ஏமன் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 43 வீரர்கள் பலி, 60 பேர் படுகாயம்


வடகிழக்கு ஏடனின் அல் ஏரிஷ் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் சாவ்லபா ராணுவ தளத்தில் நேற்று படையினர் சம்பளம் வாங்குவதற்காக அணி வகுத்து நின்றனர்.

அப்போது அந்த கூட்டத்தில் நைசாக நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தன் உடலில் கட்டி வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச்செய்தார். பலத்த சத்தத்துடன் அந்த குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த ராணுவ தளமே குலுங்கியது. கரும்புகை மண்டலமும் உருவானது. வீரர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர், மீட்புப் படையினர் குவிந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் 43 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

8 நாட்களுக்கு முன்பாக ஏடன் நகரில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய இதே போன்றதொரு தாக்குதலில் 48 படை வீரர்கள் கொல்லப்பட்டதும், 29 பேர் படுகாயம் அடைந்ததும் நினைவுகூரத்தக்கது. அதன் சுவடு மறைவதற்கு முன்பு நேற்றும் தாக்குதல் நடந்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *