ஹிலாரி கிளிண்டனின் உடல் தகுதி பற்றி டாக்டர் பரபரப்பு அறிக்கை


அமெரிக்க ஜனாதிபதியாக செயல்படத்தக்க அளவுக்கு ஹிலாரி கிளிண்டனுக்கு உடல் தகுதி இருக்கிறதா என்பது பற்றி டாக்டர் பரபரப்பு அறிக்கை அளித்திருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தல் களமும் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நியூயார்க் நகரில், அமெரிக்க தாக்குதல் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு (வயது 68), திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் அவசர அவசரமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அவர் தனது தேர்தல் பிரசாரத்தையும் தற்காலிகமாக நிறுத்தினார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவத்தொடங்கின.

இந்த நிலையில் அவருக்கு நிமோனியா தாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ஹிலாரி கிளிண்டன், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் லிசா பார்டாக் அளித்த மருத்துவ அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய தகவல்கள் வருமாறு:-

ஹிலாரி தனக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருக்கிறார். நிமோனியா தடுப்பூசியும் போட்டிருக்கிறார்.

ஹிலாரியின் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அளவு, அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கூறக்கூடிய அளவுக்கு இருக்கிறது.

அவரது மேமோகிராம் பரிசோதனை (மார்பக ஊடுகதிர் பரிசோதனை), அல்டிராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருக்கின்றன.

அவர் தைராய்டு, ஒவ்வாமை மருந்துகளை எடுத்து வருகிறார்.

2012-ம் ஆண்டு அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டு, அதன் காரணமாக அவரது மூளைக்கும், மண்டையோட்டுக்கும் இடையே ரத்த உறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு தேவையான மருந்துகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்தும், ஓய்வு எடுத்தும் ஹிலாரி நலம் பெற்று வருகிறார். அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக செயல்படுவதற்கு ஏற்ற தகுதியுடன் இருக்கிறார்.

இவ்வாறு டாக்டர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் ஹிலாரி எடுத்துவருகிற மருந்துகளின் பெயர்களும் கூட பட்டியலிடப்பட்டுள்ளன.

இதேபோன்று அவரது பிரசார குழுவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ஹிலாரி கிளிண்டனை அவரது மருத்துவர் பரிசோதித்து பார்த்தார். அவரது முழுமையான உடல் பரிசோதனை, இயல்பாக அமைந்துள்ளது. அவர் மிகச்சிறப்பான மன நலம் கொண்டிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவரது நெஞ்சுப்பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் லேசானதும், பரவும் இயல்பும் இல்லாததுமான நிமோனியா தாக்கி இருப்பது தெரிய வந்தது” என கூறப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *