சோவியத், சீன சதியை முறியடித்த கிம் இல்-சுங்! | கொரியாவின் கதை #25


கொரியாவின் சுயமரியாதையை காப்பாற்ற வந்த சூரியக்கடவுள் என்று வடகொரியா மக்கள் நம்பும் வகையில் கிம் இல்-சுங்கின் நடவடிக்கைகள் இருந்தன. வடகொரியாவில் யாரும் முதலாளி இல்லை என்ற நிலையை உருவாக்கியிருந்தார். எல்லா வசதிகளும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செய்திருந்தார்.

அதையெல்லாம்விட கொரியா தீபகற்பத்தை இணைப்பதில் அவர் கொண்டிருந்த உறுதியை வடகொரியா மக்கள் விரும்பினார்கள். தென்கொரியாவில் தங்களுடைய சகோதரர்களும் சகோதரிகளும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவுகளையும் சுற்றத்தினரையும் பிரித்துவைக்கும் இரண்டு கொரியாக்களின் எல்லையை உடைத்தெறிய வேண்டும் என்று விரும்பினார்கள். தென்கொரியாவில் இருந்த அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமேன் அணுகுண்டு சோதனைகளுக்கும், ராணுவ திட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடை வெகுவாக குறைத்திருந்தார். இந்தச் சமயத்தில் தென்கொரியா மீது போர்தொடுத்தால் எளிதில் இணைத்துவிடலாம் என்று கிம் இல்-சுங் கருதினார். இதற்கான ஆதரவை சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் கேட்டார். அவரும் நிலைமை சாதகமாக இருப்பதாகத்தான் நினைத்தார். எனவே, தாக்குதல் திட்டத்துக்கு சோவியத் ஆதரவளிக்கும் என்றார். அதைத்தொடர்ந்து சீனாவிடம் கிம் ஆதரவு கேட்டார். ஆனால், சீனா உடனடியாக நேரடி ஆதரவளிக்க மறுத்துவிட்டது. ஆனால், மறைமுக உதவிகளை அது அளித்தது.

koreavin kathai

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி தாக்குதல் தொடங்கிய நான்கே நாட்களில் வடகொரியா ராணுவம் சியோலை நெருங்கிவிட்டது. இதையடுத்து ஜனாதிபதி ரீ சியோல் நகரைவிட்டு வெளியேறினார். அதற்கு முன்னதாக வடகொரியா ராணுவத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஹான் நதியின் குறுக்கே இருந்த ஹாங்காங் பாலத்தை வெடிவைத்து தகர்த்தனர். அது தகர்க்கப்படும் சமயத்தில் சுமார் 4 ஆயிரம் அகதிகள் அந்த பாலத்தில் சியோலை விட்டு கடந்துகொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் பாலம் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவசரகதியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஜூன் 28 ஆம் தேதி சியோல் வடகொரியாவின் பிடியில் விழுந்தது. அதேதினம், தென்கொரியாவில் உள்ள தனது அரசியல் எதிரிகள் அனைவரையும் கொன்றுவிடும்படி ஜனாதிபதி சிங்மேன் ரீ உத்தரவிட்டார்.

போர் தொடங்கிய ஐந்தே நாட்களில் 95 ஆயிரம் பேர் கொண்ட தென்கொரியா ராணுவம் 22 ஆயிரம் பேரை இழந்தது. தென்கொரியாவின் வடகிழக்கு பகுதி மட்டுமே மிச்சமிருந்த நிலையில் அமெரிக்க ராணுவமும், ஐ.நா. படையும் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன. ஜூலை மாத தொடக்கத்தில் தென்கொரியா வந்த அமெரிக்க ராணுவத்தின் கீழ் தென்கொரியா படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டன.

அதன்பின்னர், அடுத்த சிலநாட்களில் வடகொரியா ராணுவத்திடமிருந்து சியோல் மீட்கப்பட்டது. அதுமட்டுமின்றி வடகொரியா படைகள் வடக்கு நோக்கி பின்வாங்கின. அக்டோபர் 19 ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கை கைப்பற்றியது. கிம் இல்-சுங்கும் அவருடைய அரசும் வடக்குப்பகுதிக்கு விரைந்தது.

koreavin kathai

இந்தச் சமயத்தில் சீன அரசு ஐ.நா.படைகளின் முன்னேற்றத்தை நிறுத்தும்படி பல எச்சரிக்கைகளை விடுத்தது. ஆனால், ஐ.நா.படைகள் கேட்கவில்லை. பின்னர் நடந்தது அதிரடி தாக்குதல், சீனாவையும் கொரியாவையும் பிரிக்கும் யாலு நதியை பல்லாயிரக்கணக்கான சீன வீரர்கள் கடந்தனர். அவர்கள் கொரியா ராணுவத்துடன் இணைந்தனர். டிசம்பரில் பியாங்யாங்கிலிருந்து ஐ.நா.படை வெளியேற்றப்பட்டது. அடுத்து ஜனவரி 1951ல் தென்கொரியா தலைநகர் சியோலையும் சீனப்படைகள் மீண்டும் கைப்பற்றின. மார்ச் மாதம் சியோலை கைப்பற்ற ஐ.நா.படைகள் அதிகளவு குவிக்கப்பட்டு மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றது. சியோலை மீட்ட ஐ.நா.படைகள் சீனப் படைகளை பின்வாங்கச் செய்தன. இரு நாடுகளின் எல்லையான 38 ஆவது நிலநேர்கோடு அருகே சென்றதும் ஐ.நா.படைகள் தாக்குதலை நிறுத்தின. அந்தப் பகுதியில் இரு படையினருக்கும் கடுமையான யுத்தம் 1953 ஜூலை வரை நடைபெற்றது. எந்தவித சண்டைநிறுத்த ஒப்பந்தமும் இல்லாமல், அமைதி உடன்படிக்கையும் இல்லாமல் 1953 ஜூலை 27 ஆம் தேதி யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில் இருதரப்பிலும் 25 லட்சம் பேர் பலியாகினர்.

இந்தச் சண்டையின்போது வந்த சீன ராணுவமும், சோவியத் ராணுவமும் பெரும்பகுதி வடகொரியாவில் நிலைநிறுத்தப்பட்டன. வடகொரியா தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவிலும் சீன ஆதரவாளர்கள், சோவியத் ஆதரவாளர்கள் என அணிகள் இருந்தன. கிம் ஆதரவாளர்களைக் காட்டிலும் அவர்கள் குறைவு என்றாலும் கிம்மின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போக்கு கட்சிக்குள் உருவானது.

மூன்றாண்டுகள் நடந்த கடுமையான யுத்தத்தால் வடகொரியாவின் பொருளாதாரமும் உள்கட்டமைப்புகளும் சீர்குலைந்திருந்தன. அதை சீரமைக்க ஐந்தாண்டு தேசிய பொருளாதார திட்டத்தை கிம் அறிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தேசவுடைமை ஆக்கப்பட்டன. விவசாயம் முழுமையாக கூட்டுப்பண்ணை மயமாக்கப்பட்டது. பொருளாதாரம் முழுக்க முழுக்க கனரக தொழில்கள் மற்றும் ஆயுத உற்பத்தியை நோக்கி திருப்பப்பட்டது. எல்லைப்பகுதியில் ஆயுதம்தாங்கிய படையை அதிகரிக்கும் முயற்சியில் வடகொரியா ஈடுபட்டது. தென்கொரியாவுக்கு அமெரிக்க ராணுவம் காவல் இருந்தது.

koreavin kathai

என்னதான் இருந்தாலும் வடகொரியாவும் கிம் இல்-சுங்கும் சீனா அல்லது ரஷ்யாவைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை இருந்தது. சர்வேதச அளவில் சீனா மற்றும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே போட்டி தொடங்கியது. சீன ஆதரவு நாடுகள், சோவியத் ஆதரவு நாடுகள் என்று உருவாகத் தொடங்கின. உலகின் வளர்முக நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சீன ஆதரவு நிலைப்பாடும் சோவியத் ஆதரவு நிலைப்பாடும் எடுக்கத் தொடங்கின. சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சிமுறையை மாற்ற புதிய அதிபர் நிகிடா குருசேவ் முடிவெடுத்தார். இதை மாவோ ஏற்கவில்லை. கிம் அவருடைய அணியில் சேர்ந்தார். ஆனாலும் அவர் மாவோயிஸ்ட் இல்லை. அதேசமயம் கொரியா கம்யூனிஸ்ட் இயக்கத்தை தனது அதிகாரத்துக்குள் கொண்டுவந்தார். கட்சிக்குள் இருந்த அவருடைய எதிரிகளான பாக் ஹான்-யோங்கிற்கு மரணதண்டனை விதித்தார். 1955ல் ஜுச்சே என்ற அறிக்கையை கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அளித்தார். அது சோவியத்தையோ, சீனாவையோ சாராமல் கொரியாவின் தனித்துவத்தை வலியுறுத்தியது. கொரியாவின் தன்னிறைவை நோக்கி அது இருந்தது. கிம்மின் இந்த அறிக்கைதான் கட்சிக்குள் விமர்சனத்தை உருவாக்கியது. சோவியத் ஆதரவாளரான பாக் ஹான்-யோங் கிம்மின் இந்த அறிக்கையை எதிர்த்தார். கிம்மின் ஜுச்சே அறிக்கை 1963 ஆம் ஆண்டுக்கு பிறகே அதிகமாக பேசப்பட்டது.

கிம் இல்-சுங் தன்னை முன்னிறுத்தி தலைமைக்கு துதிபாடும் போக்கை வளர்ப்பதாகவும், ஸ்டாலின் தொடங்கிய அந்த போக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று குருஷேவ் தலைமையிலான 20 ஆவது சோவியத் கம்யூனிஸ்ட் மாநாடு முடிவெடுத்தது. சோவியத் ஆதரவு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகள் அனைத்திலும் தனிமனித துதிக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமடைந்தது. அத்தகைய சூழலில் கிம் இல்-சுங்கை சோவியத் யூனியன் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆறுவார பயணமாக அவர் அழைக்கப்பட்டார். சோவியத் யூனியனின் புதிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப வடகொரியாவை மாற்ற குருஷேவ் விரும்பினார். கிம் வடகொரியாவில் இல்லாத நிலையில் அவருக்கு எதிரான சதியில் சோவியத் ஆதரவுத் தலைவரான பாக் சாங்-ஓக், சோயே சாங்-இக் ஆகியோரும், சீன ஆதரவுக் குழுவின் தலைவர்களும் கிம் இல்-சுங்கிற்கு எதிராக ஒரு திட்டத்தை வகுத்தனர். அடுத்துவரும் மத்தியக் குழுவில் கிம் தனது தலைமைப் பண்புகளை மாற்ற வேண்டும். தனிமனித துதியை ஊக்குவிக்கக்கூடாது. லெனின் வகுத்த பாதையை மாற்றக்கூடாது என்று விமர்சனங்களை முன்வைப்பது என்று முடிவெடுத்தனர்.

koreavin kathai

வடகொரியா திரும்பிய கிம் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் கிம்மிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு கிம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கட்சிவிரோத நடவடிக்கைக்கு உள்ளாக்கும்படி வற்புறுத்தினர். இதையடுத்து எதிர்த்தோர் நீக்கப்பட்டனர். சீனா ஆதரவுத் தலைவர்கள் சிலர் சீனாவுக்கே சென்றனர். சோவியத் ஆதரவாளர்கள் பலர் காணாமல் போயினர். 1956 செப்டம்பரில் சோவியத் மற்றும் சீனத் தூதுக்குழு வடகொரியாவுக்கு வந்தது. கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக யாரையும் கொல்லக்கூடாது என்று வற்புறுத்தின்ர. ஆனால், 1957ல் மீண்டும் எதிரிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை தொடங்கின. அதைத்தொடர்ந்து சோவியத் ஆதரவாளர்கள் சோவியத்துக்கும், சீனா ஆதரவாளர்கள் சீனாவுக்கும் செல்லும்படி நிர்பந்தம் செய்யப்பட்டனர்.

1961ல் கட்சிக்குள் கிம்மின் கொரில்லா குழுவும், அவருக்கு விசுவாசமான தலைவர்களும் மட்டுமே இருந்தனர். 1961ல் கட்சியின் மத்தியக்குழுவில் இரண்டு சோவியத் ஆதரவு உறுப்பினர்களும், சீன ஆதரவு உறுப்பினர்கள் மூவரும், வடகொரியாவில் பிறந்த ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர்களி பிரதிநிதிகளாக மூவரும் இருந்தனர். மொத்த மத்தியக்குழு உறுப்பினர்கள் 68 பேரில் 8 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் கிம்மின் கொரில்லா குழுவைச் சேர்ந்தவர்கள். அந்த 8 பேரும்கூட கிம்மை ஆதரிப்போராக இருந்தார்கள். அவர்களும் காலப்போக்கில் கட்சிக்குள் இல்லாமல் போயினர்.

koreavin kathai

கட்சிக்குள் கிம் இல்-சுங்கிற்கு இருந்த ஆதரவுக்கு ஒரு காரணம் இருந்தது. சோவியத்தையோ, சீனாவையோ ஆதரிக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் இளம் உறுப்பினர்கள் வெளிநாட்டு ஆதரவாளராகவே பார்த்தனர்.

அதேசமயம், கிம் இல்-சுங் மட்டுமே உண்மையான கொரியா தலைவராக பார்த்தனர்.

கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்ததும், வடகொரியாவில் நிறுத்தப்பட்டிருந்த கொஞ்சநஞ்சம் சீனா, சோவியத் ராணுவத்தையும் அனுப்பினார் கிம்.

(இன்னும் வரும்)

 

நன்றி : ஆதனூர் சோழன் | நக்கீரன் இணையம்

 

முந்தைய பகுதிகள்:

http://www.vanakkamlondon.com/story-of-korea-08-21-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-2-08-29-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-3-09-05-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-4-09-14-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-5-09-28-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-6-10-07-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-7-10-14-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-8-10-24-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-9-1-02-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-10-11-15-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-11-11-21-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-12-11-27-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-13-12-04-18/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-14-01-02-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-15-01-08-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-16-01-15-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-17-01-25-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-18-02-13-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-19-02-20-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-20-03-01-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-21-03-09-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-22-03-15-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-23-03-22-19/

http://www.vanakkamlondon.com/story-of-korea-part-24-04-01-19/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *