செர்னோபில் அணு உலை விபத்தும், வாழ்தலின் மகத்துவமும்


அணு உலை ஒன்றில் இருந்த நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்து தீப்பிடித்தது. பின் வெடிக்கவும் செய்தது. இதனால் 20 வகையான கதிர் வீச்சுப் பொருட்கள் காற்றுடன் கலந்தன. உடனடியாக 30 பேர் இறந்தனர். விபத்தின் பின் விளைவுகளால் இறந்தவர்கள் 2,000 பேர்.  ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் இடம் பெயர நேரிட்டது.

உக்ரேனிய அரசாங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்று நின்றது. உக்ரேனிய அரசிற்கு மட்டுமல்ல அப்போது எந்த அரசிற்கும் தெளிவாகத் தெரியாது, இதுபோல் ஓர் அசாம்பாவிதம் நடந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்குமென்றும், அதற்கு தீர்வு என்னவென்றும். நமது பல கண்டுபிடிப்புகள் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கிக்கொண்டதைப் போல்தான் இருக்கின்றன.

350

நிலையற்ற வாழ்க்கை:

இன்று உலகத்திலேயே பெரிய அருங்காட்சியகம் செர்னோபில். வளர்ச்சியின் அழிவை நமக்குக் காட்டும் இடம் செர்னோபில். வாழ்வின் மகத்துவத்தைக் காட்டும் ஊர் செர்னோபில். கடந்த சில ஆண்டுகளாக செர்னோபில் அணு உலை பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட  மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

டொமினிக் ஓர்ஃபானஸ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளாக செர்னோபிலைப் பார்வையிட விரும்புபவர்களுக்காக சுற்றுலா ஏற்பாடு செய்து வருகிறார். அவர் சொல்கிறார். “செர்னோபிலை பார்வையிட்ட மக்கள் வாழ்தலின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளத் துவங்கி உள்ளனர். அவர்களுக்கு இந்த வாழ்வு நிலையற்றது என்பதை செர்னோபில் உணர்த்துகிறது…” என்கிறார்.

இயற்கை நமக்கு பேராசான்:

30 ஆண்டுகளில் செர்னோபில் நிறைய மாறிவிட்டது. கருகிய மரங்கள் அதன்  பச்சையத்தினை மீட்டெடுத்துவிட்டன. மண் வாசனையைக்கூட உணர முடிவதாக,  பார்வையிட்ட மக்கள் சொல்கிறார்கள். இயற்கை தன்னை புதுப்பித்துக் கொண்டுவிட்டது. ஆனால், மனிதனின் கண்டுபிடிப்புகளான தொடர் வண்டிகள், ஆலைகள் இன்னும் அப்படியே துருப்பிடித்துதான் இருக்கின்றன.

மனிதனின் பேராசை அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கத் துடிக்கிறது. ஆனால், தொடர்ந்து இயற்கையின் முன் பரிதாபமாக மனிதன் தோற்றுக்கொண்டிருக்கிறான்.  இயற்கை நமக்கெல்லாம் பேராசான் என்பதற்கு அங்கு படரும் பச்சைய வாசனையும், துருப்பிடித்துப் பரிதாபமாக இருக்கும்  தொடர் வண்டியும்தான் நல்ல உதாரணம்.

தேவைகள் எல்லையற்றது:

மனிதனின் தேவைகள் எல்லையற்றவை. நமக்கு வாகனங்கள், கணினி என எல்லாம் தேவை. அதற்கு மின்சாரம் தேவை, உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் மின்சாரத் தேவைக்கு தீர்வாக இன்று முன்வைப்பது அணு உலைளைத்தான். ஒரு பக்கம் அரசாங்கங்களை மாற்று மற்றும் நீடித்த மின்சார உற்பத்தியை நோக்கித் திருப்ப நிர்பந்திக்க வேண்டும். அதே நேரம், நம் மின்சாரப் பயன்பாடுகளையும் குறைத்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு முனைகளையும் சந்திக்க வைப்பதுதான் உன்னத வாழ்விற்கான நிரந்தரத் தீர்வு.  வாழ்வு நிலையற்றது என்பதை செர்னோபில் தன் பார்வையாளர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது, இதை நாம் புரிந்துகொள்ள மறுத்தோமானால், நம் வாழ்வும் செர்னோபில்லில் நிற்கும் அந்தத் துருப்பிடித்த தொடர்வண்டி போல் ஆகிவிடும்.

செர்னோபில் அணு உலை விபத்து  1986 -ம் ஆண்டு ஏப்ரல் 26 -ம் நாள் நடந்தது.

 

 

நன்றி :ஆனந்த விகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *