மேற்கத்திய நாடுகள் ஈரானுடன் நடத்திய அணு ஆயுத தடை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்


அணு ஆயுத தடை விவகாரத்தில் ஈரானுக்கும், மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கும் இடையில் சுமுக உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் நோக்கில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய P5+1 நாடுகள் கடந்த 8 நாட்களாக ஸ்விட்சர்லாந்தின் லாஸன் நகரில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதற்கான கெடுக்காலம் முடிவடைந்த பின்னரும் இந்த பேச்சுவார்த்தை நீண்டுக்கொண்டே போனதால் இந்த முறையும் சமரச உடன்பாடு எட்டப்பட வாய்ப்பு இல்லை என்றே யூகிக்கப்பட்டு வந்தது.

எனினும், இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமையும் தொடர்ந்தது. இதில், இரு தரப்பிலும் பெரும்பாலான வேறுபாடுகள் களையப்பட்டு, முதல்கட்ட சமரசத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த சமரச திட்டத்தின்படி, புளுட்டோனியம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையங்களை குறைத்துக்கொள்ள ஈரான் சம்மதித்துள்ளது. புளுட்டோனியத்தை கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்பட்டு வந்த மையத்தை மூடவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானிடம் சுமார் 10 ஆயிரம் கிலோ குறைந்த வீரியம் கொண்ட யுரேனியம் தற்போது கையிருப்பாக உள்ளது. இதை இன்னும் 15 ஆண்டுகளுக்குள் வெறும் 300 கிலோவாக குறைத்துக் கொள்ளவும் ஈரான் முடிவு செய்துள்ளது.

25 ஆண்டுகள் வரை சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாட்டு நடுவர்கள் எந்நேரமும் ஈரானின் அணு உலைகளை பார்வையிடவும் ஈரான் அனுமதியளித்துள்ளது. இவை உள்பட பல்வேறு சாராம்சங்களை கொண்ட இறுதி உடன்படிக்கையை வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் P5+1 நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ள ஈரான் சம்மதித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் பெரிதும் பாராட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது வரலாற்று சிறப்பு மிக்க, நல்ல ஒப்பந்தமாகும் என குறிப்பிட்டுள்ள ஒபாமா, இந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக கடைபிடித்தால் ஈரான் அணு அயுதம் தயாரிக்க வாய்ப்பாக உள்ள அனைத்து வழிகளும் அடைக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் தொலைபேசி மூலமாக ஒபாமா இன்று தெரிவித்தார். அப்போது, இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த பெஞ்சமின் நேதன்யாகு, ‘இது போன்ற ஒப்பந்தங்களால் எல்லாம் ஈரான் அணு குண்டு தயாரிப்பதை நிறுத்திவிட முடியாது. மாறாக, அணு குண்டு தயாரிக்க பாதை அமைத்து தந்து இஸ்ரேலின் நிரந்தரத்தன்மைக்கு கேள்விக்குறியாக இந்த ஒப்பந்தம் அமைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்’ என குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *