அதிசயமான மவுனப் படங்கள்!


திரை உலக அதிசயங்களும் அற்புதங்களும் 

 

இந்தியாவில் முதன்முதலாக சினிமா காட்சி மும்பை வாட்சன் ஓட்டலில் 7.7.1896 அன்று தான் மக்களுக்கு காட்டப்பட்டது.

சினிமாவைக் கண்டுபிடித்த பிரஞ்சு தேசத்தின் லூமியர் சகோதர்களின் ‘‘சினிமோட்டோகிராப்’’ படங்கள் தான் திரையிடப்பட்டன. ‘இந்த நூற்றாண்டின் இணையற்ற சாதனை’ என்றும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சினிமாவில் பிம்பங்கள் முன்னும் பின்னும் அசையக் கூடியதாயிருந்தது. தொழில்நுட்பம் வளராத அக்காலத்தில் ஒலியை இந்த சலன ஒளிக்காட்சிகளுடன் இணைத்துக் காட்ட இயலவில்லை. இத்தகைய பேசாத சலனப்படங்கள் தான் பொதுவாக ‘மவுனப்படங்கள்’ என்று அழைக்கப்பட்டன.

படங்கள் பேசாததால் இம்மொழிப்படமென்று வரையறுக்க  முடியாது. எனினும் எந்த மாநிலத்தில், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டதோ அந்த நாட்டின் படமென்றே கொள்ளவேண்டியிருந்தது.

இந்தியாவில் இத்தகைய மவுனப்படங்கள் தான் தயாரிக்கப்பட்டு மக்களிடையே 1931–ம் ஆண்டு வரை சஞ்சரித்தன.

 

பேசும் படம்

 

இந்திய சினிமா வரலாற்றில் 1931–ம் ஆண்டில் அர்தேஷ் இரானியின் தயாரிப்பில் எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் தமிழ்நாட்டில் ‘காளிதாஸ்’ என்ற படம் பேசும் படமாக வெளிவந்தது. பின்னர் விஞ்ஞான வளர்ச்சியால் சினிமா துரிதகதியில் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. தற்போது தொழில்நுட்ப உத்திகளின் உதவியால் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு சினிமா பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. கலை, கேமரா, ஸ்பெஷல் எபெக்ட், அயல்நாட்டு படப் பிடிப்பு, டிஜிட்டல் ஒலி, நவீன மேக்கப், நடிப்பு, இசை, இயக்கம் என்று சினிமாவின் பல்வேறு துறைகள் விரிந்து, பரந்து,  இறக்கை கட்டி பறக்கின்றன.

ஆனால் மேற்சொன்ன எல்லா அம்சங்களிலும் இத்தகைய மகத்தான சாதனைகளை எவ்வித தொழில்நுட்ப துணையுமின்றி மவுனப்படங்கள் சாதித்திருக்கின்றன என்றால் அதிசயமாக இருக்கிறது அல்லவா. அத்தகைய ஒரு சில மவுனப்படங்களிலிருந்து அதிசயச் செய்திகள், காட்சிகள், பற்றி இங்கே காணலாம்.

 

ராஜா, ராணி கதைகள்

 

இந்தியாவின் முதல் முழுநீள மவுனப்படமே ஒரு ராஜா, ராணி கதைதான். டி.ஜு.பால்கே தயாரித்த இப்படத்தின் பெயர் ‘ராஜா ஹரிச்சந்திரா’ 1912–ம் ஆண்டில் இது வெளிவந்தது. படத்தின் கதையை நாடறியும்.

படம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. படத்தின் இரண்டாவது பாகத்தில் தான் ராஜா ஹரிச்சந்திரா காட்டுக்கு வேட்டையாடச் செல்வதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் படம் சித்தரிக்கிறது.

படத்தின் முதல் பாதியில் பால்கே நடிகர்களை இயக்குவது, படத்தை தொகுப்பது மற்றும் காட்சிக்கான அரங்கு நிர்மாணங்களை கண்காணிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன.

 

பிரமாண்டமான மவுனப்படம்

 

1916–ம் ஆண்டில் அமெரிக்காவில் ட்டி.டபுள்யூ. கிரிப்பத் என்பவர் தயாரித்து இயக்கி வெளிவந்த மவுனப்படம் ‘இன்டாலரன்ஸ்’ (சகித்துக்கொள்ள முடியாதது). பழம்பெரும் பாபிலோன் பைபிள் காலத்து ஜூடியா, மத்திய கால பிரான்ஸ் மற்றும் புரதான காலத்து அமெரிக்கா போன்ற வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த நான்கு கதைகளை இணைத்து கிரிப்பத்  இப்படத்தை தயாரித்தார்.

இப்படத்தை கிரிப்பத் மிகுந்த பொருட்செலவில் உலகத்தின் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக உருவாக்கினார். படத்தில் தோன்றும் கதாபாத்திரங்களின் கண்ணைப் பறிக்கும் ஆடைகள், ஒப்பனைகள், நினைவு மண்டபங்கள் அந்தந்த காலத்திற்கே  ரசிகர்களை கொண்டு சென்றன.

பின்னாளில் தமிழில் வெளிவந்த பேசும் படமான சந்திரலேகாவில் முரசு நடனத்திற்காக உருவாக்கப்பட்ட அரண்மனைக் காட்சியில் இந்த பாபிலோனியக் கோவிலின் சாயல் தெரிந்தது.

201606171556077013_MiraculouslyDumbest-films_SECVPF

இதிகாச, புராண மவுனப்படங்கள்

 

கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானவை இதிகாசங்களும், புராணங்களும். இவைகளைக் கருவாகக் கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தங்கள் மதப் பெருமையை உணர்த்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்கினார்கள்.

தென்னிந்தியாவில் ஆர்.நடராஜமுதலியார், இந்து மத புராண, இதிகாசங்களின் அடிப்படையில் 1917–ம் ஆண்டில் ‘கீசகவதம்’ என்ற மவுனப்படத்தை தயாரித்து பெரிய வெற்றி கண்டார்.

இதுதவிர ‘மயில் ராவணன்’, ‘ருக்மணி கல்யாணம்’, ‘சிவலீலா’ போன்ற படங்களையும் அவர் தயாரித்தார். தனது தயாரிப்பிலே கலை நுணுக்கத்திலே சிறந்தது 1917–ம் ஆண்டில் வெளிவந்த ‘துரோபதை வஸ்திராபரணம்’ என்ற படம் தான் என்று ஒரு பேட்டி யில் அவர் கூறியுள்ளார். இதிலிருந்தே கலைநுணுக்க கண்காணிப்பில் மவுனப்பட காலத்திலேயே எவ்வளவு கவனம் கொண்டனர் என்பது புலனாகிறது.

வட இந்தியாவிலேயே 1918–ம் ஆண்டு ‘ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா’ என்ற மவுனப்படம் திரையிடப்பட்டது. இப்படத்தில் கம்சனின் தலை உடலிலிருந்து பிரிந்து மேலே சென்று திரும்பவும் உடலுடன் சேர்ந்து விடுவது போன்ற தந்திரகாட்சி இடம்பெற்றிருந்தது. 1919–ம் ஆண்டில் இன்னும் ஒருபடி மேலே போய் நீரில் வீறுகொண்டு படம் எடுத்தாடும் ஐந்துதலை பாம்பை, குழந்தை கண்ணன் அடக்கி அதன்மீது நர்த்தனமாடும் அபூர்வகாட்சி, ‘காளியமர்த்தன்’ படத்திற்காக அற்புதமாக படமாக்கப்பட்டது.

இந்தியாவில் இப்படியிருக்க மேலைநாடுகளில் ஏசு பிரானின் பெருமையை விளக்கும் பல படங்கள் சினிமாவின் தொடக்க காலத்தில் மவுனப்படங்களாக வெளிவந்தன. இவற்றில் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட படங்களில் முக்கியமானவை ‘‘டென் கமான்ட்மென்ட்ஸ்’’ (பத்து கட்டளைகள்) மற்றும் ‘‘பென்ஹர்’’ ஆகும்.

1976–ம் ஆண்டில் செசில். பி. டெமில்லி தயாரிப்பில் சார்ல்டன் ஹெஸ்டன் மற்றும் யூல் பிரைனர் நடித்து வெளிவந்த பேசும்படம் தான் ‘டென் கமான்ட்மென்ட்ஸ்’. இப்படத்தில் கடல்பிரிந்து ஏசு அபிமானிகளுக்கு வழிவிடுவது மற்றும் இறைத்தூதரான மோசசுக்கு மலைமுகட்டில் இறைவன் ஏசுபிரான் தனது பத்து கட்டளைகளை ஒரு பாறையின் மீது நெருப்பு பிழம்பு ஒளிக்கற்றைகளால் பதியச் செய்து அருவமாக மோசசிடம் ஒப்படைக்கும் காட்சிகள் புல்லரிக்க வைத்தன.

இதில் சுவாரசியமான செய்தி என்னவென்றால் இதே தயாரிப்பாளரான செசில்.பி. டெமில்லி 1923–ம் ஆண்டில் இதே இதிகாசக் கதையை மேற்குறிப்பிட்ட அற்புத காட்சிகளுடன் இதே பெயரில் மவுனப்படமாகத் தயாரித்து வெற்றி கண்டவர். இப்படத்தில் தியோடர் ராபர்ட்ஸ் என்பவர் மோசசாக நடித்திருந்தார்.

 

பென்ஹர்

 

இதேபோல் கிறிஸ்துவ புராணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்த மற்றொரு படம் ‘‘பென்ஹர்’’. 1959–ம் ஆண்டில் இப்படத்தில், சார்ல்டன் ஹெஸ்டன் பென்ஹராக நடித்திருந்தார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையுடன் பிணைந்த ஜெருசலத்தைப் பற்றிய ஒரு கதை. இப்படம் வில்லியம் வைலர் என்ற பட அதிபரால் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிய ஒரு பேசும் படம்.

இப்படத்தின் மையமே ஒரு ரதப்போட்டி காட்சிதான். குவியமான பந்தய அரங்கம், மையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிரமாண்டமான சிலைகள், ஆக்ரோஷத்தோடு பிளிரும் குதிரைகள், அவைகள் இழுத்துச் செல்லும் கனல் தெறிக்கும் ராட்சத சக்கரங்கள், ஓடு பாதையில் தவறிவிழுந்து உடல் சிதைந்த பரிதாபத்திற்குரிய போட்டி வீரர்கள், இப்படி தெறிக்கும் ஒரு காட்சி, ஆபத்தும் ஆரவாரமும் உட்கொண்ட கொடூரப் போட்டி.

ஆனால் 1959–ம் ஆண்டில் வெளிவந்த பேசும் படமான ‘‘பென்ஹர்’’ உண்மையில் 1925–ம் ஆண்டில் வெளிவந்த மவுனப்படமான ‘‘பென்ஹரின்’’ மறுபதிப்பே என்பது வியப்பானதொரு செய்தி. இப்படத்தில் ஜிடே பென்ஹராக ராமோன் நவோரா என்ற நடிகர் நடித்திருந்தார். படத்தை லூயி மேயர் என்பவர் தயாரித்திருந்தார்.

படத்தில் ரோமாபுரியினரிடம் யூதர்களின் போராட்டத்தை படம் நேர்த்தியாக வெளிப்படுத்தியது. இப்படத்தின் உயிர் நாடிக்காட்சி யும் ரதப்போட்டி தான். இக்காட்சி பிரமாண்ட போராட்ட அரங்கத்தில் பிரமிக்க வைக்கும் வகையில்  படமாக்கப்பட்டிருந்தது.

இந்த மவுனப்பட ரதக்காட்சியே பின்னாளில் வெளிவந்த பேசும்பட பென்ஹருக்கு எல்லா வகையிலும் வழிகாட்டியாக இருந்தது. அந்த வகையில் டெக்னிக்கல் யுக்திகள், நவீன கேமராக்கள் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்ட மவுனப்பட பென்ஹர், பின்னாளில் பேசும்படமாக மறுபிறவி எடுத்த பென்ஹருக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பதே உண்மை.

 

மவுனப்படங்களில் முத்தக்காட்சிகள்

 

இந்திய சினிமாவைப் பொறுத்தமட்டில், அதிலும் குறிப்பாக தென் இந்திய சினிமாவைப் பொறுத்தமட்டில் முத்தக்காட்சிகள் அன்று முதல் இன்று வரை விவாதத்திற்குரிய ஒரு பொருளாகவே இருக்கிறது. கதையின் அவசியம் கருதி சில படங்களில் முத்தக்காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

சமீபத்தில் ‘ஹேராம்’, ‘வல்லவன்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற சில படங்களில் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சில படங்களில் அரசல் புரசலாக முத்தம் கொடுப்பதாக காட்சிகள் இன்றைய படங்களில் வெளிவந்துள்ளன. ஆனால் இத்தகைய முத்தக்காட்சிகள் மவுனப்பட காலத்தில் வெளியான படங்களில் இடம்பெற்றிருந்தன என்பது பொதுவாக மக்கள் மத்தியில் எதிர்பார்க்காத ஒரு செய்தி.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் ‘ஸ்ரீராஜராஜேஸ்வரி பிலிம்ஸ்’ சார்பில் ‘மார்தாண்டவர்மா’ என்ற மவுனப்படத்தை தயாரித்தார். பி.வி.ராம் என்பவர் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் ‘ராயல்டி’ தகராறினால் கோர்ட்டின் கண்காணிப்பிலிருந்தது. தயாரித்து நீண்டநாள் முடங்கிக் கிடந்த இந்த மவுனப்படம், 1931–ம் ஆண்டில் பிரச்சினைகள் தீர்ந்து வெளியிடப்பட்டது.

இந்தப்படத்தில் வி.நாயக் என்ற நடிகரும், பத்மினி என்ற நடிகையும் ஆரத்தழுவி முத்தமிடும் காட்சி காட்டப்படுகிறது. தென்னிந்திய மவுனப்படங்களில் இன்றுவரை உயிரோடு உலவும் ஒரே மவுனப்படம் ‘மார்த்தாண்டவர்மா’ மட்டும் தான்.

எனவே இந்தக்காட்சி இன்றுவரை நீடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1930–ம் ஆண்டில் ‘த்ரோ ஆப்டைஸ்’ (பகடை விளையாட்டு) என்ற ஒரு படம். பகடை விளையாட்டை சூதாட்டமாக விளையாடுவது தவறு என்ற கருத்தினை இந்த மவுனப்படம் சொல்லாமல் சொல்லுகிறது. இப்படத்தில் சாருராய் என்ற நடிகரும், சீதாதேவி என்ற நடிகையும் தீவிரமாய் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் பின் இத்தகைய படங்கள் முன்னோடியாய் பேசும் பட தொடக்க காலத்தில் வெளிவந்த ‘கர்மா’ திரைப்படத்தில் தேவிகா ராணி, ஹிமான் ஸீராய் முத்தமிடும் காட்சிகள் தொடர்ந்தது.

 

பேய்ப்படங்கள்

 

அமாவாசை, நள்ளிரவு, கும்மிருட்டு, நாய்கள் ஓலம், நெடிய கரிய உருவம், வெளுத்த கண்கள், கால்கள் இல்லை, ஜல்ஜல் ஒலி, ஆரவாரம், பேரிரைச்சல், கரகரத்த கட்டைக்குரல், கட்டுக் கடங்காத கூக்குரல் இப்படி கதிகலங்க வைத்தது பேய்ப்படங்கள். பேயை பகடை காயாக்கி நையாண்டி செய்து ரசிகர்களை சிரிக்க வைக்கும் பேய்ப்படங்களும் தற்போது வரத்தான் செய்கின்றன. ஆனால் மவுனப்படகாலத்திலும் பேய்ப்படங்களும் சாத்தானைப் பற்றிய படங்களும் எடுக்கப்பட்டு மக்களை பீதி அடையச் செய்தனர்.

பேய்ப்படங்களுக்கு அடிப்படை தேவையான பயங்கர ஒலி, ஆரவாரம், திகிலூட்டும் பேய் நடமாட்ட ஒலி போன்ற இவை ஏதும் இல்லாத மவுனப்படங்களில் பேயின் பயங்கரத்தை கொண்டுவருவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

‘காட்சிகளினால் அவைகளை சித்தரிக்க முடியும்’ என்று அக்கால பேய்ப்படங்கள் நிரூபித்துள்ளன. 1926–ம் ஆண்டில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட மவுனப்படம் ‘ப்பாஸ்ட்’. மூர்னா என்பவர் இயக்கியது. அமானுஷ்யமான சக்திகளின் வெறியாட்டத்தை பற்றிய படம் இது. இடைக்காலத்தில் மக்கள் மனதில் குடிகொண்ட மதவெறியும் முழுநம்பிக்கைகளுமே படக்கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே சாத்தான் வசமிருந்து ‘பிளேக்’ எனும் கொடிய நோயால் தாக்கப்பட்டு நலிந்துபோன கிராமம் காட்டப்படுகிறது. கும்மிருட்டில் அக்கிராமத்தை நோக்கி கருத்த அங்கி கள் அணிந்த எலும்புக்கூடுகள் கோரமான உருவத்துடன் வெறி நாய்கள் ரூபம் கொண்ட நூதனமான விலங்குகள் மீது அமர்ந்து அந்த கிராமத்தை நோக்கி பாய்ந்து செல்லுகின்றன. அவ்விலங்கு கள் ஓடும் வேகத்தை பின் புலத்தில் அமைந்த காட்சிகள் ஓடும் வேகத்தை நகருவதாகக் காட்டி பார்ப்பவர்களை உணர வைத் திருக்கிறது படம்.

இருட்டின் எஜமானர்களான சாத்தான், பேய்கள் வெறியாட்டம் போடுகின்றன. பூமியில் மனித இனத்தைத் தாக்கி அழிக்கின்றன. தோலுரித்த சாத்தான்கள், வால்படைத்த அதன் வாகனங்கள் துணையுடன் மக்களை காப்பாற்ற ஏசுவை பிரார்த்திக்கும் ப்பாஸ்ட் என்ற போதகரை தாக்குகின்றன. இறையருள் பெற்ற ப்பாஸ்ட் சாத்தான்களை துரத்தி அடிக்க முயலுகின்றன. எனவே சாத்தான்கள் பிளேக் நோயாக உருமாறி அவரையும் பிறரையும் தாக்கி கொல்ல முயலுகின்றன. மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிகிறார்கள்.

இந்த சாத்தான் பேய்களின் கொடூரத் தாண்டவம் உச்சகட்டத்தை அடைகிறது. இப்போது நிராயுதபாணியாக நிற்கும் ப்பாஸ்ட் மீது தங்களின் தாக்குதல்களை தொடங்குகின்றன. ப்பாஸ்டின் ஒரே தற்காப்பு ஆயுதம் பாவிகளை இரட்சிக்கும் ஏசுவின் சிலுவை மட்டுமே. இதன் துணைகொண்டு சாத்தான் பேய்களை ப்பாஸ்ட் எப்படி விரட்டி அடித்து துரத்தி மக்களை காப்பாற்றுகின்ற£ர் என்பதே எஞ்சிய படக்கதை. பேய்களின் வெறியாட்டத்தை கதிகலங்கும் வண்ணம் படம் இப்படி வெளிக்காட்டுகிறது. இப்படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு இப்படி எச்சரிக்கை விடப்படு கிறது, ‘‘தைரியமாக இருங்கள்’’.

CFFC2944-4E67-4B4C-91DA-1655C00E4877_L_styvpf

கண் கலங்க வைத்த மவுனப்படம்

 

‘ஜோன் ஆப் ஆர்க்’– 1928–ம் ஆண்டில் தயாரித்த ஒரு மவுனப்படம். பதினைந்தாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாடு இங்கிலாந்தின் வசம் இருந்த நேரம். பிரஞ்சு நாட்டில் ஆர்க் என்ற கிராமத்திலேயே ஜோன் என்ற 19 வயது பெண் வாழ்ந்தாள். தன் நாடு இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழிருப்பதை அறவே வெறுத்தாள். இறையருள் தூண்டுதலால் இங்கிலாந்தை எதிர்த்து போராடி பிரஞ்சு நாட்டை மீட்கத் துணிந்தாள்.

ஒத்த கருத்துடைய பிரஞ்சு மக்களைக் கொண்ட ஒரு படையை திரட்டி, இங்கிலாந்தை எதிர்த்து போராடினாள். மலைமீது மோதி மண்டை உடைந்த கதையாக போரில் ஜோன் படுதோல்வியுற்று கைது செய்யப்பட்டாள். ஜோன் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டது. தன் நாடு விடுதலை பெறவேண்டும் என்பதும், இறையருளுமே தான் போர் தொடுத்ததற்கு காரணம் என்று நீதிமன்றத்தில் ஜோன் தன் நிலையை விளக்கினாள். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றமும், பாதிரியார்களும் சாத்தானின் தூண்டுதலால் தான் ஜோன் போர்தொடுத்தாள். எனவே ஜோனும் ஒரு சாத்தான் தான் என்று முடிவெடுத்து ஜோனை உயிருடன் எரிக்க உத்தரவிட்டது.

கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டாள் ஜோன். பின் அவளது அழகான கூந்தல் மழிக்கப்பட்டது. சோர்ந்து நடக்கவும் திறனின்றிருந்த ஜோனை காவலாளிகள் எரிக்கலத்திற்கு இழுத்துச் சென்றார்கள்.

தனது கடைசி ஆசையாக இயேசுவைத் துதித்து தன்னைத் தீக்கிரையாக்கிக் கொள்ள தயாரானாள் ஜோன். இப்போது ஜோனை காவலாளிகள் எரிக்க தீ இட்டார்கள்.

தீயின் உச்சம், ஜோனின் ஹீனமான வேதனைக்குரல் சில நிமிடங்கள், ஜோன் எரிந்து சாம்பலானாள். 1928–ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் 1981–ம் ஆண்டில் நார்வேயிலிருந்து ஒரு மனநல மருத்துவக்கூடத்தில் எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்டது. சிதைந்திருந்த இப்படப்பிரதியை நன்கு செப்பனிட்டு 1985–ம் ஆண்டில் தான் மவுனப்படமாக திரையிடப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் கார்ல் டி.ஹெச். டிரேயர் ரசிகர்களின் பாராட்டுக்குரியவர்.

 

நிலவுக்கு போன மவுனப்படம்

 

இன்று உலகமெங்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக செயல்பட்டு மனிதன் பல்வேறு கோள்களைப் பற்றி ஆய்வு நடத்துகிறான். குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் மனிதனை முதன்முதலாக நிலவுக்கு அனுப்பி மகத்தான சாதனை புரிந்தது.

இந்த விண்வெளி விஞ்ஞான சாதனையை அடிப்படையாக கொண்டு மனதின் நிலவுக்குட்பட்டான போன அனுபவத்தை தத்ரூபமாக திரைப்படம் எடுத்து வெற்றி பெற்று வருகிறார்கள். ‘மார்ஷியல்’, ‘இன்டர்செல்லர்’, ‘கிராவிடி’ போன்ற திரைப்படங்கள் நவீன விஞ்ஞான வளர்ச்சியை திரையில் புகுத்தி அற்புதமான விண்வெளிப் பயணத்தை பற்றி முப்பரிமாணங்களாகவும் படம் எடுத்து, திரையிட்டு மக்களை திகைக்க வைக்கிறார்கள்.

ஆனால் மவுனப்பட ஆரம்ப நாட்களிலேயே பிரபஞ்ச இதிகாசங்கள், விண்வெளி ஆய்வுகள் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. அந்த அளவுக்கு சினிமா கர்த்தாக்களின் தொலைநோக்குப் பார்வை மேலிட்டிருந்தது.

1902–ம் ஆண்டில் ஜார்ஜ் மெலீஸ் என்பவர் ‘டிரிப் டூ மூன்’ (நிலவுக்கு பயணம்) என்ற 14 நிமிடங்களே ஓடக்கூடிய ஒரு மவுனப் படத்தை எடுத்து வியக்க வைத்தார். 1929–ம் ஆண்டில் ஜெர்மனியில் ப்ரிட்ஸ்லாங் என்பவர் ‘உமன் இன் தி மூன்’ (நிலவில் பெண்) என்ற படத்தை எடுத்தார்.

ஒரு பெண் ராக்கெட் மூலம் விண்வெளியில் நிலவுக்கு மேற்கொண்ட பயணத்தை ஒரு முழுநீள மவுனப்படமாக தயாரித்து வெளியிட்டார். விண்வெளி தளத்திலிருந்து ஏவப்படும் ராக்கெட், அதில் பறந்து செல்லும் பெண், நிலவை அடைந்ததும் அதில் உலாவும் பெண், அதில் அவள் மேற்கொண்ட ஆராய்ச்சி, பின் பாதுகாப்புடன் பூமி திரும்பும் சாமர்த்தியம் என்ற பல அதிசய காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்தப்படம் ப்ரிட்ஸ் லாங்கின் கனவுப் படமென்றும், நிலவுப் பயணத்தை மக்கள் கண்முன் இயல்பாக நிலைநிறுத்துவதுமே அவரது குறிக்கோள் என்றும் திரை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தன் முயற்சியில் ப்ரிட்ஸ்லாங் முழுமையாக வெற்றி பெற்றது உண்மை.

 

பேசாத ஷேக்ஸ்பியரின் படங்கள்

 

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் உலக பிரசித்தம். ஷேக்ஸ் பியரின் நாடகங்கள் பின்னாளில் உலகின் பல நாடுகளில் படமாக்கப்பட்டு வெற்றியை குவித்தன.

1950–1960–ம் ஆண்டுகளில் வந்த ‘டெம் பெஸ்ட்’, ‘ஆஸ் யூ லைக் இட்’, ‘டேமிங் ஆப் எ ஸ்ஸீரு’ போன்ற படங்களை குறிப்பிடலாம். இவைகளெல்லாம் பேசும் படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றன.

 

இந்த வெற்றிகளுக்கு அச்சாணியாக அமைந்தது ஷேக்ஸ்பியர் தீட்டிய வசனங்களே.

படத்திற்கு ஆதாரமான வசனமின்றி ஷேக்ஸ்பியர் நாடகங்களை படமாக்க வாய்ப்பில்லை. எனினும் மேலை நாடுகளில் ஷேக்ஸ் பியரின் நாடகங்களை மவுனப்படகாலத்திலேயே வசனமின்றி எடுத்து வெற்றி கண்டார்கள். பாத்திரங்கள் பேசவேண்டிய வசனங்களை முகபாவனைகளிலேயே காட்டி விளக்கினார்கள். இடைஇடையே கதைப் போக்கினை எழுத்தில் காட்டினார்கள். இத்தகைய பேச இயலாத ஷேக்ஸ்பியர் படங்களையும் மக்கள் பார்த்து ரசித்தனர்.

 

 

நன்றி : தினத்தந்திLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *