வெயிலோடும்…. மழையோடும்….. | சிறுகதை | தாமரைச்செல்வி


நாற்பது வருடங்களுக்கு மேலாக தனது எழுத்துக்களால் ஈழத்து படைப்புலகில் ஆழமாக வேரூன்றி நிற்பவர் “தாமரைச்செல்வி” என்ற திருமதி ரதிதேவி கந்தசாமி. கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை படிப்பிடமாகவும் தற்போது ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட தாமரைச்செல்வி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இலங்கையின் சாகித்திய விருதினை பெற்ற கௌரவத்துக்கு உரியவர். புலம் பெயர்ந்து வாழ்கின்ற போதும் மண் மனம் மாறாத தனது எழுத்துக்களால் போர்க்கால வாழ்க்கையை – அதன் நீட்ச்சிகள் ஏட்படுத்தி வரும் அதிர்வுகளை எழுதி வருபவர். அண்மையில் இவரது 37 சிறுகதைகள் கொண்ட “வன்னியாச்சி” புத்தகம் தமிழ் நாடு புத்தக சந்தையில் வெளியிடப்பட்டது. “வெயிலோடும் மழையோடும்” என்ற இந்த கதை தாமரைச்செல்வியால் “எதிரொலி” பதிப்புக்காக எழுதப்பட்ட கதையாகும்.

 

அவனுடைய மனநிலை எப்போது எப்படி இருக்கும் என்று பல சமயங்களில் அவனுக்கே புரிவதில்லை. தலையைக் கோதிவிட்டுக் கொண்டாலும் சரி கண்ணை மூடி யோசித்தாலும் சரி விடைகள் சுலபமாக கிடைப்பதில்லை. பக்கத்தில் நடந்து வருபவளோடு கோபத்தைத்தொடர்வதா இல்லை சமாதானப்படுத்தி சூழ்நிலையை இயல்பாக்குவதா என்றும் தெரியவில்லை.

கல்யாணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. அதுவும் ஜனனி அவுஸ்திரேலியா வந்து மூன்று வாரங்கள்தான் ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு இறுக்கமான சூழல் ஏற்பட்டதற்கு தானும் ஒரு காரணமாய் இருப்பதை ஒத்துக் கொள்ள மனம் மறுக்கிறது. நடந்தபடியே திரும்பி ஜனனியைப் பார்த்தான். தோளில் போட்டிருந்த கைப்பையை ஒரு கையால் அணைத்தபடி அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

இரவு கொஞ்சம் அதிகப்படியாக கதைத்து விட்டோமோ என்று மனதுக்குள் உறுத்தியது. அவளின் யோசனையான சோர்ந்து போன முகத்தைப் பார்க்க அவனுக்கும் கவலையாக இருந்தது. அதற்காக தன்னாலும் ஒன்றும் செய்ய இயலாமல் இருப்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தன் நினைப்பு சரியாகவே பட்டது அவனுக்கு. அதனால்தான் பொறுமை இழந்து அந்த மாதிரி வார்த்தைகளை கொட்டினானோ… அந்த மன உறுத்தலினால்தான் காலை எழுந்ததும்

“ இண்டைக்கு ஞாயிறுதானே.. வா பக்கத்தில கடற்கரையோட ஒரு மார்க்கற் இருக்கு. போயிட்டு அங்கயே சாப்பிட்டு மத்தியானம் வருவம்.” என்று சொல்ல வைத்ததோ…

அவள் எதுவும் பேசாமல் உடைகளை மாற்றிக்கொண்டு கூட வந்தாள்.

இந்த காலை நேர வேளையில் வீதியில் நடப்பது நன்றாகத்தான் இருந்தது. மான்லி வீதி கடந்து “ஹம்பி பொங்” பார்க்கின் கரையோடு நடந்தார்கள். வலப்பக்கம் பச்சையாய் புல்வெளி.. உயரமாய் மரங்கள். இடை இடையே மரபெஞ்ச். அதில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வயதானவர்கள். காலடியில் சங்கிலிகளுடன் விதம் விதமான நாய்கள்…

சிறிது தூரம் நடக்க வட்டமாய் நீர் ததும்பும் குளம். அதில் வாத்துக்கள் நீந்த நிறைய ஆமைகள் கரையில் பாதி நீரில் பாதியாய் கிடந்தன. சிறு பாலம் வழியாக அதைக்கடந்து நடந்து போய் “ரெட்கிளிவ்” பரேட் வீதிக்கு வந்தார்கள். இந்த வீதியை மறித்து ஒரு மைல் நீளத்துக்கு இந்த உழவர் சந்தை இயங்குகிறது. காலையிலிருந்து மதியம் வரை நடக்கும் சந்தை. இருந்த கடைகள் , கட்டடங்கள் தவிர வீதியின் இரு பக்கமும் வரிசையாய் சின்னச் சின்ன கூடாரங்களில் பல தரப்பட்ட விற்பனை நிலையங்கள்.

ரெட்கிளிவ்வைச் சுற்றியிருக்கும் கிராமங்களின் விளைபொருட்களை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நடக்கும் இந்த சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தள தளவென்று பச்சையாய் இருக்கும் பெயர் தெரியாத எத்தனையோ கீரை வகைகள் தொடக்கம் விதம் விதமான பழவகைகள் வரை அத்தனையும் விற்பனைக்கு இருக்கும். தவிர உடைகள் , அலங்காரப் பொருட்கள் , திரைச்சீலைகள் என்று சிறுகடைகளும் இருக்கும். எல்லாவற்றையும் விட விதம் விதமான சாப்பாட்டுக்கடைகள் இங்கு பிரசித்தம். ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் நாட்டு உணவுகளை கண்முன்னே தயாரித்து சுடச்சுடக் கொடுப்பார்கள். சில உணவு வகைகளுக்கு என்ன பெயர் என்றே தெரியாது. ஒவ்வொரு கடையிலும் கூட்டம் கூட்டமாய் நின்று ஆட்கள் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சில உணவக வாசலில் அமர்ந்து சாப்பிட மேஜை கதிரைகளோ மர இருக்கைகளோ போடப்பட்டிருக்கும்.

காலை ஒன்பது மணி வெய்யில் இதமாக இருந்தது. தெரு நிறைந்த ஆட்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கொண்டாடும் மனிதர்கள். அநேகமானவர்களின் கைகளில் சிறு சங்கிலிகளில் கட்டப்பட்டு கூடவே நடந்து வரும் நாய்கள். ஒரு வெள்ளை வெளேரென்ற நாய்க்குட்டி அவர்களை விலத்தும் போது “வொவ் “ என்றது. அவள் திடுக்கிட்டு “ ஐயோ” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். ஆட்களை விலத்தி அவள் கையைப் பிடித்து கூட்டிப் போனான். சுற்றிலும் வேறு வேறு நிறங்களுடனான மனிதர்கள். . கையில் பிடித்த குழந்தைகள் செம்பட்டைத் தலை மயிரும் பளிங்கு கண்களுமாக….

வீதி நீளத்துக்கு இருவரும் நடந்தார்கள். இந்தப்பக்கம் வரிசையாக இருந்த உணவகங்களின் வாசலோடு நடைபாதையில் போடப்பட்ட வட்ட வட்ட மேஜைகள். அவைகளில் அமர்ந்தபடி ஆறுதலாக சாப்பிட்டுக் கொண்டும் ஏதாவது பானங்களை குடித்துக் கொண்டும் நிறைந்து போயிருந்த பல வித மனிதர்கள்.

பக்கமாய் பார்த்தபோது வெண்மணல் பரப்புடன் அடிவானம் வரை விரிந்து கிடந்தது கடல். மணல் வீடு கட்டுவதும் ஓடித்திரிவதுமாய் கரையெங்கும் குழந்தைகளின் ஆரவாரம். தெருவில் நடந்தபடியே அவள் தூரத்தெரியும் கடலையே பார்த்துக்கொண்டு வந்தாள்.

கடலுக்குள் சிறிய தூரத்தில் இறங்குதுறை. அங்கிருந்து கரையை இணைத்து அழகாய் நீண்டிருக்கும் பாலம். அதில் நடந்து ஜெற்றி வரை போய் வரலாம். காற்று தலை மயிரை கலைத்துப் போட நடப்பதில் தனி உற்சாகம் இருக்கும்.

இந்த இறங்குதுறையால்தான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முதல் வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தப் பகுதிக்குள் இறங்கினார்களாம். அதையே நினைவுச்சின்னமாக இன்றளவும் பராமரித்து வருகிறார்கள். கடற்கரை ஓரமாக போரில் உயிரிழந்தவர்களின் ஞாபகமாக உயரமான நினைவுத்தூண் அமைந்திருந்தது. பலர் அதன் முன் நின்று படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

பிரிஸ்பேர்ணிலிருந்து ஒரு மணி நேர கார் பிரயாண தூரத்தில் இந்த ரெட்கிளிவ் இருக்கிறது. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு குட்டி குடாநாடு. அவன் தொடர்ந்து இங்கேயே இருப்பதற்கு இந்த அழகிய சூழலும் ஒரு காரணம்.

நீண்டிருந்த விறாந்தையின் ஒரு பக்கத்தில் இருந்த மேஜை தேடி அவளை அமர வைத்து

“ முதல்ல ஏதாவது ஜூஸ் குடிப்பம். பிறகு ஜெற்றி வரை நடந்து போய் வந்து ஏதும் சாப்பிடலாம்.”

என்று சொல்லி விட்டு போய் இரண்டு ஜூஸ் வாங்கி வந்து தானும் அமர்ந்து கொண்டான்.

எதிர்ப் பக்கம் சிறிதாய் போடப்பட்ட கூடாரத்தில் ஒரு இளைஞன் கிட்டார் வாசிக்க ஒரு இளம்பெண் கையில் மைக் வைத்து பாடிக் கொண்டிருந்தாள். தோள் வரை நீண்ட செம்பட்டை தலைமயிரையும் அவர்களின் சிவந்த நிறத்தையும் பார்க்க எந்த நாட்டவர் என்று கணிப்பிட முடியவில்லை. என்ன மொழியில் பாடுகிறார்கள் என்றும் புரியவில்லை. ஆனாலும் கேட்பதற்கு இனிமையாகவே இருந்தது. முன்புறம் இருந்த மேஜையில் வைக்கப்பட்ட நீளப்பெட்டியில் பாட்டைக்கேட்டு விட்டு காசு போட்டு போனார்கள். பாட்டு நன்றாக இருந்தாலும் ரசிக்கும் மனநிலைதான் இருக்கவில்லை.

அவன் ஜனனியைப் பார்க்க அவள் எதிரே கடல்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இப்படி அமைதியாய் இருப்பது அந்த இடத்துக்கு பொருத்தமற்ற விஷயமாக இருந்தது. இந்த சனங்கள் எல்லாம் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள் . குழந்தைகளையும் நாய்க்குட்டிகளையும் கூட்டி வந்து லீவு நாளைக் கொண்டாடுகிறார்கள்.

தங்கள் நிலையை நினைக்க அவனுக்கு வருத்தமாக இருந்தது. இங்கே வந்தும் யோசனைதான்….. கவலைதான்.

யோசனை படிந்த அவள் முகத்தைப் பார்க்க ஒரு கவலை வினாடியில் மின்னி மறைந்தது.

இவள் ஆசைக்கல்ல தேவை கருதி வெளிநாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவள்.

கோபிப்பது நியாயமேயில்லை. மனதுக்குள் சமாதான அடுக்குகள் . அவளைப்பார்த்து நேற்று அந்த மாதிரி வார்த்தைகளை சொல்லியிருக்கக்கூடாது. ஆனால் அவனாலும் என்ன செய்ய முடியும்…..

இப்போது இவள் இருக்கும் நிலையில் ஒரு காலம் அவனும் இருந்திருக்கிறான். எத்தனையோ ஆசைகளோடும் கனவுகளோடும் அவுஸ்திரேலியா வந்தான். இந்த ஏழெட்டு வருஷங்களாய் என்னென்ன பாடெல்லாம் பட்டான்.

பிரிஸ்பேர்ண் பல்கலைக் கழகத்தில் படிக்க அனுமதி பெற்று வந்தவன் மேற்படிப்பைக் காரணம் காட்டி விசாவைப் புதுப்பித்து கடைசியாய் போன வருஷம்தான் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றிருந்தான். ஆறு வருஷங்கள் படிப்பிலும் தற்காலிகமாகச் செய்த சின்னச் சின்ன வேலைகளிலும் கடந்து போனது. படிப்பு முடிந்து நல்ல வேலை எடுத்து விட வேண்டும் என பட்ட அலைச்சல் கொஞ்சமல்ல. கணக்கியலைப் படித்து விட்டு படிப்புக்கு சம்பந்தமில்லாத பல வேலைகள் பார்த்து போன வருஷம்தான் ஒரு வேலை கிடைத்து இந்த ரெட்கிளிவ்வுக்கு வந்தான். தற்காலிக வேலை என்று சொல்லித்தான் எடுத்தார்கள் . கியூ டாக்ஸ் கொம்பனியின் ரெட்கிளிவ் கிளையில் ஆறு மாதம் வேலை செய்தான். மெரடித் வீதியில் ஒரு வெள்ளைக்காரர் வீட்டில் ஒரு அறை எடுத்து தங்கிக் கொண்டு பஸ்ஸில் வேலைக்கு போய் வந்தான்.

காரில் எங்கேனும் போக வேண்டி வந்தால் ஒன்றாக வேலை செய்யும் ஜேர்க்கி கூட்டிப் போவான். மிகவும் நல்லவன். எவ்வளவோஉதவிகள் செய்திருக்கிறான் .இந்த இடம் பிடித்துக்கொண்டதில் பஸ்ஸில் போய் வருவதில் சிரமம் தெரியவில்லை.

குளிர் அதிகமில்லை. எந்நேரமும் ஜம்பரோடு அலையத் தேவையில்லை. விருப்பத்தோடு செய்த வேலைதான். சம்பளமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே கிடைத்தது. ஆனாலும் ஆறு மாதத்தில் நிறுத்தி விட்டார்கள்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு வேலை கிடைத்தது. டெலி கொமினிக்கேஷன் கொம்பனியில் வேலை. அலுவலகத்தை ஒரு வீட்டில் வைத்திருந்தார்கள். கேபிள் போடவும் அதை நிர்வகிக்கவும் ஆட்கள் இருந்தார்கள். அவனுக்கு அநேகமாய் அலுவலகத்திலேயே வேலை இருக்கும். லெபனான்காரருக்கு சொந்தமான கம்பனி. அவருக்கு எழுபத்தைந்து வயது வரும். எந்த வேறுபாடுமின்றி எல்லோருடனும் இயல்பாக பழகுவார் . மூன்று மாதம் வேலை செய்தபின் சொன்னார்.

“ நான் கொம்பனியை மூடிவிட்டு அமெரிக்கா போக யோசிக்கிறேன். நீங்கள் வேறு வேலை தேட வேண்டியிருக்கும்.”

அவர் சொன்னதைக் கேட்டதும் ‘திக்’ கென்றது. அந்த நேரம்தான் அம்மா ஊரில் அவனுக்கு திருமண ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள். இந்த நேரத்தில் வேலை இல்லாமல் போனால் என்ன செய்வது என்ற கலக்கம்.

அம்மா ஜனனியின் படத்தை அனுப்பி “ உனக்கு இந்தப் பிள்ளையை பிடிச்சிருந்தால் போதும். இங்க நான் எல்லா ஒழுங்குகளையும் செய்வன். “ என்ற போது “ இப்ப என்னத்துக்கு அம்மா கல்யாணம். கொஞ்ச நாள் போகட்டும். “ என்று சொல்ல நினைத்தான். ஆனால் படத்தில் ஜனனியைப் பார்த்ததும் வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே நின்று விட்டது.

மெல்லிய புன்னகையுடனான முகம். மலர்ந்த பார்வை.

சரி அம்மா என்று உடனும் சொல்லிவிட்டான். நல்ல வேலை கிடைக்கவேண்டும் ஒரு கார் வாங்க வேண்டும். ஒரு வீடு சொந்தமாய் வாங்கவேண்டும் என்று மனதுக்குள் நெருடிய விஷயங்கள் எதையும் அம்மாவிடம் சொல்லவில்லை.

“ஆனால் அப்பன் அதுகள் கொஞ்சம் கஷ்டப்பட்ட ஆட்கள். இந்தப் பிள்ளை மனேஜ்மன்ட் படிச்சு முடிச்சிட்டுது. இன்னும் ரெண்டு தங்கச்சிமார் படிச்சுக்கொண்டிருக்கினம். தகப்பன் பத்து பன்ரெண்டு வருஷத்துக்கு முதலே ஷெல் பட்டு செத்துப்போயிட்டார். உழைச்சுப் பார்த்த தமையனும் இடம் பெயர்ந்து போன போது முள்ளிவாய்க்காலுக்க செத்துப்போச்சு. தாய்தான் பிள்ளையளை கஷ்டப்பட்டு வளத்து படிக்க வைக்குது. அதுகளிட்டை காசு பணம் இல்லை. நான் ஒரு சீதனமும் தர வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டன். படிச்ச பிள்ளை உங்க வந்தா உழைக்கும்தானே. இப்போதைக்கு கல்யாண செலவுகளை உன்னால சமாளிக்க ஏலுமே…”

யோசனையோடு அம்மா கேட்ட போது. “ அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் சமாளிக்கலாம். “ என்றான்.

“அப்ப நாள் வைக்கட்டே ….வாறியே..”

“ ஓம் அம்மா . நாளை வைச்சிட்டு சொல்லுங்கோ “

ஓகஸ்டில் நாள் வைத்தார்கள் . சிக்கனமாய் இருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த காசு நாலாயிரம் டொலர் கையில் இருந்தது. ஜேர்க்கி மூவாயிரம் தந்து உதவினான். இந்த ஏழாயிரத்துக்குள் செலவுகளை சமாளிக்க வேண்டுமே என்ற யோசனையோடுதான இரண்டு வாரம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போனான்.

திருமணம் நல்லபடி முடிந்தது. ஜனனி தெளிவான நிதானமான பெண் என்பது அவள் பேச்சிலும் செயலிலும் தெரிந்தது. வாழ்வில் எத்தனையோ இழப்புக்கள் துயரங்களிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவளின் நிலமை இரக்கத்தைத் தோற்றுவித்தது. இவளை ஒரு குறையுமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு மனதுக்குள் ஓடியது.

தங்கள் நிலை பற்றி மனம் விட்டு கதைத்தாள்.

“முள்ளிவாய்க்காலோட எங்கட எல்லா சந்தோஷங்களும் போயிட்டுது. அண்ணா போன பிறகு எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் இருந்தது. எல்லாம் இழந்த நிலையில இப்ப படிப்பு மட்டும்தான் எங்களிட்ட மிச்சமாய்இருக்கு. அங்க வந்தால் ஏதும் மேல படிச்சு நல்ல வேலை செய்யலாமா… எங்கட குடும்பத்தையும் நான்தான் பார்த்துக் கொள்ள வேணும்.”

சொல்லும் போதே குரல் தழு தழுத்தது.

“அதுக்கென்ன பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.”

மனதுக்குள் எதுவோ நின்று உறுத்தியது. பார்த்துக் கொண்டிருக்கும் வேலை கூட பறி போகப் போகிறது என்பதையோ இவள் எதிர் பார்த்து வருவது போல அங்கே நிலமை இல்லை என்பதையோ சொல்ல முடியவில்லை .

இரண்டு வாரத்தின் பின் அவன் வந்த போது வேலை போய் விட்டிருந்தது. கையில் வந்த காசை ஜேர்க்கியின் கடனுக்காக கொடுத்து விட்டான். மறுபடி வேலை தேடத்தொடங்கினான்

பார்த்துப் பார்த்து தன் விபரங்களை ஒவ்வொரு இடத்துக்கும் அனுப்பினான். அதற்குள் சின்னதாய் ஒரு வீடு வாடகைக்கு தேடத் தொடங்கினான். நல்லவேளை இங்கேயே

மான்லி வீதியில் இரண்டு அறை உள்ள வீடு வாடகைக்கு கிடைத்தது. பழைய வீடுதான். அதுவே கிழமைக்கு முன்னூற்றி இருபது டொலர் ஆனது. நவம்பருக்கு வீடு கைக்கு வரும். அநேகமாய் நவம்பர் டிசம்பரில்தான் ஜனனி விசா கிடைத்து வரக் கூடியதாக இருக்கும் என்பதால் அந்த வீட்டையே உறுதிப் படுத்திக் கொண்டான்.

இப்போது கையில் எண்ணூறு டொலர்தான் இருந்தது. என்ன செய்வது.. எப்படி சமாளிப்பது என்ற யோசனை.. இரண்டு மாதம் ஒரு ரெஸ்ரோரண்டில் வேலை கிடைத்து செய்தான். அதையும்  ஜனனி இங்கு வருவதற்கு முதல் வாரம் விட வேண்டியதாயிற்று . ஆனால் ஒரு மாதம் பொறுத்து மறுபடி வரச்சொல்லியிருந்தார்கள்.

மூன்று வாரத்தின் முன் ஜனனி வந்து இறங்கிய போது ஜேர்க்கியின் காரில்தான் விமானநிலையம் போயிருந்தான். எத்தனையோ நாட்களின் பின் அவளைப் பார்க்கப்போகும் ஆவலையும் மீறிக்கொண்டு இங்குள்ள நிலமைதான் மனதை நெருடிக் கொண்டிருந்தது.

அவளை அழைத்து வந்த போது நல்ல வெய்யில் நேரம்.

“அட இங்க குளிர் இருக்கும் எண்டு நினைச்சன். “ என்றாள்.

“இனி இங்க ஏப்ரலுக்குப் பிறகுதான் குளிர் வரும். இப்ப வெயிலாய்த்தான் இருக்கும்.”

வீட்டுக்குள் வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ சின்ன வீடுதான் ஜனனி இப்போதைக்கு எங்கள் ரெண்டு பேருக்கும் இது காணும்தானே”

“காணும் காணும். அது சரி உங்களிட்ட கார் இல்லையே”

வியப்போடு கேட்டாள்.

“ இல்லை. இனிமேல்தான் வாங்க வேணும்”

அவள் நம்பமுடியாதவள் போல் பார்த்தாள்.

“கார் இல்லாமல் எப்பிடி வேலைக்கு போய் வாறனீங்கள்.”

“பஸ்ஸிலதான். இங்க பஸ் நல்ல வசதி.”

சிறிது நேரம் அவள் எதுவும் பேசவில்லை. முகத்தில் யோசனையும் ஏமாற்றமும் கவலையும் படிவதை உணர முடிந்தது.

“இப்போதைக்கு அவசியமான பொருட்களோட இருப்பம். பிறகு ஒவ்வொண்டாய் வாங்குவம்”

சரி என்று தலையசைத்தாள் . வேலையும் இல்லை என்று அவன் சொன்ன போது அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“வேலை இல்லையெண்டால் எப்பிடி….ரெலி கொமினிக்கேஷன்ல வேலை செய்யிறன் எண்டு சொன்னீங்கள்.”

“அது போன கிழமையோட முடிஞ்சுது. வாற கிழமை ஒரு ரெஸ்ரோரண்ட்டில வேலை தொடங்குது. அதைச் செய்வம். வேற வேலைக்கும் போட்டுக்கொண்டிருக்கிறன். எப்பிடியும் நல்ல வேலை கிடைச்சிடும். பாப்பம்”

கலவரப்பட்ட அவளின் முகத்தைப் பார்க்க அவனுக்கும் கவலையாகத்தான் இருந்தது. அவளின் ஏமாற்றமும் பயமும்தான் சின்னச் சின்ன வார்த்தை உரசல்களுக்கு வழி வகுத்ததோ.

இத்தனைக்கும் அவள் குரல் உயர்த்தி பேசவில்லை எனினும் தன் இயலாமைதான் பொறுமை இழக்க வைத்து ஒரு இறுக்கமான நிலையை ஏற்படுத்தி விட்டதோ என்று தோன்றியது.

இரவு அவனும் கொஞ்சம் அதிகமாகவே கதைத்து விட்டான்.

“இல்லாதனீங்கள் எண்டு ஒரு காசு கூட உங்களிட்ட சீதனம் எண்டு அம்மா வாங்கேலை. சாகிற எல்லை வரைக்கும் போய் வந்தம் எண்டு சொல்லுற உனக்கு இந்த வசதியள் காணாதே”

சொன்ன பிறகுதான் சொல்லியிருக்கக் கூடாதோ என்று உறைத்தது. அந்த வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தியிருக்கும் என்று புரிந்தாலும் ஒரு வீம்பில் இருந்தவனுக்கு காலை எழுந்த போது மனம் கேட்கவில்லை. அதனால்தான் காலை எழுந்ததும் மார்க்கட்டுக்கு போகலாம் வா என்று கூட்டி வந்தான்.

தலையைக் கோதி விட்டுக்கொண்டே எதிரில் இருப்பவளைப் பார்த்தான்.

“கெதியாய் ஜூஸைக் குடி. பாலத்தில நடந்து ஜெற்றி வரை போய் வரலாம். பிறகு வெய்யில் வந்திடும். “

“ம்” அவள் கொஞ்சம் கொஞ்சமாய் ஜூஸை ஸ்ரோவினால் உறிஞ்சிக் குடித்தாள்.

அப்போது அவன் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். அம்மா.

பதட்டத்துடன் “ என்னம்மா இப்ப அங்க விடியக்காலமையல்லே. என்ன விஷயம்.” என்றான்.

அம்மாவின் குரல் கனிவாய் ஒலித்தது.

“ இல்லையப்பன். விடிய நித்திரை வரேலை. அதுதான் கதைக்க எடுத்தனான். எப்பிடி இருக்கிறீங்கள்.”

“நல்லாய் இருக்கிறம் அம்மா.”

“பிள்ளை பக்கத்தில நிற்கிறாவே தம்பி.”

“ஓம் அம்மா. ஸ்பீக்கரில போட்டு விடுறன் . கதையுங்கோ.”

கைபேசியை அவள் பக்கம் வைத்தான்.

“பிள்ளை..”

“ஓம் மாமி சொல்லுங்கோ. “

“எப்பிடி ரெண்டு பேரும் இருக்கிறீங்கள்.”

“நல்லாய் இருக்கிறம் மாமி. நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள்.”

“எனக்கென்னம்மா. நல்லாய் இருக்கிறன். உங்க எப்பிடி…வீடு வாசல் எல்லாம் வசதியாய் இருக்கே”

அம்மாவின் கேள்வி துணுக்குற வைத்தது. சட்டென்று அவளைப்பார்த்தான்.

“ஓம் மாமி எல்லாம் வசதியாய் இருக்கு. நல்ல வீடு. நல்ல இடம். “

“ தம்பி வேலைக்கு போறது தூரமே..”

“இல்லை மாமி. காரில போனா பத்து நிமிஷ தூரம்தான்.”

“ சந்தோஷமாய் இருந்தால் போதும். அதை விட வேற என்ன வேணும். “

“எங்களுக்கு ஒரு குறையுமில்லை மாமி. நல்லாய் இருக்கிறம். நீங்கள் யோசிக்காதேங்கோ”

“நல்லது பிள்ளை. எல்லாம் கடவுள் அருள். மற்றது தம்பி….”

“சொல்லுங்கோ அம்மா”

“மயில்வாகனண்ணை மகனைக் கூட்டி வந்தவர். பிள்ளைக்கு ஷெல் பட்டு ரெண்டு காலும் இல்லைத்தானே. ஒரு கடை போட்டுக் குடுக்கப் போறாராம். இருந்த இடத்திலயே ஏதும் உழைக்கட்டும் எண்டு சொல்லிக் கவலைப்பட்டார். அவை கடை தொடங்கிற நேரம் உன்னால ஏலுமெண்டால் ஏதும் உதவி செய்தால் நல்லது. பாவங்கள். கஷ்டப்பட்டதுகள். உங்களுக்கும் இப்ப நெருக்கடியாய்த்தான் இருக்கும்.”

“ஓம் அம்மா. இப்ப….”. அவன் சொல்லத்தொடங்க ஜனனி அவன் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தினாள்.

“ அவையள் கடை தொடங்கிற நேரம் சொல்லுங்கோ மாமி. ஏலுமானதை இவர் அனுப்பி வைப்பார்.”

“சரி பிள்ளையள் பார்த்து செய்யுங்கோ. நான் பிறகு கதைக்கிறன்.”

தொடர்பை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான். அவள் மிகுதி ஜூஸைக் குடித்துக் கொண்டிருந்தாள்.

“இங்க வேலை இல்லாமல் கஷ்டப்படுற நிலமை அம்மாவுக்குத் தெரிய வேண்டாம். இன்னும் எங்களுக்கு எவ்வளவோ காலம் இருக்கு. ரெண்டு பேரும் வேலை செய்தால் எல்லாம் சமாளிக்கலாம்.”

மெல்லிய குரலில் சொன்னாள்.

இழப்புக்களின் எல்லை வரை போய் வந்ததனால்தான் இத்தனை நிதானமாகப் பேச முடிகிறதோ…

உண்மையை உணர்ந்து நடக்கும் பெண்ணை எப்படி கொண்டாடத் தோன்றாமல் போயிற்று…

மனம் நொந்தது.

“வாங்கோ போவம்.” அவள் எழுந்தாள்.

அவளோடு பாலத்தில் நடக்கும் போது மனது லேசானது போல இருந்தது. முகத்தில் மோதும் சிறு வெப்பம் கலந்த காற்று கூட சில்லென்று இருந்தது.

 

நன்றி : மெல்பேர்ண் எதிரொலி

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =