அதிநவீன ஏவுகணைகளை எல்லையில் குவித்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் | வடகொரியா எச்சரிக்கை


அதிநவீன ஏவுகணைகளை எல்லையில் குவித்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்கா, தென் கொரியா நாடுகளுக்கு வடகொரியா கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

வடகொரியா, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது அணுசக்தி ஆயுத பரிசோதனைகளை நடத்துவதை வழக்கமாக கொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு விதமான ஏவுகணைகளை ஏவி சோதனைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலை தூர அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதித்து பார்ப்பதில் வடகொரியா தீவிரமாக உள்ளது.

இந்த சோதனைகள் எல்லாமே தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இருப்பதால் அண்மையில் அமெரிக்காவின் ‘தாட்’ என்னும் அதிநவீன ஏவுகணையை வடகொரியா எல்லையையொட்டிய தென்கொரிய பகுதிக்குள் குவிக்கப் போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டாக அறிவித்தன.

இந்த ஏவுகணை அந்த பகுதியில் வரும் எத்தகைய ஏவுகணையையும் வழிமறித்து தாக்கி நிர்மூலமாக்கும் தன்மை கொண்டது. அணு ஆயுதத்தை சுமந்து வரும் ஏவுகணையைக் கூட அதன் தாக்கமின்றி தகர்த்துவிடும். இந்த வகை தாட் ஏவுகணை எப்போது, எந்த பகுதியில் குவிக்கப்படும் என்பதை அமெரிக்காவும், தென்கொரியாவும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அமெரிக்காவின் அறிவிப்பால் பீதிக்கு உள்ளான வடகொரிய ராணுவம் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மிரட்டல் விடுத்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

போர் சூழலை உருவாக்கும் விதமாக தாட் ஏவுகணைகளை தென்கொரிய எல்லையில் நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது. தாட் ஏவுகணை தென்கொரியாவின் எந்த பகுதியில் குவிக்கப்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக வடகொரிய ராணுவம் தாக்குதல் நடத்தும். இதற்கான அதிநவீன வசதி எங்களிடம் இருக்கிறது. இத்தகைய வசதிகள் மூலம் கருணையின்றியும் மிகுந்த வலிமையாகவும் எங்களால் அமெரிக்காவின் தாட் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்த இயலும். இந்த ரக ஏவுகணைகளை குவிப்பது தென்கொரியா தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் முடிவாகத்தான் இருக்கும்.

எனவே மீண்டும் ஒரு முறை எதிரிகளுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். இதில் நாங்கள் உறுதியாகவும் இருக்கிறோம். தாட் ஏவுகணைகள் குவிக்கப்பட்டவுடன், தயவு தாட்சண்யம் இன்றி பதிலடி கொடுத்து தென் கொரியாவை சாம்பலாக்கி கடலில் கரைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *