பாகிஸ்தானில் தீவிரவாதிகளை தீர்த்துக்கட்ட 5 ஆயிரம் பேர் கொண்ட சிறப்புப் படை உருவாகின்றது


தீவிரவாதிகளின் தொல்லையை ஒழிக்கும் பணியில் 5 ஆயிரம் பேர் கொண்ட தீவிரவாத தடுப்பு சிறப்புப் படை உருவாக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் கடந்த 16-ம் தேதி புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர்.

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள தலிபான்களின் அட்டூழியத்தை ஒடுக்க அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரிப் கடந்த 17-ம் தேதி கூட்டினார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் கான் மற்றும் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நவாஸ் ஷெரிப், ‘கடைசி தீவிரவாதியை தீர்த்துக் கட்டும் வரை தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் ‘ஸர்ப்-இ-அஸப்’ தாக்குதல் தொடரும். இந்த தாக்குதலை மேலும் தீவிரமாக்குவது தொடர்பாக பரிந்துரைக்க உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் இடம் பெறும் தேசிய செயல்திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் நடத்தப்படும் தலிபான்களுக்கு எதிரான உச்சக்கட்ட தாக்குதலில் நல்ல தலிபான், கெட்ட தலிபான் என்று பாகுபாடு பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’ என்று தெரிவித்திருந்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *