`என் தந்தை மரணத்துக்கு முடிவு தெரிந்தாக வேண்டும்!’- டி.என்.ஏ பரிசோதனை கேட்கும் நேதாஜியின் மகள்


டி.என்.ஏ பரிசோதனை நடத்தினால் மட்டுமே நேதாஜி மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகும் என அவரின் மகள் தெரிவித்துள்ளார்.

subhash chandra bose

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டதாகவும், இறந்த நேதாஜியின் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Netaji
Netaji

ஜப்பானில் உள்ள அந்தச் சாம்பலைக் கொண்டு செல்லும் படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தது. ஆனால் நேதாஜி மரணத்தில் உள்ள மர்மம் விலகாததால், ஜப்பானில் உள்ள சாம்பலை இங்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலைக் கொண்டு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என நேதாஜியின் மகள் அனிதா போஸ், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பி.டி.ஐ ஊடக நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “1945-ம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் என் தந்தை இறந்துவிட்டதாக நான் நம்புகிறேன். ஆனால், மக்கள் இதை நம்ப மறுக்கின்றனர். என் தந்தை மரணத்தில் உள்ள மர்மத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

Anita Bose
அதற்கு டி.என்.ஏ பரிசோதனையைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை. எனவே ஜப்பான், ரெங்கோஜி கோயிலில் உள்ள என் தந்தையின் சாம்பலைக் கொண்டு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும். விமான விபத்தில் என் தந்தை இறந்தாரா இல்லையா என்பது சோதனை முடிவில் தெரிந்துவிடும். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளேன்.
 இந்த நேரத்தில் நான் பிரதமர் மோடிக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு என் தந்தையின் மரணம் தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்தி வெளியிட்டார். `ஜப்பானில் உள்ள சாம்பல் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்’ எனவும் உறுதியளித்துள்ளார். என் தந்தை மரணம் தொடர்பாக ஜப்பான் அரசு வைத்துள்ள கோப்புகளையும் வகைப்படுத்த வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
Renkoji temple in Japan
நேதாஜி, விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்படும் ஆகஸ்ட் 18-ம் தேதி கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டத்தையடுத்து இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார் அனிதா போஸ். மேலும், “இதற்கு முன்னதாக மத்தியில் ஆட்சி செய்த அரசுகள் நேதாஜி மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்குவதற்குப் பெரிதாக எந்த அக்கறையும் காட்டவில்லை. நேதாஜி மரணத்தில் உள்ள மர்மம் விலகுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. என் தந்தை இறந்துவிட்டார் என்பதை என் குடும்பத்தில் உள்ளவர்களும் பொதுமக்களும் நம்பவில்லை. அவர்களுக்கென தனியாக ஒரு கருத்தை உருவாக்கி அதை நம்புகின்றனர்” என அனிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியச் சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் வெளிநாட்டில் போர்க் கைதியாக சிறைபிடிக்கப்பட்டிருந்தார். அங்கு இருந்தபடியே இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி இந்திய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவும் விளங்கியவர். 1945-ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்து விட்டார் எனக் கூறப்பட்டது.
Netaji

ஆனால் அந்த ஆண்டு தைவானில் எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசு கூறியுள்ளதால் நேதாஜியின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. பின்னர் 1970 -ம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்று அங்கேயே நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இறுதியில், `நேதாஜி இறக்கவில்லை, அவர் வட இந்தியாவில் துறவியாக மறைமுகமாக வாழ்ந்து வந்தார். 1985-ம் ஆண்டு இறந்துவிட்டார்’ எனப் பல்வேறு கருத்துகள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தன.

உண்மையில் நேதாஜி எப்படி இறந்தார் என்பது இன்று வரையிலும் விலகாத மர்மமாகவே உள்ளது. தற்போது நடைபெறவுள்ள டி.என்.ஏ பரிசோதனையிலாவது அவர் இறப்பு பற்றி ஏதேனும் தகவல் கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி: விகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *