சுந்தர்பிச்சை சொல்லும் ‘கரப்பான்பூச்சி’ கோட்பாடு


 

Image may contain: 1 person, sitting and beard

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார்.

அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார்.

இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை. ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்திருக்கிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்!

அட! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

-சுந்தர் பிச்சை

நன்றி – முகநூல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *