உள்ளாட்சி தேர்தலில் வன்முறை | வங்காளதேசம்


வங்காளதேசத்தில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தல் கட்சி அடிப்படையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 5-வது கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது பல இடங்களில் வன்முறை தலைவிரித்தாடியது.

ஜமால்பூர், சிட்டகாங், நாகாளி, கமிலா, பஞ்சகார், நாராயண்கஞ்ச் ஆகிய இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழப்புகள் நேரிட்டன.

குறிப்பாக, ஜமால்பூரில் 2 வேட்பாளர்களுடைய ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை முடிவுக்கு கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாயிற்று. இதில் குண்டுபாய்ந்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மற்றொரு சம்பவத்தில் கமாலுதீன், முகமது யாசின் ஆகிய 2 வேட்பாளர்கள் கொல்லப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் வன்முறை சம்பவங்களில் மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாக டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

முதல் கட்ட தேர்தலின்போது நடந்த வன்முறை சம்பவங்களில் 10 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமின்றி, அந்த நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பற்றி 3½ மாதங்களுக்கு முன் அறிவித்ததில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் வன்முறை சம்பவங்களில் சிக்கி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *