ஈழத்தமிழர் பிரச்சனைகளின் தீர்வுக்கான எந்த சொற்றொடரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கிடையாது – சுரேஸ்பிரேமசந்திரன்


“எங்களை பொறுத்தவரை எமது மக்கள் எங்கு எங்கு இருந்து விரட்டப்பட்டார்களோ அவர்கள் மீளவும் அந்த காணிகளுக்கு போக வேண்டும்” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் என்ற தொனிப்பொருளில் வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது மக்களுடனான் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துதெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிக பெரிய மோசடிகளை செய்திருக்கின்றார். ஆகவே நாம் மைத்திரிபால சிறிசேனவில் குற்றங்கான வேண்டிய தேவை இல்லை. நேற்று முன்தினம் சுதந்திரக்கட்சியின் கூட்டம் இடம்பெற்றபோது தனது தம்பி மகிந்தவை தட்டிக்கேட்கும் அளவிற்கு எந்த அமைச்சர்களுக்கும் முதுகெலும்பு இருக்கவில்லை என சமல் ராஜபக்ச கூறியிருக்கின்றார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவ்வாறு முதுகெலும்பு இருந்ததை தான் பார்க்கவில்லை. ஆனால் முதுகெலும்பு இருந்திருக்கின்றது. அதனால்தான் மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றம் வந்திருக்காவிட்டால் இந்த நாட்டிற்கு என்ன நடந்திருக்குமோ தெரிந்திருக்காது என்று அண்ணன் தம்பியைப்பற்றி சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நாட்டில் 10 வருட ஆட்சி இருந்திருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி அலரிமாளிகைக்கு சென்று வந்து சொன்னாராம் 47 கடற்படை வீரர்கள் அங்கு சமையல் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என.

அலரிமாளிகையில் எத்தனை மில்லியன் ரூபா ஒருநாளைக்கு சாப்பாட்டுக்காக செலவிடப்பட்டுள்ளது. அவரின் இரண்டாவது மகனின் செருப்பின் விலை ஒரண்டரை இலட்சம் ரூபா. அந்த அளவிற்கு இந்த நாட்டில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. எனவே ஆட்சி மாற்றம் என்பது சிங்கள மக்களுக்கும் தேவையானதாக இருந்தது என்பதனையும் நாம் பார்க்கவேண்டும்.

வெறுமனே சிங்கள மக்கள் மாத்திரம் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவில்லை. வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் மற்றும் மலையக தமிழர்களுமாக இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே சிங்கள மக்களுக்கு ஆட்சி மாற்றம் தேவையாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு அதை விட பல மடங்கு அதிகமாக ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது.

தற்போது ஆளும் கட்சியுடன் வந்திருக்க கூடிய முஸ்லீம் காங்கிரஸ், ரிசாட் பதியுர்தீன் தலைமையிலான கட்சி அவ்வளவு அட்டகாசங்களை முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்திபோதும் மகிந்த ராஜபக்சவை விட்டு விலத்தவில்லை. எப்போது மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று தெரிந்தபோதும் அவர்கள் மாறவில்லை. எப்போது அவர்கள் விலத்தினார்கள் என்றால் முஸ்லீம் மக்கள் தாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போகின்றார்கள் என கண்டபோது அடுத்த தேர்தலில் தாம் முஸ்லீம் மக்களால் தோற்கடிக்கப்படலாம் என தெரிந்துபோது தான் அவர்களும் மைத்திரி பக்கம் மாறினார்கள். அங்கு மாறியது மாத்திரமல்ல அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள்.

ஒரு முஸ்லீம் தலைவர் தான் எதிர்க்கட்சியில் இருந்து உதவி செய்யவேண்டுமென்றால் எத்தனை மில்லியனுக்கு தன்னை பேரம் பேசினார் என்பது எமக்கு தெரியும். இலங்கை ரூபாவில் சுமார் 60 கோடியை கேட்டிருந்தார். ஆகவே இந்த மாற்றங்களில் தங்களது சட்டைபைகளை நிரப்பியவர்களும் இருக்கின்றார்கள். இந்த ஆட்சி மாற்றம் ஊழலை ஒழிப்பதற்கு தேவை என்று கூறியபோதிலும் இந்த ஆட்சி மாற்றத்திலும் பணம் மாறியே இந்த மாற்றம் வந்தள்ளது.

ஆகவே வந்துள்ளவர்கள் எவ்வாறு ஆட்சியை கொண்டு போகப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த மாற்றம் இங்கு வாழும் மக்களுக்கு அப்பால் சர்வதேச ரீதியிலும் ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா ஒரு ஆதிக்கத்தை உருவாக்க விரும்பியது. அதற்கு இலங்கை துறைமுகம் மிக முக்கியமானதாக அமைந்தது. அதனை தனக்கு சாதமாக கொண்டு வருவதற்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்தார்கள். இலங்கை கேட்கும் அத்தனை திட்டங்களையும் செய்து கொடுத்தார்கள். அதில் பல கோடிகள் அப்போது இருந்தவர்களின் சட்டைப்பைகளுக்குள் போயிருந்தது.

ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தின் பலனாக அதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது சீனாவின் விடயங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது தற்போதைய அரசு.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மகிந்த ராஜபக்ச அரசுடன் ஒரு வருட காலத்தில் 18 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்கவில்லை. நாம் தீர்வு திட்டத்தை கொடுத்தபோது அரசு அதற்கு கருத்தை சொல்லாதிருந்தது தெரிவுக்குழுவுக்கு வருமாறே அழைத்தனர்.

தற்போதைய அரசிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்வுக்கான எந்த சொற்றொடரும் கிடையாது. குறைந்தது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்கும் வேலைத்திட்டம் கூட அதில் கிடையாது.

ஆனால் தேர்தலுக்கு பிற்பாடு சம்பந்தன், சுமந்திரன் மற்றும் நான் உட்பட ஜனாதிபதியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திரிக்காவையும் சந்தித்தோம். அதன்போது எமது மக்களின் பிரச்சனைகளைப்பற்றி சொல்லியிருக்கின்றோம்.

இதில் இராணுவம் கையகப்படுத்திய மக்களின் காணிவிடயங்களை கூறியிருக்கின்றோம். இதன் அடிப்படையில் தற்போது பாதுகாப்பு செயலாளர் எந்த எந்த காணிகளை மக்களுக்கு மீள் கொடுக்கலாம் என்ற பட்டியலை கேட்டிருக்கின்றார். அவர்கள் பட்டியலை கேட்கலாம். ஆனால் எங்களை பொறுத்தவரை எமது மக்கள் எங்கு எங்கு இருந்து விரட்டப்பட்டார்களோ அவர்கள் மீளவும் அந்த காணிகளுக்கு போக வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு.

ஆனால் தற்போது குறைந்த பட்சம் இராணுவத்திடம் அந்த பட்டியலையாவது கேட்டிருக்கின்றார்கள். இது ஒரு ஆரம்பம். எவ்வளவு காலத்தில் இது நடக்கும் நடக்காது என்ற விடயங்கள் எமக்கு இன்னும் தெரியாது.

இதேபோல் அரசியல் கைதிகள் விடயத்தையும் விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தோம். ஏறத்தாழ 400 அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். தற்போது அரசு எங்களிடம் அந்த விபரங்களை கேட்கின்றார்கள். உண்மையில் அந்த விபரங்களை நீதி அமைச்சிலோ சிறைச்சாலை அமைச்சிலோ அந்த விபரங்களை எடுக்க முடியும். ஆனால் எங்களிடம் அதனை கேட்டிருக்கின்றார்கள்.

எனினும் இவை எல்லாம் நிறைவேற்றப்படுமா என்பதனை எல்லாம் நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஏனெனில் இவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அடுத்த தேர்தலுக்கு போகப்போகின்றார்கள். ஆகவே அந்த தேர்தலுக்கு போவதற்கு முன்பாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்து விட்டால் எதிர்தரப்பு நிச்சயமாக தனக்கு சாதாகமாக பயன்படுத்தும் என்ற நிலை இன்னும் இருக்கின்றது என அவர்கள் கருதுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்க மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணசிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், இந்திரராசா, தியாகராசா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

unnamedLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *