மூன்று வாரத்தில் வட கொரியா மூன்றாவது ஏவுகணை சோதனை

0 views

வட கொரியா ஒருசில வாரங்களுக்குள் மூன்றாவது ஏவுகணை சோதனையாக நேற்று குறுகிய தூர ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்த ஸ்கட் ஏவுகணை சுமார் 450 கிலோமீற்றர் தூரம் தாவிச் சென்று ஜப்பான் நீரில் விழுந்துள்ளது குறித்து ஜப்பான் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை வட கொரியா அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணை திறனை பெறுவதில் முன்னேற்றம் காண்பதை காட்டுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அணு மற்றும் ஏவுகணை சோதனை நடத்த ஐ.நா விதித்திருக்கும் தடையை வட கொரியா தொடர்ந்து மீறி வருகிறது. அண்மைய மாதங்களில் அதன் சோதனைகள் அதிகரித்து வருகின்றன.

வட கொரியாவின் வொன்சானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சுமார் ஆறு நிமிடங்கள் தாவி, தரையிறங்கியதாக அமெரிக்க பசிபிக் கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யொஷிஹிடே சுகா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஏவுகணை ஜப்பானின் சடோ மற்றும் ஒகி தீவுகளுக்கு இடையில் தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் விழுந்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஏவுகணை 120 கிலோமீற்றர் உயரத்தை எட்டி இருப்பதாக தென் கொரிய இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட தரவுகள் பற்றி தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்,

ஏவுகணை செலுத்தப்பட்ட தளத்தை கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் செலுத்தப்பட்டிருப்பதை காட்டுவதாக தெரிவித்தார்.

வட கொரியா புதிய விமான எதிர்ப்பு ஆயுத அமைப்பை சோதித்ததாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கும் நிலையிலேயே புதிய ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோவியட் ஒன்றியம் மேம்படுத்திய பெரும் எண்ணிக்கையிலான குறுகிய தூர ஸ்கட் ஏவுகணைகள் வட கொரியாவிடம் இருப்பதாக நம்பப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட ஸ்கட் ஏவுகணை கள் 1,000 கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடியதாகும். வட கொரியா சோதித்த இதற்கு முந்தைய இரு ஏவுகணைகளும் மத்திய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளாகும். இந்த இரண்டு சோதனைகளும் வெற்றி அளித்ததாக வட கொரியா அறிவித்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =