஆட்லர் ஆவார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் புகழ்பெற்ற கார்ல் ஜங் இக்குழுவில் உறுப்பினராகச் சேர்ந்தார். ஆட்லர், ஜங் ஆகிய இருவருமே பிற்காலத்தில் புகழ்பெற்ற உளவியலறிஞர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஃப்ராய்டு திருமணம் புரிந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இவருடைய வாழ்நாளின் பிற்பகுதியில் இவரது தாடை எலும்பில் புற்று நோய் கண்டது. அதைக் குணப்படுத்துவதற்கு இவருக்கு 1923 முதற்கொண்டு 30 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நோயின் வேதனைக்கிடையிலும் இவர் தொடர்ந்து கடுமையாக உழைத்தார். இவர் நோயுற்றிருந்த இந்தப் பிந்திய ஆண்டுகளில்தான் நாஜிகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்தனர். அப்போது 82 வயதை எட்டியிருந்த ஒரு யூதரான ஃப்ராய்டு லண்டனுக்குத் தப்பியோட நேர்ந்தது. அடுத்த ஆண்டிலேயே அங்கு அவர் காலமானார்.

உளவியல் கோட்பாடு வளர்ச்சிக்கு ஃப்ராய்டு ஆற்றிய தொண்டு அளப்பரியதாகும். அவருடைய சாதனையைச் சுருங்கக் கூறுவதே மிகக் கடினம். மனித நடத்தையில் நனவிலி மனச் செய்ற்பாங்குகளுக்கு இவர் மிகுந்த முக்கியத்துவமளித்தார். இந்தச் செயற்பாங்குகள் எவ்வாறு கனவுகளில் உள்ளடக்கத்தைப் பாதிக்கின்றன என்பதையும், நாத்தவறுகள், பெயர்களை மறந்து போதல், தானே விபத்துகளுக்குள்ளாதல், நோயுறுதல் போன்றவற்றுக்கான கராணங்களையும் இவர் விளக்கினார்.
மனநோய் குணப்படுத்துவதற்குரிய ஒரு முறையாக உள நிலைப் பகுப்பாய்வு முறையை ஃப்ராய்டு கண்டுபிடித்தார். மனித ஆளுமையின் கட்டமைப்பு பற்றிய கோட்பாடு ஒன்றையும் இவர் வகுத்தமைத்தார். கவலை, தற்காப்பு இயக்க முறை, இனப்பெருக்க ஆற்றலழிவு, இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல், உணர்ச்சி மேம்பாடு ஆகியவை பற்றிய உளவியல் கோட்பாடுகளையும் ஃப்ராய்டு உருவாக்கினார். அவருடைய நூல்கள் உளவியல் கோட்பாட்டில் மக்களுக்குப் பெருமளவில் ஆர்வத்தைத் தூண்டின.

இவருடைய பல கொள்கைகள் மிகுந்த சர்ச்சைக்குரியனவாக இருந்தன. இக் கொள்கைகளை இவர் கூறியது முதற்கொண்டே இவற்றின் மீது பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அடக்கியொடுக்கப்பட்ட பாலுணர்ச்சி, மனநோயை அல்லது நரம்புக் கோளாறுகளை உண்டாக்குவதில் பெரும் பங்கு பெறுகிறது என்னும் கொள்கையை வலியுறுத்தியதற்காகவே ஃப்ராய்டு பெரும்புகழ் பெற்றார் எனலாம். (இந்தக் கருத்துக்கு அறிவியல் முறையான ஆதாரமளிக்க ஃப்ராய்டு தமது எழுத்துகளின் வாயிலாக முயன்றார். எனினும், இக் கருத்தை முதலில் கூறியவர் ஃப்ராய்டு அன்று). “பாலுணர்ச்சியும், சிற்றின்ப வேட்கையும் குமரப் பருவத்தில் தான் தோன்றுகிறது என்பது தவறு. இந்த உணர்வுகள் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே தோன்றி விடுகின்றன” என்ற கருத்தினையும் இவர் வலியுறுத்தினார்.
ஃப்ராய்டின் கொள்கைகள் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்து நீடித்த போதிலும், மானுடச் சிந்தனையின் வரலாற்றில் அவர் ஒரு கோபுரமாக உயர்ந்து நிற்கிறார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. அவருடைய உளவியல் கொள்கைகள் மனித மனம் பற்றிய தமது கோட்பாடகளின் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன.

அவர் அறிமுகப்படுத்திய பல கொள்கைகளும், பயன்படுத்திய கலைச் சொற்களும் பேரளவில் வழக்குக்கு வந்தன. தனிப்பட்ட ஒருவரின் “உணர்வுந்தல்”, “நான்” என்னும் ஆணவத்தைக் குறிக்கும் “தன்முனைப்பு” கீழ் மனத்தின் செயலை இடித்துரைத்துக் கட்டுப்படுததும் தன்மை வாய்ந்த “மேல் மனம்” எதிர்பாலராகிய பெற்றோர் வகையில் பிள்ளைகளுக்கு உட்செறிவாக இருப்பதாகக் கருதப்படும் அடங்கிய “உள்ளுணர்ச்சி” மரண விழைவு போன்ற சொற்களை ஃப்ராய்டு வழக்காற்றுக்குக் கொண்டு வந்தவையாகும்.

உளநிலைப் பகுப்பாய்வு, மிகுந்த செலவு பிடிக்கக் கூடிய ஒரு சிகிச்சை முறையாகும். அந்த முறை பல சமயங்களில் தோல்வியடைவதும் உண்டு. எனினும், இந்த முறை மிகப்பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பதும் உண்மையாகும். ஃப்ராய்டின் கொள்கைகளைப் பின்பற்றி உளப்பாங்காராய்ச்சி செய்யும் உளவியலறிஞர்கள் பலர் கூறுவதற்கு மாறாக, மனித நடத்தையில் அடக்கப்பட்ட பாலுணர்ச்சி, ஃப்ராய்டுக்கு முந்திய உளவியலறிஞர்களில் பெரும்பாலோர் கருதியதைவிட மிகப் பெருமளவு பங்காற்றுகிறது என்பதில் ஐயமில்லை. அதே போன்று நடத்தையில் நனவிலி மனச் செயற்பாங்கின் பங்கு ஃப்ராய்டுக்கு முன்பு குறைத்து மதிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், இன்று, மனித நடத்தையில் நனவிலி மனச் செயற்பாங்கு மிக முக்கியமான பங்கினை வகிக்கிறத என்று இன்றைய உளவியலறிஞர்களில் பெரும்பாலோர் உறுதியாக நம்புகிறார்கள்.

உளவியல் கொள்கைகளைத் துல்லியமாகக் கூறிய முதல் உளவியலறிஞர் ஃப்ராய்டு என்று கூற இயலாது. அவர் கூறிய கொள்கைகள் நீண்ட காலப் போக்கில் ஏறத்தாழச் சரியாக இருக்கும் என்றும் கருத முடியாது. எனினும், நவீன உளவியல் கோட்பாடுகளின் வளர்ச்சியில் ஃப்ராய்டு மிகுந்த செல்வாக்குப் பெற்றவராகவும், முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் விளங்கினார் என்பதை மறுப்பதற்கில்லை. இவர் சாதனை புரிந்த துறையின் மகத்தான விளைபயனைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தப் பட்டியலில் அவர் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு முற்றிலும் தகுதிப் படைத்தவர் ஆவார்.

 

நன்றி : முத்துமணிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *