ஜனாதிபதி பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் தகுதியானவர் | ஜனாதிபதி ஒபாமா


ஹிலாரியை விட வேறு எந்த ஆணும், பெண்ணும் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை, அவரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுங்கள் என்று அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு கேட்டு பேசினார்.

அவர் கூறியதாவது, இத்தனை பெரிய கூட்டத்தில் பேசுவதற்கு லேசாக பதற்றமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் நான் நம்பிக்கையால் நிரப்பப்பட்டுள்ளேன். நான் அமெரிக்கா மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். கடந்த காலத்தில் எவ்வளவோ நடந்திருக்கிறது. இந்த நாடு போரினாலும், பொருளாதார மந்த நிலையினாலும் சோதிக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியை நிறைவு செய்கிற நிலையில் நான் உங்கள் முன் நிற்கிறேன். இதுவரை இருந்ததை விட அமெரிக்காவின் எதிர்காலம் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

ஒசாமா பின்லேடனுக்கு சரியான தீர்ப்பு வழங்கி இருக்கிறோம். ராஜ்யரீதியில் ஈரான் அணு ஆயுதத்திட்டத்தை கைவிட வைத்திருக்கிறோம். கியூபா மக்களுடனான உறவில் புதிய அத்தியாயத்தை திறந்துள்ளோம். பருவநிலை மாற்ற பிரச்சினையில் 200 நாடுகளை ஒன்று சேர்த்து உடன்படிக்கை ஏற்படுத்தினோம். நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது.

8 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் நானும், ஹிலாரியும் போட்டியாளர்களாக இருந்தோம். நாங்கள் ஒன்றரை ஆண்டு காலம் சண்டையிட்டோம். அது கடினமாக இருந்தது. நான் செய்ததையெல்லாம் அவர் செய்தார். எனக்கு பின்னே அவர் வலிமையுடன் தொடர்ந்தார். கடைசியில் அவரை நான் என் மந்திரிசபையில் சேருமாறு சொன்னேன். அவர் கொஞ்சம் ஆச்சரியப்பட்டார். கடைசியில் ஒத்துக்கொண்டார். நம்ப முடியாத அளவுக்கு அவர் பணியாற்றினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஹிலாரியை விட எந்தவொரு ஆணோ, பெண்ணோ, ஏன் நானோ, பில் கிளிண்டனோ தகுதியானவர்கள் அல்ல. பில் கிளிண்டன் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.

அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஹிலாரி நிறைய திட்டங்களை வைத்துள்ளார். தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு திட்டங்கள் வைத்துள்ளார்.

டொனால்டு டிரம்பிடம் எந்த திட்டமும் கிடையாது. அவர் தன்னை தொழில் அதிபர் என்றுதான் அழைத்துக்கொள்கிறார். அமெரிக்கா பலவீனமாக இருப்பதாக அவர் கருதுகிறார். அவர் கோடிக்கணக்கான ஆண்களின், பெண்களின், குழந்தைகளின் வார்த்தைகளை கேட்டதில்லை. அவர்கள் சுதந்திரத்தின் வெளிச்சத்தை, கண்ணியத்தை, மனித உரிமைகளை அறிவார்கள்.

அமெரிக்கா வலிமையாக இருக்கிறது. நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நமது வலிமை, நமது பெருந்தன்மை டிரம்பை சார்ந்து இருக்க வில்லை. உண்மையை சொல்வதானால் எந்த தனிமனிதரையும் சார்ந்து இருக்கவில்லை.

ஹிலாரி கிளிண்டன் இந்த பன்முக நாட்டை நன்கு அறிந்திருக்கிறார். அவர் நாட்டைப் பார்த்திருக்கிறார். பயணம் செய்திருக்கிறார். முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார். நெடுங்காலமாக உள்ள பிரச்சினைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள். ஹிலாரிக்கு எல்லாம் தெரியும்.

நீங்கள் எனக்கு செய்ததை ஹிலாரிக்கும் செய்ய வேண்டும் என்று கேட்கிறேன். என்னை நீங்கள் எப்படி நடத்தி வந்திருக்கிறீர்களோ அப்படியே அவரையும் நடத்துங்கள்.

வெறுப்பு மனப்பான்மையை கைவிடவும், பயத்தை மறுக்கவும், சிறப்பானதை செய்யவும்.  நீங்கள் என்னோடு சேர வேண்டும். ஹிலாரியை அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *