பசிபிக் வர்த்தக உடன்பாட்டுக்கு எதிராக போர்க்கொடி | ஹிலாரி கிளிண்டன்


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தீவிர முயற்சியின் காரணமாக பசிபிக் நாடுகளான கனடா, மெக்சிகோ, பெரு, சிலி, ஜப்பான், வியட்நாம், புருனே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 5-ந் தேதி தாராள வர்த்தக உடன்பாடு ஏற்பட்டது. நீண்டதொரு பேச்சு வார்த்தைக்கு பின்னர் இந்த உடன்பாடு கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம், 12 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வாய்ப்பாக அமைவதால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேலைவாய்ப்பினை பெருக்கும், விரைவான நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என கருதப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் களம் இறங்கியுள்ள அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இது தொடர்பாக இயோவா மாகாணத்தில், மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே அளித்த பேட்டியில் அவர், “இன்றைய நிலவரப்படி, பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்துக்கு எனது ஆதரவு இல்லை. நான் நிச்சயித்திருக்கிற உயர்ந்தபட்ச குறிக்கோளை எட்டுவதற்கு இந்த உடன்பாடு ஏற்றது என நான் நம்பவில்லை” என கூறினார். மேலும் அவர் கூறுகையில், “அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்குகிற, சம்பளத்தை உயர்த்துகிற, தேச பாதுகாப்பை முன்னேற்றுகிற வகையிலான வர்த்தக உடன்பாடுதான் வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே கூறி வருகிறேன்” என குறிப்பிட்டார்.

ஒரே கட்சியில் இருந்தாலும், தொடர்ந்து ஒபாமாவின் முடிவுகளுக்கு எதிராக ஹிலாரி கிளிண்டன் பேசி வருவது அமெரிக்க அரசியலில் விவாதப்பொருளாகி இருக்கிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *