மிதவாதக் கட்சியினர் பெருவாரியாக வெற்றி | ஈரான்


ஈரானில் சக்தி வாய்ந்த மத குருக்களின் அவைக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மிதவாதக் கட்சியினர் பெருவாரியாக வெற்றி பெற்றனர்.

ஏற்கெனவே வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்த மதவாதக் கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஈரானில் நாடாளுமன்றத் தேர்தலும், தலைமை மத குருவைக் கண்காணிக்கும் மத குருக்களின் அவைக்கான தேர்தலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இந்த நிலையில், 88 உறுப்பினர்களைக் கொண்ட மத குருக்களின் அவைக்கான தேர்தல் முடிவுகளை உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அந்த முடிவுகளின்படி, தேர்தலில் போட்டியிட்ட அதிபர் ஹஸன் ரெளஹானி, முன்னாள் அதிபர் அக்பர் ரஃப்ஸஞ்சானி உள்ளிட்ட மிதவாதக் கூட்டணியைச் சேர்ந்த 50 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத குருக்களின் அவையின் 59 சதவீத இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், இந்தத் தேர்தலில் மிதவாதிகள் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், அயதுல்லா அகமது ஜன்னத்தி உள்ளிட்ட தீவிர மதவாதிகளும் இந்தத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் உச்சபட்ச அதிகாரம் மிக்க மதத் தலைவர் பதவிக்கே சவால் விடுக்கும் சக்தி கொண்ட மத குருக்களின் அவையில், மிதவாதிகளின் கை ஓங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போதைய தலைமை மத குரு அயதுல்லா கமேனிக்குப் பிறகு, அந்தப் பதவிக்கான தலைவரை இந்த மத குருக்களின் அவையே நியமிக்கும்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *