சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது | சிரியா


சிரியாவின் அலெப்போ நகரில், அந்த நாட்டு அரசுப் படைகளும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அலெப்போ நகரில் அரசுப் படைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஈவு இரக்கமில்லாமல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.
சாதாரண கொள்கலன்களில் வெடி மருந்துகளையும், காயமேற்படுத்தும் கூரான பொருள்களையும் நிரப்பி உருவாக்கப்படும் “பேரல்’ வெடிகுண்டுகளை சிரியா அரசு மக்கள் மீது வீசி வருகிறது.
இத்தகைய வெடிகுண்டுகள் பெரும் நாசத்தை விளைவிப்பவை.
அலெப்போ மக்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று குவிக்கும் அரசின் கொள்கையையே இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தத் தாக்குதலால் கடந்த ஆண்டு பொதுமக்கள் 3,000 பேர் உயிரிழந்தனர்.
கிளர்ச்சியாளர்கள்: அரசை எதிர்த்துப் போரிடும் கிளர்ச்சியாளர்களும் போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தொலைதூர எறிகுண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றைக் கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.
அவர்களது தாக்குதலால் கடந்த ஆண்டு 600 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்கத் தாக்குதலில் 64 பொதுமக்கள் பலி’: இதற்கிடையே, சிரியாவின் பிர் மாஹ்லி கிராமத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை கடந்த வியாழக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளதாக சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது.
உயிரிழந்தவர்களில் 31 சிறுவர்களும் அடங்குவர் என்று அந்த அமைப்பு
கூறியது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்டிஸ் கெல்லாக் கூறியதாவது:
தாக்குதல் நிகழ்த்துவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
50 இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளைக் குறிவைத்தே தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய ஒரு வாகனமும் அழிக்கப்பட்டது.
எனினும் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *