மார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்!


மார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்; இக்காலப்பதிவு

இங்கு பிரச்சனை இராசராச சோழன் மட்டும் இல்லை. தமிழர் பெருமை பேசினால் முற்போக்கு சீவிகள் பலருக்கு ஆகாது. தமிழரசன், பிரபாகரன் ஆகாது. ஸ்டாலின், லெனின், மார்க்ஸ், மாவோ,
,பெரியார், அம்பேத்கர் இனிக்கும். அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் ஆனால் தமிழின எதிர்ப்பு என்றால் ஒன்று கூடி விடுவார்கள்.

அரசர்கள் காலத்தில் ஆக்கிரமிப்பு , படையெடுப்பு, போர்வீரர்கள் உயிரிழப்பு என எல்லா நாட்டிலும் இருந்தது தான். அப்படி செய்யாதிருக்காவிட்டால் நமது நிலம் வேறு ஒருவருக்கு அடிமையாகத் தான் இருந்திருக்கும்.

இராசராசன் படைகளைப் பெருக்காமல் கோவில்கள் கட்டாமல் நீர்நிலைகளை உருவாக்காமல் ஒரு பேரரசனாக உருவாகாமல் முட்டி போட்டு இருந்திருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் அவா. அது எப்படி உங்களில் இருந்து அப்படி ஒரு பேரரசன் வரலாம் என்பது தான் இவர்களின் கடுப்பு.

இராசராசன் எப்படி எல்லாம் ஆண்டிருக்கிறான் என்ற வியப்பிற்கும்
இராசராசன் இப்படி எல்லாம் ஆளலாமோ என்கிற காழ்ப்புணர்ச்சிக்கும் இடையில் தான் இவ்வளவு கருத்து மோதல்கள்.

அப்புறம் அவர் பெயர் வட மொழியில் இருக்கு? அருண் மொழி வர்மன் என்றால் இதெல்லாம் செல்லாது என்கிறீர்கள். சரி, இன்று தமிழ் தேசியம் பேசும் தமிழை உயிராய் நேசிக்கும் பலரின் பெயர்களும் ஷ், ஜ, உஷ் என்று தான் உள்ளது. பல தமிழ் நூல்களில் வடமொழிக் கலப்பு உள்ளது. அதனால் நூல்களையும் எங்களையும் எரித்து விடலாமா?

தேவதாசி மரபு ?

இறையடியார்களாக (தேவரடியாராக) இருந்த மரபு விஜயநகரப் பேரரசுக்குப் பின் தான் பொட்டு கட்டி தேவதாசிகளாக மாற்றப்பட்டனர். வரலாற்றைப் படியுங்கள்.

உழைப்புச் சுரண்டல்?

அனைவரையும் கடுமையாக அடிமை வேலை வாங்கி கோயிலைக் கட்டினான் என்றால் எதற்கு அவர்களின் பெயரை கல்வெட்டுகளில் பொறிக்க வேண்டும்? ஏன் இறையிலி நிலங்கள் வழங்க வேண்டும். முடிந்தவர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியும் இயலாதவர்கள் உடல் உழைப்பையும் தந்தார்கள். ஆதாரங்கள் உண்டு.

பிராமண அடிவருடி?

பல்லவர்கள் உருவாக்கிய பிரம்மதேயங்களில் இருந்து கோயிலை அதிகார மையமாக மிகத் தந்திரமாக பார்ப்பனர்களை பகைத்துக் கொள்ளாமலேயே செய்த சோழன் அதை ஒரு அறக்கட்டளை நிறுவனமாக மாற்ற முயன்றான்.

பொதுச் சொத்துகளை கோயிலுக்குக் கொடுத்து அதில் கிடைக்கும் வருவாயை கல்வி, கலை, மருத்துவம் போன்ற பணிகளுக்குத் திருப்பி விட முயன்றுள்ளான். பாசனத் திட்டங்கள் பற்றிய கல்வெட்டுகள் பெரும்பான்மை பிற்காலச் சோழர்களுடையதாகவே உள்ளன என்கிறார் பழ.கோமதிநாயகம்.

கோயிலைப் பொருளியல் மண்டலமாக மாற்றி பறையர்களுக்கு இறையிலி நிலங்களை வழங்கினான். படைகளைப் பெருக்கினான்.

நொபொரு கரசிமா தனது ஆய்வில் சோழர்களின் காலத்தில் பிரம்மதேயங்களும், பார்ப்பன தனியார் நிலங்களும் கோவில்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக்க் கூறுகிறார். அதாவது இராசராசன் பிரம்மதேயங்களின் அதிகார மையத்தை உடைக்க மாற்று அதிகார மையமாக கோவிலை உருவாக்கியுள்ளான். ஏனெனில் பல்லவர்கள் சமற்கிருதத்தை அறிமுகம் செய்து வளர்ப்பதற்கு உதவினார்கள்.

இராசராசன் போன்றவர்கள் தமிழுக்கு முதன்மை கொடுக்க முனைந்தனர். இதற்கு பக்தி இயக்கத்தையும் பயன்படுத்திக் கொண்டான். தில்லையில் தமிழ்மறைகளை மீட்டெடுத்ததும் அதன் பொருட்டே. பாஜக வை தோளில் போட்டு கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் அடிவருடிகள் இல்லை. போராளிகள்.

எஸ்.ராகவன், நொபுரு கரசிமா, தொ .ப , ஆ .சி , குடவாயில் பாலசுப்பிரமணியம் ஆய்வைக் கொண்டு வந்தால் அவர்கள் அதெல்லாம் செல்லாது என்பார்கள்.

இன்றைக்கு டெல்டா பகுதிகளில் தான் அனைத்து நாசக்கார திட்டங்களும் வருகின்றன. சாதியையும் தாண்டி இங்கிருக்கும் மக்களை கடைசியாக ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி சோழர்கள் மற்றும் அதன் ஊடாக வரு ம் தமிழ்ப் பெருமிதம்.

அதையும் உடைத்துவிட்டால் நம்மை இன்னும் எளிதாக வீழ்த்திவிடலாம். இவ்வளவு தான் கணக்கு. இப்போது யோசனை செய்யுங்கள் ரஞ்சித் யார் பக்கம் என்று. திராவிட, தலித்திய, கம்யூனிச, மார்க்சிய நண்பர்கள் தமிழின மறுப்பை முன் வைப்பவர்கள்.

இந்த தமிழ்ப் பெருமிதம் தான் இந்தி திணிப்புக்கு எதிராக இன்னமும் உக்கிரமாக செயல்பட வைக்கிறது. இந்த தமிழ் pride தான் மெரினா புரட்சியை சிறப்பாக நடத்தி வைத்தது. வேறு எந்த கருத்தியலும் இத்தனை நாள் இதை செய்ய முடியவில்லை.

அப்போதும் உள்ளே புகுந்து புரட்சியைக் கலைக்க முற்பட்ட முற்போக்கு இயக்கங்கள் பற்றி மக்கள் அறியாததா? அரசியல், வேளாண்மை, சூழலியல், திரைத்துறை , இலக்கியம், மரபு மருத்துவங்கள், ஈழம் என எல்லா இடத்திலும் முற்போக்கு பட்டறையைப் போட்டு தன்சாதிப்பற்றை பேசுபவர்கள் தான் இன்று இராசராசனை எள்ளுகிறார்கள்.

நம்மால் இராசராச சோழனை இந்தியத்திற்கு எதிரான குறியீடாக நிறுத்த முடியாதா என்ன? ONGC, GAIL போன்ற பெரு நிறுவனங்களுக்கு எதிரான குறியீடாக நிறுத்த முடியாதா என்ன? அவர்கள் செய்த நீர் மேலாண்மையை உலக அறிஞர்களே வியக்கும் போது அந்த இனத்தில் பிறந்த நமக்கு பெருமை வரக் கூடாதா என்ன? அந்த நீர் மேலாண்மையை வைத்து அவனை இன்றைய சூழலியல் குறியீடாக(Ecology Brand) நிறுத்த முடியாதா என்ன? கண்டிப்பாக முடியும் அதன் வழியே மக்கள் சக்தியை ஒன்று திரட்டி நாம் வெல்ல முடியும். இது முற்போக்கு மொன்னையர்களுக்கும் தெரியும். ஆனால்???

100 விழுக்காடு தூய்மைவாதம் பார்த்தால் இங்கே ஒருவரும் உருப்படி இல்லை. நானும் நீங்களும் ஒரு வெங்காய செயல்பாட்டையும் சமூகத்திற்காக செய்து விட முடியாது. பெரியார், மார்க்சு என்று வரும் போது மட்டும் வாங்க ஜி வாங்க ஜி என்பது.
பாரதியார், மா.பொ.சி, காந்தி, ஜே.சி. குமரப்பா, நேரு, நம்மாழ்வார் என்றால் போங்க ஜி போங்க ஜி தான். தமிழ் தேசியர்களுக்கும் இது பொருந்தும். முழுமையாக பெரியாரை, அம்பேத்கரை, நல்ல உலகத் தலைவர்களை ஒரேடியாகத் தூக்கிப் போடுவது etc.

மொழி மீட்சியில் , தமிழ் இலக்கியத்தில் பாரதியையும், வடக்கெல்லை மீட்சியில் மா.பொ.சி யின் பங்கையும் அவ்வளவு எளிதாக தூக்கிப் போட்டுவிட முடியுமா? தன்னிறைவு, கிராமியப் பொருளாதாரத்தில் காந்தி, குமரப்பா, நம்மாழ்வாரை ஒட்டு மொத்தமாக புறக்கணித்துவிட முடியுமா?

ஒருவரின் சரி தவறுகளை ஆய்ந்து ஏற்க வேண்டிய இடத்தில் ஏற்று விலக்க வேண்டிய இடத்தில் விலக்கி வைப்பவனே உண்மையான முற்போக்காளன். அதை விடுத்து முரண்களைக் கூர் தீட்டி குளிர் காய்வதல்லாம் சனாதனத்தனம் தான். இந்த வேலையை இருபுறம் இருப்பவர்களும் செய்கிறார்கள்.

பல்லவர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர்கள் எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பாளிகள். கட்டபொம்மன் மிகச் சிறந்த மன்னன். காவல் கோட்டம் அருமையான நாவல், பாகுபலி அருமை. ஆனால் சோழப்பரரசு, ராசராசன், பொன்னியின் செல்வன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் கசக்கும்.

தஞ்சை கோயிலுக்கு முன்புறமாக சென்றால் ஆட்சியாளர்களுக்கு ஆகாது ஆனால் நாயக்கர் மகாலுக்கு செல்லும் போது ஆரத்தி எடுத்துவிட்டு முன்வாசல் வழியாக செல்வது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத கடையெழு வள்ளல்களுக்கும் மூவேந்தர்களுக்கும் இடையே சிண்டு முடிஞ்சு வேள்பாரி என்று விபூதி அடிப்பது என இந்த அரசியல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

இதெல்லாம் தன் சாதிப்பற்று அல்லாமல் வேறென்ன? ஆனால் தன்சாதிப் பற்று தமிழனுக்கு மட்டும் தான் உண்டென கட்டமைப்பார்கள். தமிழ்த்தேசியம் என்றாலே சாதித்தேசியம், வலதுசாரி தமிழ்த்தேசியம் என கட்டமைப்பார்கள்.

பெரியாரியத்தில், மார்க்சியத்தில் கம்யூனிசத்தில் இல்லாத சாதி தமிழ்த்தேசியம் எனும் போது மட்டும் பறந்து வந்துவிடும். தேர்தல் பாதை திருடர் பாதை என கூவிக் கொண்டே சூரியவம்சம் அப்பா சரத்குமார் போல முக்காடு போட்டுக் கொண்டு அவர் சாதித் தலைவருக்கு பிரச்சாரம் செய்வார்கள்.

எனது 8 வருட அவதானிப்பில் உண்மையில் இந்த முற்போக்காளர்கள் தான் பெரிய தன்சாதி வெறியர்கள். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் எல்லாம் சும்மா அடையாள அரசியல். தமிழர்கள் வெளிப்படையாக வெட்டி சாதிப் பெருமிதம் பேசுபவர்கள். இவர்கள் முற்போக்கு வெள்ளை அடித்து சாதியம் பேசுபவர்கள். அவ்வளவு தான்.

இங்கு காலம் காலமாக ஒரு தமிழ்த்தேசிய சித்தாந்தம் இந்த மண்ணை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. மயன், தொல்காப்பியன், வள்ளுவன், ஒளவையார் , காரைக்கால் அம்மையார், சித்தர்கள் முதல் அண்மைய வள்ளலார் மேலும் அயோத்திதாசர், சிங்காரவேலர், மா.பொ.சி, வ.உ.சி, பாரதிதாசன், கி.ஆ.பெ, ரெட்டைமலையார் etc… என அந்த சித்தாந்தம் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தமிழ் மொழி தான் அந்த பல்லாயிரம் ஆண்டு கால பிணைப்பை தாங்கிக் கொண்டே வருகிறது. வேத மரபை தமிழியம் எதிர்த்தது. இந்த வேத எதிர்ப்பு பயணத்தில் பெரியார் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதனால் தான் அவர் இங்கே நின்றார். நிற்கிறார் இன்னமும்.

இன்றைக்கு கிரிக்கட் வர்ணனைகள், Discovery அலைவரிசை எல்லாம் தமிழுக்கு மாறிவிட்டார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் மரபு மருத்துவம் பற்றி காட்சி வைக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் நம் கலாச்சாரத்தைக் கொண்டாடுவோம் என Colgate காரன் வள்ளுவரின் படத்தைப் போட்டு வணிகம் செய்கிறான். அவர்களுக்கு தெரிந்திருக்கிறது மக்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்று. ஆனால் நீங்களோ வெகுமக்களின் மொழி, பண்பாடு, கலைகள், விழுமியங்களில் இருந்து விலகி புதியதாக பகுத்தறிவு, சர்வதேசியம் என ஒரு சித்தாந்தம் படைக்க முயலுகிறீர்கள்.

தமிழர்களிடம் உள்ள பெருங்குறை இல்லாத வெட்டிப் பெருமை பேசுவது. ஆப்கானிஸ்தானில் தமிழ் ஐரோப்பாவில் தமிழ், நாசா திருநள்ளாறு அதிசயம் என துளி கூட உண்மை இல்லாத WhatsApp செய்திகள்.

இவற்றை ஒழித்தாலே போதும். நமக்கு இருக்கின்ற பெருமைகளே போதும் பிறகு ஏன் வெட்டிப் பெருமை? இன்னொரு பெரிய குறை முன்னோர்கள் வலியுறுத்திய அறத்தின் வழி நில்லாமல் மொழி மீது, இயற்கை மீது அக்கறை கொள்ளாத தன்மை. ஒரு பேரழிவுத் திட்டம் வந்தால் மற்ற இனத்தவர்கள் போராடும் வேகம் நமக்கு இல்லை. நான் நன்றாக இருந்தால் போதும் என்னும் மனநிலை. நமது மரபு இப்படிப்பட்டதல்ல என்பதை உணருங்கள்.

தமிழ் மொழி மட்டுமே உயர்ந்தது , தமிழர்கள் தான் உலகின் ஆதிக்குடிகள் என இறுமாந்த வேண்டாம்.. யவனர்களும்(கிரேக்கம்) , ரோமானியர்களும் சங்க காலத்தே கடல் வழி வணிகம் செய்தவர்கள் தான். சீனம், அரெபியம், எகிப்து, ஆப்பிரிக்க, யவனமும் ஆதி மொழிகள் தான். நம் முன்னோர்கள் வழி நின்று அறம் காப்போம், தனி மனித ஒழுங்கைக் கடைபிடிப்போம்.

சாதிப் பெருமிதங்களை உடைப்போம். மொழியைப் பேணிப் பாதுகாப்போம். வாசிப்போம், நல் இலக்கியங்கள் படைப்போம். தமிழ்ப் பெருமிதத்தை முறையான வழியில் ஆற்றலாக்குவோம். தமிழர் தேச நலனைப் பாதுகாப்போம். மூவேந்தர்களை தன் சாதி என்று கொண்டாடும் கழிசடைகளை புறந்தள்ளுவோம்.

திராவிட, தலித்திய, கம்யூனிச, மார்க்சியர்கள் இந்த மண்ணில் இருக்கும் சித்தாந்தத்தை இனம், மொழி, பண்பாடு, மெய்ப்பொருளியல், கலைகள் அடிப்படையில் உங்கள் சித்தாந்தத்தையும் இணைத்து முன்னெடுக்கவில்லை என்றால் தோற்றுக் கொண்டே தான் இருப்பீர்கள். ரஞ்சித்துகள் இறுதியாக வந்தடைய வேண்டிய இடம் தமிழ்த்தேசியம் மட்டுமே. காலம் மாற்றும்.

அப்புறம் ராசராசன்?
1000 ஆண்டுகள் தாண்டி வந்து இன்னமும் நின்று கொண்டிருக்கிறார். இனிமேலும் நிற்பார்.

மூவேந்தர்கள் போற்றி !!!

நன்றி- தமிழகத்திலிருந்து தினேசுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *