அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையின் வெற்றி விழாவை வடகொரியா கொண்டாடியது


அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையின் வெற்றி விழாவை வடகொரியா கொண்டாடியது. இதில் பேரணி, வாண வேடிக்கை, நடனம் என அமர்க்களப்பட்டது.

அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) வடகொரியா கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது.

அந்த நாடு இதுவரை ஏவி சோதித்த அத்தனை ஏவுகணைகளையும் மிஞ்சுகிற விதத்தில் இந்த ஏவுகணை, 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது.இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவை மட்டுமல்லாது உலக நாடுகளையெல்லாம் அசைத்திருக்கிறது. வடகொரியா அணு ஆயுத நாடாகி உள்ளது, ஏவுகணைகளை ஏவுகிற வல்லமை படைத்த நாடாகி இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்துள்ளார்.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் இனி என்ன செய்வது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், கைகளைப் பிசைகிற நிலை உருவாகி உள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை வெறும் 20 நிமிடங்களுக்குள்ளாக அமெரிக்காவின் ஹவாய் தீவினை தாக்குகிற ஆற்றல் வாய்ந்தது என்பதால், அங்கு பனிப்போருக்கு பின்னர் இப்போது முதல் முறையாக அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை அபாய சங்கு ஒலித்து சோதனை நடந்திருக்கிறது.

இதற்கிடையே வடகொரியா, நேற்று முன்தினம் பியாங்யாங் நகரில் மிக பிரமாண்டமான வெற்றி கொண்டாட்டம் நடத்தியது. அது குறித்த தகவல்களை அந்த நாடு நேற்று வெளியிட்டுள்ளது.வடகொரியாவின் ஆளுங்கட்சி (தொழிலாளர் கட்சி) பத்திரிகையான ‘ரோடாங் சின்முன்’ தனது முதல் பக்கத்தில் இந்த வெற்றி விழா கொண்டாட்ட பேரணி படத்தை பிரசுரித்துள்ளது.

பியாங்யாங் கிம்-2 சங் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து, பேரணியாக வந்தனர். அவர்கள் ஏந்தி இருந்த ஒரு பதாகையில், “ ஹவாசாங்-15 ஏவுகணை சோதனை வெற்றியை முழு மனதுடன் கொண்டாடுகிறோம். இது வடகொரியாவின் சக்தியை, வல்லமையை உலகுக்கு பறை சாற்றும்” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

மற்றொரு பதாகையில், “வடகொரியாவை அணு ஆயுத நாடாக பிரகடனம் செய்து சரித்திரம் படைத்துள்ள ஜெனரல் கிம் ஜாங் அன் வாழ்க பல்லாண்டு” என எழுதப்பட்டிருந்தது.

இந்த கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நடனம், வாணவேடிக்கை, பேரணி என கொண்டாட்டத்தில் களை கட்டியது. வாண வேடிக்கை கண்களைப் பறிக்கும் விதத்தில் அமைந்தது.

இருப்பினும் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் பங்கேற்கவில்லை. பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =