பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை


வரும் ஜுன் 30க்குள் பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-சா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தொழிலாளர் அமைச்சகத்தின் மந்தமான பதிவு செய்யும் பணியால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்ட பிரதமர், அமைச்சக நிர்வாகத்தைக் கண்டித்திருக்கிறார்.

பதிவு செய்ய தேவையான ஸ்கேன் இயந்திரங்கள் போதுமான அளவில் இல்லாததால் இப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஏன் கூடுதலாக அந்த இயந்திரங்களை வாங்கவில்லை என அந்நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்தே, வரும் ஜூன் 30 க்குள் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் சட்டத்தினைக் கடந்த 2017 ஜூன் மாதம் தாய்லாந்து ராணுவ அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த சில தினங்களுக்கு ஆவணங்களற்ற தொழிலாளர்களைப்  பதிவுச்செய்யும் பணிகள் நடைபெற்ற வந்தன. ஆனால், இதற்கு அஞ்சிய பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாய்லாந்து விட்டு வெளியேறி வந்ததால் ஒரு நெருக்கடியான சூழல் உருவானது. அதுமட்டுமின்றி இத்தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து எழுந்த அழுத்தத்தினாலும் இச்சட்டம் அமல்படுத்துவதிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், தாய்லாந்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெருமளவிலான தொழிலாளர்கள் தாய்லாந்தைச் சுற்றியுள்ள மியான்மர், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட வறுமை மிகுந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கையில் சரிபாதி அளவிலான தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

படம்: வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு கடல் உணவு தொழிற்சாலையை ஆய்வுச்செய்யும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-சாஇ நன்றி: DVB

 

Report by Migration Correspondent -Altamira World WideLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =