ஈழத் தமிழர்களே எங்களை நம்பாதீர்கள்; அன்றே சொன்ன சுஜாதா: கானா பிரபா


18 ஆண்டுகளுக்கு முன் அப்போது வானொலி உலகத்தில் என் வயசு மூன்று. நான்கு தசாப்தங்கள் எழுத்துத் துறையில் இருக்கும் ஆதர்ஷ நாயகன் எனதருமை சுஜாதாவோடு பேட்டி எடுக்க ஆசைப்பட்டு அழைக்கிறேன். சின்னப் பையனிடம் என்ன பேட்டி என்று உதாசீனப்படுத்தி விடுவாரோ என்ற தயக்கம் வேறு. ஆனால் நடந்ததோ வேறு.

2002 ஆம் ஆண்டு “கன்னத்தில் முத்தமிட்டால்” படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது “பிரிவோம் சந்திப்போம்” பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, “ஆ” என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்”, எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.

ஈழத் தமிழ் இலக்கியங்களில் தான் பெரிதும் நேசிக்கும் படைப்பாளிகளாக செங்கை ஆழியான், தேவகாந்தன் Devakanthan Bala, கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் Cheran Rudhramoorthy, மைத்திரேயி குறித்து இந்தப் பேட்டியில் சிலாகிக்கிறார்.

கவிஞர் சேரன் தொகுத்த “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத் தொகுதி குறித்தும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நாவலாசிரியர் தேவகாந்தனின் உதவி குறித்தும், கவிஞர் மைத்திரேயின் கவிதைகள் எவ்வாறு பயன்பட்டன என்று விபரிக்கிறார்.

ஈழத்தமிழ் எழுத்தாளர்களது படைப்புகளைப் படித்த அனுபவத்தில் அவர்களது எழுத்தில் ஒரு உண்மையும், யோக்கியமும் இருப்பதாக எனக்குப் படுகிறது என்றார் சுஜாதா.

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது

“எங்களை நம்பாதீர்கள்”

” நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்”

என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இன்று எழுத்தாளர் சுஜாதாவின் 12 வது நினைவு தினமாகும்.

கானா பிரபா
27.02.2020

அந்தப் பேட்டியைக் கேட்கLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *