விக்கிலீக்ஸ் இணையதளம் சவுதி அரேபியாவின் அரசாங்க ஆவணங்களை கசியவிட்டது


சவுதி அரேபியாவின் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய அரசாங்க ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் வாரங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியிடப்படும் என்றும் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

’மக்களின் உளவாளி’ என்று அழைக்கப்படும் ஜீலியன் அசாஞ்சே மக்களிடம் இருந்து திட்டமிட்டு மறைக்கப்படும் அரசு ஆவணங்களை வெளியிடும் இணையதளமே விக்கிலீக்ஸ். நாமெல்லாம் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதை அம்பலப்படுத்தியதால், தன் சுதந்திரத்தை அசாஞ்சே இழந்து நேற்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றது.

லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த அவர், கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி முதல் தூதரகக் கட்டிடத்திற்குள்ளேயே தன் வாழ்நாளைக் கழித்து வருகிறார். அவர் மீது சுவீடன் நாட்டில் பாலியல் புகார் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த கட்டிடத்திற்கு வெளியே அவர் கால் வைத்தால் அடுத்த நொடியே அவர் கைதுசெய்யப்படுவார்.

உலக நாடுகளில் உள்ள 247 அமெரிக்க தூதரகங்களில் இருந்து தங்கள் நாட்டுக்கு பரிமாறப்பட்ட ஆயிரக்கணக்கான ரகசிய குறிப்புகள் உட்பட இரண்டரை லட்சம் ஆவணங்களை, புலனாய்வு வலைத்தளமான விக்கிலீக்ஸ் கடந்த 2010-ம் ஆண்டு அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *