நினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது | தமிழ் அரசியல் தலைவர்கள் கோரிக்கை


மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கக் கூடாது என்று  தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையிலே, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

“இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் இது நல்லாட்சி என்றால் தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்றுகூடுவதற்கும், மரணித்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது.

தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது முக்கியமானதாக விளங்குகிறது. எனவே, தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி – அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.

இதனை எவராவது தடுத்தால் அது பாரிய மனித உரிமை மீறலாகும்.

மரணித்தவர்கள் மதிக்கப்படவேண்டும். அவர்களை நினைவுகூருவதைத் தடுக்க முயல்வது தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்றும், நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும் என்றும் இந்த அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன்” என இரா. சம்பந்தன் கூறினார்.

“தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர் நீத்த போராளிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் நாம் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

இதற்கான உரிமை சகல தரப்பினருக்கும் உண்டு என்பதால் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை இராணுவத்தினரும் பாதுகாப்புத் தரப்பினரும் தடுப்பதற்கு முற்படக்கூடாது”. என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *