250 தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி | இலங்கை அரசு முடிவு


குறிப்பிட்ட நாட்களில், இலங்கை கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. தற்போதைய நிலையில், இலங்கை சிறைகளில், 67 தமிழக மீனவர்களும், அவர்களின் 98 படகுகளும் இருப்பதாக தெரிகிறது.
மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இதற்கிடையே பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, இந்திய மீனவர்கள் சிலருக்கு இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு லைசென்சு வழங்கும் முறையை அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக ‘சன்டே டைம்ஸ்’ என்ற செய்தித்தாளில் செய்தி வெளியாகியது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் மற்றும் அவர்களுடைய படகுகளையும் விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாவும் கடிதம் எழுதினார். இப்பிரச்சினையில் புதிய திருப்பமாக, குறிப்பிட்ட நாட்களில், இலங்கையில் ஆழ்கடலில் மீன் பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ”இந்த முடிவு, இலங்கை அரசுக்கு நன்மையாகவே அமையும். ஏனென்றால், தினமும் 3 ஆயிரம் தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் நுழைந்து, மீன் பிடிக்கிறார்கள்.
அவர்கள் மீன் குஞ்சுகளையும் பிடிப்பதால், மீன்வளம் அழிந்து வருகிறது. எனவே, இப்பிரச்சினைக்கான தீர்வாக, தற்காலிக நடவடிக்கையாக, இந்த முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது,” இலங்கை அரசு வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் கொண்டு வந்தார். அந்த மசோதா நிறைவேறி விட்டபோதிலும், இன்னும் அமலுக்கு வரவில்லை. எனவே, தடை அமலுக்கு வராத நிலையில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க உள்ளது. இந்த முடிவை மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் வரவேற்று இருந்தாலும், 6 கடலோர மாவட்டங்களுக்கும் சேர்த்து, 250 மீனவர்களுக்கு மட்டும் அனுமதி என்பது மிகவும் குறைவானது என்றும், அதிகமான மீனவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *