ரூ.55,000 கோடி தாய்லாந்து முன்னாள் பிரதமரால் அரசுக்கு நஷ்டம்


சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தனது பதவிக் காலத்தில் அரசுக்கு 820 கோடி டாலர் (சுமார் ரூ.55,000 கோடி) நஷ்டம் ஏற்படுத்தியதாக, உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பனடா திஸாகுல் தெரிவித்ததாவது:

அரிசி மானியத் திட்டத்தின் மூலம் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, அரசுக்கு 820 கோடி டாலர் இழப்பு ஏற்படுத்தியுள்ளதை, இதுதொடர்பாக அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு உறுதி செய்துள்ளது. மேலும், அந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட 54 லட்சம் டாலர் (சுமார் ரூ.3,590 கோடி) இழப்புக்கு அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் பூன்சாங் தெரியாபிரோம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்தக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மக்களின் வரிப் பணத்தை விரயமாக்கும் ஆட்சியாளர்களுக்கு படிப்பினை கற்பிக்கும் வகையில், யிங்லக் ஷினவத்ராவின் முந்தைய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுதொடர்பாக பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தலைமையில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது என்றார் அமைச்சர் பனடா திஸாகுல்.

அரிசிக்கு மானியம் அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து அமோக வெற்றி பெற்ற யிங்லக் ஷினவத்ரா, தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராக கடந்த 2011-ஆம் ஆண்டு பதவியேற்றார். எனினும், அரிசி மானியத் திட்டத்தால் அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி அவரது ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *