மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும்: சிவாஜி


மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் மாவீரர் நாள் நினைவுகூரல் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஒரு பதற்றம் தேவையற்றதாகும்.

உலகில் எங்கும் இறந்தவா்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்க முடியாது என்பதுடன் அது உலகில் பல நாடுகளில் ஒரு வழக்கமாகவும் உள்ளது. இந்நிலையில் விடுதலைப் போரில் உயிரிழந்த எம் உறவுகளை நினைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது.

தென்னிலங்கையில் ஜே.வி.பி. புரட்சிகளில் உயிரிழந்தவர்களுக்கு கார்த்திகை வீரர்கள் தினம் என்ற ஒரு நாளில் நினைவுகூரல் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் தமிழர்கள் எங்களுடைய மாவீரர்களை நினைவுகூருவதில் என்ன தவறு?

எனவே எந்த தடைவிதிக்கப்பட்டாலும் மாவீரர்களை நினைவுகூருவதில் இருந்து மக்கள் தவறக்கூடாது. வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரா்களுக்கான நினைவுகூரலை நடத்த பொலிஸார் சில தடைகளை விதிக்கின்றனர். ஆனால் அமைதியாக மாவீரர் நாள் நினைகூரல் நடக்கும்” என்றார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *