கிழக்கு உக்ரைன் பகுதியில் சர்வதேச அமைதிப் படையை நிலைநிறுத்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சம்மதம்


ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் சர்வதேச அமைதிப் படையை நிலைநிறுத்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக உக்ரைன் வியாழக்கிழமை தெரிவித்தது.

ரஷிய அதிகாரிகள் இதுகுறித்து எதுவும் குறிப்பிடவில்லை. உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் 6,000-க்கும் மேல் உயிரிழந்தனர். இந்த நிலையில், மின்ஸ்க் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

எனினும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் இரு தரப்பினரும் அவ்வப்போது சண்டையில் ஈடுபட்டு வருவதாக ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சண்டை நிறுத்தத்தை முழுமையாக அமல்படுத்த, அந்தப் பகுதிகளில் சர்வதேச அமைதிப் படையை ஈடுபடுத்த வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி வருகிறது.

ஆனால், ஆயுதங்களையோ, வீரர்களையோ உக்ரைனுக்கு அனுப்புவதன் மூலம், ரஷியாவுக்கு சீற்றம் உண்டாகி, இந்தப் பிரச்னை மேலும் சிக்கலாகிவிடும் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல், பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் ஆகியோரிடைய தொலைபேசி மூலம் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் மாளிகை வெளியிட்டு அறிக்கையில், “”பதற்றம் நிறைந்த டன்பாஸ் பகுதியில் அமைதிப் படை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை ரஷிய அதிபர் புதின் ஏற்றுக் கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டது. எனினும், ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமைதிப் படை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *