மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்த தென்கொரிய ஜனாதிபதி! | கொரியாவின் கதை #20


உலக அளவில் இணையதளத்தைப் பயன்படுத்தி இளைய வாக்காளர்களை அதிகமாக கவர்ந்து முதன்முதலில் ஜனாதிபதியானவர் ரோஹ் மூ-ஹ்யுன். கிம் டாயே-ஜங் பதவிக்காலம் முடிந்தவுடன் 2002ஆம் ஆண்டு தென்கொரியாவில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்த்லில் ரோஹ் மூ-ஹ்யுன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

தென்கொரியாவின் ஜனாதிபதி ஆனவர்களில், ஜப்பான் ஆதிக்கம் முடிவுற்ற பிறகு பிறந்தவர் இவர்தான். தென்கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள போன்கா கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே, முதல் ஜனாதிபதியான சிங்மேன் ரீயின் பிறந்தநாளில் அவரைப் பற்றிக் கட்டுரை எழுதும்படி சொன்னதை எதிர்த்து மாணவர்களுடன் போராட்டம் நடத்தினார். அதனால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.

சட்டம் படித்த இவர் 1977ல் மண்டல நீதிபதியாக பொறுப்பு வகித்திருக்கிறார். 1978ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாணவர்கள தடைசெய்யப்பட்ட இலக்கியங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு துன்புறத்தலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆதரவாக வழக்காடினார். அப்போதிருந்து மனித உரிமைகளுக்காக வழக்காட முடிவெடுத்தார்.

அந்த வழக்கில் அவர் சந்தித்த கொடூரமான அனுபவங்களைத் தொடர்ந்து அவர் தனது வசதியான வாழ்க்கையை விட்டொழிக்க முடிவெடுத்தார். “நான் இந்த வழக்கை எடுத்தபோது மாணவர்கள் அவ்வளவு கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாகி இருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. அவர்களுடைய கண்கள் அச்சத்தில் வெளிறியிருந்தன. அவர்களின் கால் நகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. என்னால் நம்பவே முடியவில்லை. அப்போதிருந்து இந்த உலகில் ஒரு மாற்றத்தை விரும்பும் மனிதாக என்னை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தேன்” என்று ரோஹ் கூறினார். அவரும் அவருடைய சக மனித உரிமை வழக்கறிஞர்களும் தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

roh mu hyun
மனித உரிமைகளுக்காகவும், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும் இயக்கங்களை நடத்தினார். சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் ஆட்சியில் நடந்த ஒரு கலவரத்தில் இவரை தொடர்புபடுத்தி சிறையில் அடைத்தனர். ஆனால், அவருடைய கைதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 20 நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். இவருடைய மற்றும் இவரது நண்பர்களின் பறிக்கப்பட்ட வழக்கறிஞர் உரிமங்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அரசியலில் தோல்விகளைச் சந்தித்தாலும் அரசாங்கத்தின் ஊழலை அம்பலப்படுத்தும் இவருடைய வாதங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றன. 2000மாவது ஆண்டு கிம் டாயே-ஜங் அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ரோஹ் தென்கொரியா இளைஞர்களை எளிதில் கவர்ந்தார். வடகொரியாவுடன் இணைய விரும்பி போராடியவர்கள், சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடியவர்கள் என மிகப்பெரிய நாட்டுப்பற்று கொண்ட கூட்டத்தை இவர் ஈர்த்தார். 2000மாவது ஆண்டு தொடங்கப்பட்ட ஓமைநியூஸ் என்ற இணையச் செய்தித்தளம் வழியாக தென்கொரியர்கள் ஒவ்வொருவரும் செய்தியாளர்கள் என்ற நிலையை அறிமுகப்படுத்தினார். வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்கவும், அரசாங்கத்தின் குறைகளை வெளிப்படுத்தவும் ஊக்கமளித்தார். அந்த இணையதளத்தின் உறுப்பினர்கள் ரோஹ் ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது பிரச்சாரம செய்தனர். அது அவருடைய வெற்றியை உறுதி செய்தது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட லீ ஹோய்-சாங்கை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். தனது அரசாங்கத்திற்குள் எதையும் விவாதித்து முடிவெடுக்கும் போக்கை அறிமுகப்படுத்தினார்.

இவருடைய ஆட்சியில்தான் பத்திரிகை சுதந்திரம் முதன்மையாக கருதப்பட்டது. தென்கொரிய நாணயமான வொன் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவான நிலையை முதன்முறையாக அடைந்தது. உலகின் 10 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 20 ஆயிரம் டாலர் ஆகவும் உயர்ந்தது.

இவருக்கு முன் ஜனாதிபதியாக இருந்த கிம் டாயே-ஜங் வடகொரியாவுடன் ஏற்படுத்திய நட்புறவை இவரும் தொடர்ந்தார். வடகொரியாவுடனும் ஜப்பானுடனும் நட்புறவை வளர்க்க விரும்பினார். தரைவழியே நடந்து வடகொரியாவுக்குள் பயணித்து, அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் இல் ஐ சந்தித்தார். வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொடூரமான அடக்குமுறைகளை மேற்கொள்வதாக ஆதாரபூர்வமாக கூறினார். வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஜப்பான் பிரதமராக இருந்த கொய்சுமியை முதன்முறையாக வடகொரியாவுக்கு பயணம் செய்ய வைத்தார்.

இதெல்லாம் அமெரிக்காவை எரிச்சலூட்டியது. ரோஹ் மூ-ஹ்யுனுக்கு எதிராக தென்கொரிய அரசியல் கட்சிகளை அமெரிக்கா தூண்டிவிட்டது. குறிப்பாக இவரிடம் தோற்ற லீயை கொம்புசீவி விட்டது. மீடியாக்களைப் பயன்படுத்தி அவருக்கு குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. சியோலில் இருந்து தலைநகரை மாற்றவும், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் ரோஹ் திட்டமிட்டிருந்தார். அதன்மூலம் தென்கொரியாவில் கொரியா தேசியவாதத்தை வளர்க்கவும் வடகொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும் முடிவு செய்திருந்தார். ஆனால் அவற்றுக்கு எதிரான பிரச்சாரம் வலுப்பெற்றதால் திட்டங்களில் முன்னேற்றம். தடைப்பட்டது.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லீ மியுங்-பாக் வெற்றிபெற்றார். இந்தத் தேர்தலில் ரோஹ் போட்டியிடவில்லை. பதவிக்காலம் முடிந்ததும் தனது சொந்த கிராமத்துக்கு போய் அமைதியான வாழ்க்கையை தொடங்கினார். எந்த ஜனாதிபதியும் இதுபோன்ற வாழ்க்கையை ஏற்றதில்லை. அனைவருமே தலைநகர் சியோலில் ஆடம்பரமான வாழ்க்கையையே வாழ்ந்து இறந்தனர். ரோஹ் தனது சொந்த கிராமமான போன்கா மயூலில் வாழ்ந்தாலும், அவரை பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கவைக்கும் வகையில் புதிய ஜனாதிபதி லீ செயல்பட்டார். லீயின் நெருங்கிய தொழில் அதிபர் நண்பர்களையும் வழக்குகளில் சிக்கவைத்து சிறையில் அடைத்தனர்.
roh funeral

ரோஹ் இதனால் மனம் உடைந்தார். ஒருநாள் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மலையின் சிறு சிகரத்தி மீது ஏறி அங்கிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தனது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தனது முடிவுக்கான காரணத்தை டைப் செய்து வைத்திருந்தார்.

“என்னால் பலருக்கு சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. என்னுடன் நட்பாக இருந்ததற்காக அவர்கள் கஷ்டம் அனுபவிக்க நான் காரணமாகிவிட்டேன்” என்று அவர் டைப் செய்திருந்தார்.

அவருடைய மரணம் குறித்து விசாரித்த உளவுத்துறையினர், அவருடைய மரணத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை என்று கூறிவிட்டனர். அவர் இறந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருடைய நண்பர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒரு உத்தமரைப் போல ஆட்சியைத் தொடங்கிய லீ, அமெரிக்காவின் அப்பட்டமான ஊதுகுழலாக மாறினார். வடகொரியாவின் இணைப்பு முயற்சியையும், முந்தைய அரசுகள் வடகொரியாவுடன் கடைப்பிடித்த நட்புறவையும் உடனடியாக கைவிட்டார். இது அமெரிக்காவை முழுமையாக திருப்திப்படுத்தியது. ஹான் நதியிலிருந்து சியோல் வரை 540 கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் வழியை லீ திட்டமிட்டார். ஆனால், அதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தத் திட்டத்தை அரைகுறையாக நிறுத்தினார். லீ பல நாடுகளுக்கும் பயணம் செய்வதில் ஆர்வமாக இருந்தார். அதிக நாடுகளுக்கு பயணம் செய்தவர் இவராகத்தான் இருக்கும் என்கிறார்கள். பெரிய தொழிற்சாலைகளை தென்கொரியாவுக்கு கொண்டுவருவதிலும் அமெரிக்கா உதவியாக இருந்தது.

(இன்னும் வரும்)

 

நன்றி : ஆதனூர் சோழன் | நக்கீரன் இணையம்

 

முந்தைய பகுதிகள்:

http://www.vanakkamlondon.com/story-of-korea-08-21-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-2-08-29-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-3-09-05-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-4-09-14-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-5-09-28-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-6-10-07-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-7-10-14-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-8-10-24-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-9-1-02-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-10-11-15-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-11-11-21-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-12-11-27-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-13-12-04-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-14-01-02-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-15-01-08-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-16-01-15-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-17-01-25-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-18-02-13-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-19-02-20-19/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − thirteen =