`எங்கள் கருத்தை வெளிப்படுத்திய விகடனுக்கு நன்றி!’ | இலங்கைத் தமிழர்கள்


குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் கருத்தைக் கேட்டு வெளியிட்ட விகடனுக்கு இலங்கைத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழர்கள்

இலங்கைத் தமிழர்கள்

குடியரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளையும், விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தால் குடியுரிமை வழங்கப்படுவதில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குடியுரிமைச் சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தின்போது இலங்கைத் தமிழர்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் கட்சிகளைக் கடந்து ஒலித்தது. இந்த நிலையில், இலங்கைத் தமிழர்கள் திரும்பிச் செல்லவே விரும்புகின்றனர் என அரசியல் தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது.

சென்னைப் பல்கலைக்கழகம்.
சென்னைப் பல்கலைக்கழகம்.

இலங்கைத் தமிழர்களின் மனநிலை பற்றி தெரிந்துகொள்ள விகடன், முகாம்களில் உள்ளவர்களிடம் சர்வே நடத்தியது இதற்காக காவல்துறையினர் விகடன் நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். இந்த சர்வேயில் பெரும்பான்மையினர் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல தங்களுக்கு விருப்பமில்லை என்றும் இந்தியக் குடியுரிமை வேண்டும் என்பதையே தங்களின் விருப்பமாகத் தெரிவித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் கலந்துகொண்டு பேசினர். தங்களுடைய கருத்தைத் தெரிவித்த விகடனுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “இங்குள்ள தமிழர்களுக்கு அரசால் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்துதரப்படுகிறதோ, அதே வசதிகள் எங்களுக்கும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. அடிப்படைத் தேவைகள் கிடைத்துள்ளனவே தவிர, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு முன்புவரை நாங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட்டது எங்களுக்குத் தெரியவே இல்லை. இந்தியா எந்த அகதிகள் உடன்படிக்கையிலும் கையொப்பமிடவில்லை. அரசுக்குத் தெரியாமல் ஒரு நாட்டுக்குச் சென்று தங்குபவர்கள்தான் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். நாங்கள் அரசால் பதிவு செய்யப்பட்டு முப்பது ஆண்டுகளாக அரசின் கண்காணிப்பிலேயேதான் வசித்து வருகிறோம். எங்களைச் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனச் சொல்வதோ, இல்லை வ்வாறு நடத்துவதோ தவறு. போரினால், இனக் கலவரத்தினால் உயிர்தப்பித்து வருபவர்கள் என்ன ஆவணங்களை கையில் எடுத்துவர முடியும்?

விகடன் சர்வே
விகடன் சர்வே
விகடன் சர்வே
விகடன் சர்வே

இந்தியாவில் பிறந்தவர்களே கிட்டத்தட்ட 15,000 பேர் இருக்கிறார்கள். இவர்களில் மருத்துவர்கள், சட்டம் படித்தவர்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இந்தியாவிலேயே பிறந்தவர்கள்; இங்குள்ள வாழ்வியலோடு கலந்தவர்கள், ஆனால் குடியுரிமை என்று வருகிறபோது மட்டும் இவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல தயாராக இருக்கிறார்கள் எனச் சொல்லப்படுவது தவறான கருத்து. 2009-ல் போர் முடிந்த பிறகு இலங்கைத் திரும்பிச் சென்றவர்களுமே மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளனர். அவர்களே எங்களை வந்துவிடாதீர்கள் என்றுதான் சொல்கிறார்கள். தமிழர்கள் எங்களைச் சகோதார உணர்வுடன்தான் நடத்திவருகின்றனர். எங்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இலங்கைக்கு திரும்பிச் செல்வோருக்கு இதுபோன்ற வரவேற்பு கிடையாது.

இலங்கைத் தமிழ் மக்கள் 90% இலங்கைத் திரும்பிச் செல்வதில்லை, இந்தியக் குடியுரிமைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சமீபத்தில் விகடன், முகாம்களில் மேற்கொண்ட சர்வேயிலும் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. எங்கள் கருத்தை எடுத்துரைத்த விகடனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா ஏற்கெனவே இலங்கை அரசோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படியே 1,40,000 பேருக்கு இன்னமும் குடியுரிமை வழங்க வேண்டிய கடமை உள்ளது.

முகாம்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளைப் போலத்தான் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பயணம் செல்ல முடியாது. வேலைகளுக்கென வெளியில் செல்ல முடியாது. முப்பது ஆண்டுகளாக இரண்டு, மூன்று தலைமுறை இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கிறது. திபெத்திய அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல பயண ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் வெளிநாடு சென்று கல்வி, வேலை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு அதுவும் கிடையாது. இரட்டைக் குடியுரிமை, பயண ஆவணங்களுக்கான கோரிக்கைகள் பற்றி விவாதிப்பதே தற்போது தேவையற்றது. அதற்கான காலங்கள் கடந்துவிட்டன. இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது சட்டபூர்வமாக மட்டுமல்ல தார்மீக ரீதியாகவும் அணுக வேண்டும்” என்றனர்.

 

நன்றி : மோகன். இ | ஆனந்தவிகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *