கல்லூரியின் பாடத் திட்டங்களை இணையதளம் வழியாக சீன மாணவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது


பிரிட்டனின் பிரபல ஈட்டன் கல்லூரியின் பாடத் திட்டங்களை இணையதளம் வழியாக சீன மாணவர்களுக்கு அளிக்கப்படவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் பெர்க்ஷயர் பகுதியில் 1440-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஈட்டன் கல்லூரி. கடந்த 615 ஆண்டு சரித்திரத்தில், 19 பிரிட்டிஷ் பிரதமர்களை உருவாக்கியதைப் பெருமையாகக் கூறி வருகிறது.
தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் இங்கு கல்வி கற்றார்.
இந்தப் பிரபல கல்வி நிலையத்தின் சில பாடத் திட்டங்களை இணையதளம் வழியாக சீன மாணவர்கள் பயிலத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத் திட்டத்துக்கும் தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, “நவீன தலைமைப் பண்பு’ குறித்த பாடத் திட்டத்தின் கட்டணம் 700 பவுண்டு (சுமார் ரூ. 70 ஆயிரம்).
இந்தப் பாடத்தின் கீழ், ஈட்டனின் ஆசிரியர்கள் உருவாக்கிய பாடத் திட்டத்தை இணையதளம் வழி நடத்துவதோடு, சீன ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களின் கூட்டு நடவடிக்கைகள் நடத்தப்படும்.
ஆன்லைன் முறையில் பாடத் திட்டங்களை அளிப்பது தொடர்பாக ஈட்டன் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் பெர்ஸி ஹாரிசன் கூறுகையில், “தொன்று தொட்டு வரும் கல்லூரியின் பண்புகளில் எந்தக் குறைவும் வராமல், ஆன்லைன் முறையில் பயிற்றுவிக்க முடியும். அதே வேளையில், வெளிநாட்டில் புதிதாக கல்வி நிலையம் அமைக்கும் சிக்கலான நடவடிக்கையையும் தவிர்க்க முடியும்’ என்று கூறினார்.
ஈட்டனிலிருந்து பல ஆசிரியர்கள் சீனா சென்று, கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடையே விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகே சீன மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார். பெருமை மிக்க இந்தக் கல்வி நிலையம் ஈட்டன் கல்லூரி என்று அறியப்பட்டபோதிலும், 13 வயது முதல் 18 வயதுள்ள மாணவர்களே இங்கு கல்வி பயில்கின்றனர். கல்விக் காலத்துக்குப் பிறகு அவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர் கல்வி பெறலாம்.
முற்றிலும் ஆண்களுக்கான இந்தக் கல்வி நிலையத்தில் பயில, தற்போதைய ஆண்டுக் கட்டணம் குறைந்தபட்சம் 12,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 12 லட்சம்). இசை உள்ளிட்ட பல பாடங்களுக்குத் தனிக் கட்டணம் உண்டு.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *