ஆஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் 20 பேர் கைது!


இலங்கையிலிருந்து 20 பேருடன் ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற படகு ஒன்றை இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலிய எல்லைப்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இப்படகில் சென்ற 20 தஞ்சக்கோரிக்கையாளர்களும் உடனடியாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டு தனி விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற நாடுகடத்தல் நடவடிக்கைகள் ஆஸ்திரேலிய எல்லைப்படையினால் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதே சமயம், இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் தீவு விமான நிலையத்திற்குள் பாதுகாப்புடன் பலர் அழைத்து செல்லப்பட்டதாக தி ஆஸ்திரேலியன் ஊடகம் தெரிவித்திருக்கின்றது.

விமான கண்காணிப்பு மென்பொருள் மூலம் தனிவிமானம் ஒன்று கொழும்புக்கு சென்றுள்ளதை வைத்து தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதை அந்த ஊடக உறுதி செய்துள்ளது.

இவ்வாறான பயணங்களில் ஆஸ்திரேலிய பகுதியான கிறிஸ்துமஸ் தீவை அடைவதே படகில் செல்பவர்களின் நோக்கமாக இருக்கும். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு இலங்கையிலிருந்து சுமார் 3500 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழர்கள் பெருவாரியாக தஞ்சம் கோரும் பயணங்களை மேற்கொண்டிருந்த சூழலில், தற்போது செல்ல முயன்றவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆஸ்திரேலிய அரசு, நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகளை கடல் கடந்த தடுப்பு முகாமில் இன்றும் சிறைப்படுத்தியிருக்கிறது.

அந்த வகையில், கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தேர்தலுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர், மீண்டும் ஆபத்தான படகுப் பயணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களும் இதில் தாக்கம் செலுத்தலாம் எனக் கூறப்படுகின்றது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *