எஸ்.பி.ஐ  வங்கித் தேர்வு : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!


10 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, அண்மையில் நடைபெற்ற வங்கித் தேர்வில் 100-க்கு 28 மதிப்பெண்கள் எடுத்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்.பி.ஐ வங்கியின் கிளார்க் பணிகளுக்கான தேர்வு, கடந்த மாதம் 22, 23 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை, இந்த தேர்வு முடிவுகளில் பின்பற்றப்பட்டது.

இதனால், 100 -க்கு 28 மதிப்பெண்கள் எடுத்த, பொருளாதாரத்தின் பின்தங்கிய உயர் வகுப்பினர் அனைவரும், அடுத்த நிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

அதேநேரத்தில், இந்த தேர்வில், ஓபிசி மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களில், 61.25 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்த நிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, 10 சதவீதம் இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, ரெப்கோ வங்கி பணி வழங்கியுள்ளது. அண்மையில் ரெப்கோ வங்கி நடத்திய இளநிலை உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணிகளில், 10 சதவீத இட இதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 40 பணியிடங்களில், 4 இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எஸ்.பி.ஐ. வங்கித் தேர்வில் 100-க்கு 28 மதிப்பெண்கள் எடுத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு தேர்ச்சி வழங்கும் முறைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *