பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் இராஜினாமா


பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர்.

இது தொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது நிரூபணமான தால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதனையடுத்தே இவர் இராஜினாமாச் செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க நாடான பனாமா, வரி ஏய்ப்பாளரின் சொர்க்கமாகத் திகழும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பனாமாவில் இரகசியமாக போலி நிறுவனங்களைப் பதிவு செய்து, அவற்றின் மூலம் வரி ஏய்ப்புப் பணத்தைப் பரிவர்த்தனை செய்து வருவது கடந்த ஆண்டு தெரியவந்தது. சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு நடத்திய புலனாய்வில் பனாமா போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்கள் வெளியாகின. பனாமா ஆவணங்கள் மூலம், பல நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், நிறுவனங்கள் பெயர்கள் அம்பலமாயிற்று. இந்தியர்கள் சிலரின் பெயர்களும் அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினருக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியிருப்புகள் இருப்பது அதன் மூலம் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ஊழல் செய்து சேர்த்த தொகை மூலம் வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததாக நவாஸ் ஷெரீஃப் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. விசாரணை இடையே இலண்டன் குடியிருப்புகளை வாங்குவதற்குப் பணம் அளித்ததாக கட்டார் இளவரசர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =