இருட்டின் நிறம் வெள்ளை | சிறுகதை | தாமரைச்செல்வி


சின்ன வயதிலிருந்தே அவனுக்கு இருட்டு என்றால் பயம். பொழுது சாய்ந்து விட்டால் வெளியே எங்கும் போக மாட்டான். வீட்டின் முன்புறத் திண்ணையில் லாம்பு வெளிச்சத்தின் அருகேயே அமர்ந்திருப்பான். நினைவு தெரிந்த நாளிலிருந்து அக்காவின் பக்கத்தில்தான் பத்து வயது வரை படுத்திருக்கிறான். அக்காவின் கை அவன் முதுகை அணைத்துக் கொண்டிருக்கும். அதுவே அவனுக்கு நிம்மதியான நித்திரையைத் தரும்.

அக்காவுடன் வாய்க்கால்கரையில் நடப்பது போல, தண்ணீர் தெளித்து விளையாடுவது போல சந்தோஷமான கனவுகள் எல்லாம் வரும். கனவில் கூட இருட்டைக் காண விரும்பாதவன் அவன். இருட்டைக் கண்டு பயந்திருந்ததற்கும் இப்போது இருட்டுடனேயே வாழ்வதற்கும் இடையே எத்தனையோ காலங்கள் கடந்து போய் விட்டது. இப்போது முப்பத்தாறு வயதில் இருட்டே பழகி விட்ட நிலையில் முந்திய நாட்களின் பயத்தை எண்ணிப்பார்ப்பதில் என்ன பலன் இருக்கப் போகிறது.

இன்றைய பொழுது எப்படி கழியப் போகிறது என்ற கேள்வி முன் நின்று பயமுறுத்துகிறது. மலர் எப்படி சமாளிக்கப்போகிறாளோ….. வயிற்றுக்குள்ளிருந்து எதுவோ புரண்டு எழுந்து வந்து தொண்டையை இறுக்கியது.

மலர் வெறும் தேநீர் நிரம்பிய கோப்பையை அவன் கையில் கொடுத்து விட்டுப் போனாள். இனிப்பு குறைவு தான். ஆனாலும் பரவாயில்லை. நாளைக்கு இதற்கும் வழி இருக்குமா தெரியவில்லை. இந்த பசி பட்டினி எல்லாம் சின்ன வயதிலிருந்தே பழகிய ஒன்றுதான். அப்பா கூலி வேலைக்குப் போவார். ஆனால் வீட்டுக்கு ஒழுங்காக காசு தருவதில்லை. அப்பா குடித்து விட்டு சத்தம் போடுவதையும் அம்மாவுக்கு அடிப்பதையும் நித்தம் நித்தம் பார்த்து வளர்ந்தவன் அவன். அக்கா தான் இருவருக்கும் இடையில் நின்று விலக்கு பிடிப்பாள். அவளின் சொல்லைத்தான் அப்பா கொஞ்சமென்றாலும் கேட்பார்.

அக்காவுக்கு பத்து வயதான போதுதான் அவன் பிறந்தான். அவனுக்கு முதல் பிறந்த பெரியண்ணா சின்னண்ணாவை விட அவன் மீதுதான் அக்காவுக்கு மிகுந்த அன்பு. அப்பாவிடம் அடி உதை வாங்கிய நோய்வாய்ப்பட்ட அம்மாவை விட அக்காதான் அவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டவள்.

அப்போதெல்லாம் பாடசாலையிலிருந்து வந்து சாப்பிடும் ஒரு நேரச் சாப்பாடுதான் அவர்களுக்கு இருந்தது. இரவில் பசிக்குது என்று கேட்டால் அக்கா “உனக்கு கதை சொல்லுறன் வா. அப்ப பசிக்காது“ என்று கதை சொல்லிப் படுக்க வைப்பாள். அல்லது அரை றாத்தல் பாண் வாங்கி ஒவ்வொரு துண்டு வெறும் தேநீரில் தோய்த்து சாப்பிடத் தருவாள். பாவம் அக்கா அவளிடம் ஒன்றும் கேட்கக்கூடாது என்று தோன்றும். அக்கா பத்தாம் வகுப்பு வரைதான் படித்தாள். வீட்டுச் சூழல் அவளைப் படிக்க விட வில்லை.

பக்கத்து வீடுகளில் அரிசி இடிக்கப் போவாள். வீட்டு வேலைகள் செய்து கொடுப்பாள். அதில் வரும் காசில்தான் ஓரளவு சமைத்து சாப்பிட முடிந்தது.

அப்படியெல்லாம் தன்னை வருத்தி வீட்டைப் பார்த்துக் கொண்ட அக்கா ஒருநாள் அவர்களை விட்டு அவலமாய் இறந்து போனாள். அப்போது அவனுக்கு பத்து வயது. ஒரு அதிகாலை இந்திய இராணுவம் சோதனை என்ற பெயரில் ஊருக்குள் வந்தது. நாலு பேர் வாசல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்கள். துப்பாக்கி முனையில் அவர்களை வரிசையாய் நிற்க வைத்து அக்காவை மட்டும் முன் பக்கம் தள்ளினார்கள். ஓடிப்போய் தடுத்த பெரியண்ணாவை கீழே தள்ளி மிதித்தார்கள். பயத்தோடும் பதை பதைப்போடும் கத்தி அழுத அக்காவை சட்டையைப் பிடித்து இழுத்து தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போனார்கள். இரண்டாம் நாள் வயற்கரை பாலத்தின் கீழ் அக்காவின் உடல் கிடந்தது. எடுத்து வந்து முற்றத்தில் கிடத்தி அழுது தீர்த்தார்கள்.

அன்றைய துன்பம் அவனின் மனதில் ஆறாத வடுவாக பதிந்து கொண்டது. அக்கா போன பின்பு அவனது நிலை இன்னும் பரிதாபமாய் மாறியது. எந்நேரமும் அழுது கொண்டிருக்கும் அம்மாவின் பக்கத்திலேயே சுருண்டு கிடந்தான். இரவு வந்தாலே அக்காவின் ஞாபகம் வந்துவிடும். இருட்டுக்குள் அவள் கையணைப்புக்காக மனம் ஏங்கும். கண்களில் நீர் வழிய வழிய பயத்தோடு படுத்திருப்பான். அம்மா ஒழுங்காக சமைப்பதுமில்லை. பல நேரங்களில் அடுப்பு வெறுமையாய் கிடக்கும். பாணை வாங்கி வந்து பகிர்ந்து தருவாள். அக்கா இல்லாததால் அப்பா இன்னும் மோசமானவராய் மாறிப் போனார். எல்லாத்துக்கும் அம்மாதான் காரணம் என்று திட்டிக்கொண்டே இருந்தார்.

கொஞ்ச காலம் போனதும் பெரியண்ணா சின்னண்ணா இருவரும் அடுத்தடுத்து இயக்கத்திற்கு போய்விட்டார்கள். அதன் பின் அவர்களை வெகு நாட்களாக அவன் பார்க்கவில்லை. தொண்ணூற்றி ஆறாம் ஆண்டுக்குப் பிறகு இடம்பெயர்ந்து அக்கராயனில் இருந்தபோது மணலாறு சண்டையில் இறந்தது என்று பெரியண்ணாவின் உடலை கொண்டு வந்து தந்தார்கள். அத்துடன் அம்மா உடைந்து விட்டாள். மூன்று மாதத்தில் அம்மாவும் படுக்கையில் கிடந்து இறந்து போனாள்.

அதற்குப்பின் அவனால் வீட்டில் இருக்க முடியவில்லை. அம்மாவை வாழ்க்கை முழுவதும் துன்பப்பட வைத்த அப்பாவை மன்னிக்க முடியவில்லை. அவனும் ஒரு மத்தியானப் பொழுதில் போய் இயக்கத்தில் சேர்ந்து கொண்டான்.

அந்த வாழ்க்கை அவனுக்கு பிடித்தமானதாய் இருந்தது. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்ததாய் உணர்ந்தான். தனிமையான பொழுதுகளில் அக்காவின் நினைவு வரும். கலவரம் கொண்ட அவள் முகமும் கதறலும் நெஞ்சுக்குள் சொல்ல இயலா துயரத்தை தந்து கொண்டேயிருக்கும். அக்காவின் நினைவு வரும் போதெல்லாம் அவன் வேறு ஆளாய் மாறி ஓர்மத்தோடு நிற்பான்.

அன்றைய ஓர் இரவு நாளில் ஆனையிறவின் சுற்றுப்புறத்தில் சன்னங்கள் மழையாய் பாய்ந்து வந்த ஒரு கணத்தில் முகத்தில் காயமுற்று விழுந்தான் .மயக்கம் தெளிந்து எழுந்த போது நிரந்தர இருளை உணர்ந்தான். எத்தனை வலி… எவ்வளவு சிகிச்சை….

நண்பர்கள் கை பிடித்து ஆறுதல் சொன்னார்கள்.

“கவலைப்படாதேடா . நாங்கள் இருக்கிறம்.”

தோளணைத்த கைகளை உணர்ந்தபோது வாய் விட்டு அழத் தோன்றியது.

கண்கட்டு அவிழ்த்து மருந்துகள் போட்டும் பலனில்லை. இறுதியில் இருளோடு வாழ்தலே மிஞ்சிய வாழ்வாயிற்று. மனதை ஆற்றிக்கொண்டான். இருள் என்பது அவ்வளவு பயமுறுத்தும் விஷயமில்லை என்று உணர்ந்தான். பழகிக் கொண்டான்.

“விரும்பினால் வீட்டுக்கு போறியா” என்று செழியன் அண்ணா கேட்டார்.

அவனுக்கு வீடு என்று எதுவும் இல்லை. அப்பா வன்னேரிக்குளம் முதியோர் இல்லத்தில் இருப்பதாய் அறிந்திருந்தான்.

“போறதுக்கு இடமில்லை அண்ணா. நான் இங்கயே இருக்கிறன்.“

செழியன் அண்ணா ஆதரவோடு அவன் தோளை அணைத்துக் கொண்டார்.

அப்போதைய சமாதான நாட்களில் வெடிச்சத்தமோ குண்டுவீச்சு விமானங்களின் ஓசைகளோ கேட்காத அமைதி நிலவியது. அந்த இல்லத்தில் அவன் சுலபமாக தன்னை இணைத்துக் கொண்டான் .அங்கிருந்த அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் இழப்புகளுக்கு உள்ளானவர்களே. ஆனாலும். ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தார்கள். கண்வலி ஏற்படும் போது இரு கால்களையும் இழந்த அமுதன் மருந்து விட்டு விடுவான். ஒரு கையை இழந்தாலும் மறு கையால் அவன் கை பிடித்து பாமரன் கூட்டிப்போவான்.

அந்த நேரம்தான் அவர்களின் உதவிக்காக வேந்தன் வந்து அங்கேயே தங்கியிருந்தான். அவனுக்கு பக்கத்து ஊரைச்சேர்ந்தவன் வேந்தன். ஏற்கனவே அறிமுகமானவன். எல்லோர் இழப்பின் வலிகளுக்கும் மருந்திடுவது போல வேந்தனின் அணுகுமுறை இருக்கும். தன் பேச்சுக்களினால் அந்த இடத்தையே கலகலப்பாக்குவான். வேந்தனை எல்லோருக்கும் பிடித்திருந்தது.

அங்கே இருந்த நாட்களில் தும்பு வேலை பிரம்பு பின்னும் வேலைகளில் பயிற்சி பெற்றான். இருட்டு கூட ஒரு தோழனாய் அரவணைப்பது போல உணர்ந்தான். எந்த வித்தியாசமும் இல்லாததால் இரவு நேரங்கள் இப்போது அவனை பயமுறுத்துவதில்லை.

ஒரு மாலை நேரம் வாசலில் வாகனத்தின் ஓசை. ஆரோ வருகினம் என்றான் அமுதன். காலடி ஓசை அவனை நெருங்கியது. அவன் தோளைத் தழுவிய கரங்களின் அழுத்தம்….. மனதுக்குள் திக் கென்ற அதிர்வு.

“எப்பிடியடா இருக்கிறாய்.”

“சின்னண்ணா”

கத்திக்கொண்டே பாய்ந்து அணைத்துக்கொண்டான்.

“இங்க நீஇருக்கிறாய் எண்டு இப்பதான் அறிஞ்சனான். மாறன் அண்ணைதான் சொல்லிக்கூட்டி வந்தவர்.”

சின்னண்ணாவுடன் நிறைய பேச வேண்டும் போலிருந்தது. வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்குப்பட்டு நின்றது.

இரவு வரை சின்னண்ணா இருந்து விட்டு “நேரம் கிடைச்சா வாறன். கவனமாய் இரு“ என்று சொல்லிவிட்டு போனார்.

மாறன் அண்ணா அவனின் தோளைத்தட்டி “சின்னண்ணா வந்தது சந்தோஷமா “என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

“தாங்ஸ் மாறன் அண்ணா.”

அன்றைக்கு பிறகு சின்னன்ணா வரவேயில்லை. அடிக்கடி அவன் சின்னன்ணாவை நினைத்துக்கொள்வான். அந்த நாட்களில்தான் அவன் வாழ்விலும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவன் இருந்த இல்லத்தின் பக்கத்தில்தான் மலரின் வீடு இருந்தது. அதற்கு எதிர்ப்பக்கம் இருந்த பெண்களின் இல்லத்திற்கு அவள் அடிக்கடி போய் உதவிகள் செய்வாள் .அங்கு பொறுப்பாளராக இருந்தவர் சாம்பவிஅக்கா.

சாம்பவிஅக்காவின் குரலில் அன்பும் வாஞ்சையும் கலந்திருக்கும். கனிவான அந்தக்குரலைக் கேட்கும் போதெல்லாம் அக்காவின் ஞாபகம் வரும். என்னப்பன் செய்யிறாய் என்று அக்காவே கேட்பது போல் இருக்கும். சாம்பவிஅக்காவும் மாறன் அண்ணாவும் இரண்டு குழந்தைகளுடன் பக்கத்தில்தான் இருந்தார்கள். செழியன்அண்ணா தூர இடங்களுக்கு போகும் சந்தர்ப்பங்களில் அவர்கள்தான் அவர்களையும் பார்த்துக் கொள்வார்கள்.

ஒருநாள் சாம்பவிஅக்காதான் மலரை அறிமுகம் செய்து வைத்தாள். அதன் பிறகு அவன் முன்புறம் நின்றால் அவனையும் மலர் சுகம் விசாரிப்பாள். அப்படி ஏற்பட்ட பழக்கம் கல்யாணத்தில் வந்து முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லையெனினும் அதுவே நடந்து முடிந்தது.

மலரின் குடும்பமும் பல இழப்புக்களையும் துன்பங்களையும் கண்டதுதான். அதனாலேயே அவனையும் அன்போடு அரவணைத்துக் கொண்டது. அவளின் கை தொட்டு “ஏன் மலர்” என்ற போது உள்ளுக்குள் அழுகை வந்தது. அவன் கையை எடுத்து தன் கைக்குள் அவள் வைத்துக்கொண்டாள். அந்த நெகிழ்ச்சியான உணர்வை சொல்ல எந்த வார்த்தைகளும் தேவைப்படவில்லை. அவனைப்பொறுத்த வரை இந்த உலகத்தின் எந்த அழகுகளையும் அவன் உணர்ந்ததில்லை. பசியும் கண்ணீரும் கலந்த உலகம் அழகை இழந்திருந்ததாகவே அவனுக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் இப்போது இந்தப் பெண்ணின் மன அழகு இதுவரை அறியாத ஒரு அழகிய உலகத்தை அவனுக்குள் உணர வைத்தது.

புதிதாய் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை இயல்பாய் நகர்ந்து போனது. மலரின் அப்பா வயல்வேலைகளுக்கு போவார். வீட்டில் இருந்து மலரும் அவள் அம்மாவும் மிக்சர், முறுக்கு செய்வார்கள். அவைகளை அவன் பொதி செய்து கொடுக்க மலர் கடைகளுக்கு கொண்டு போய் கொடுப்பாள் .ஏதோ இரண்டு வேளையாவது சாப்பிடக் கூடிய அளவுக்கு வருமானத்தைத் தேடிக் கொண்டார்கள்.

சேயோன் பிறந்து ஒரு வயதான போது மறுபடி சண்டை தொடங்கி ஓட்டம் ஆரம்பமானது. ஒவ்வொரு ஊராக ஓடி கடைசியில் முள்ளிவாய்க்கால் வரை போய் நின்றார்கள். அந்த காலங்களை இப்போது நினைத்தாலும் மனம் வலிக்கும்.

அந்த பதட்டமான சூழலில் சின்னண்ணா அடிக்கடி நினைவுக்கு வருவார். எங்கே நிற்கிறாரோ எப்படி இருக்கிறாரோ என்று மனம் கலங்கும். சாம்பவிஅக்கா தொடங்கி தனக்கு தெரிந்த ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்ப்பான். எவரைப் பற்றியும் அறிந்து கொள்ள சூழ்நிலை இடம் தரவில்லை. அந்தக் கடைசி நேரத்தில் மலரின் அப்பாவையும் இழந்து அம்மாவுடன் அவர்களும் செட்டிகுளம் முகாமுக்கு போனார்கள்.

அங்கே இருந்த ஒரு வாரத்தில் ஒரு மத்தியானப் பொழுதில் திடீரென வாகனத்தில் வந்து இறங்கிய இராணுவத்தினரால் அவன் கைது செய்யப்பட்டான். சாப்பிட்டுக் கொண்டிருந்த பாதியிலேயே அவனை இழுத்துக்கொண்டு போனார்கள்.

“அவர் இயக்கத்தை விட்டு எவ்வளவோ நாளாச்சு. கண் தெரியாதவர். “

என்ற மலரின் கதறல் கணக்கெடுக்கப்படவில்லை.

“கண் தெரியாட்டியும் குண்டுகள் தயாரிக்கத்தெரிஞ்சிருக்குத்தானே. விசாரிச்சிட்டு விடுறம்.” மீசைக்காரன் அவளைப் பார்த்து உறுமினான்.

மூன்று வருஷம் விசாரணைகளிலும் புனர்வாழ்வு முகாம் வாழ்க்கையிலும் கடந்து போனது. வார்த்தையில் சொல்ல முடியாத துன்பங்கள் அவமானங்கள் எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று .அத்தனை விசாரணைகளிலும் பாதி உண்மைகளையே பேசினான். மீதியை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டான். மூன்று வருஷங்களின் பின் வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டான். வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இராணுவமுகாமில் மாதா மாதம் போய் கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

மலரும் சேயோனும் கூட்டிப் போக வந்திருந்தார்கள் .மலரின் தோளைக்கட்டிக்கொண்டு விம்மினான்.

“இந்த மட்டில விட்டிட்டாங்களே. அது போதும். இனி ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ. வாங்கோ”

மலர் கை பிடித்து கூட்டிப் போனாள்.

“சீவியத்துக்கு என்ன செய்யிறீங்கள்“ கவலையுடன் கேட்டான்.

“ஏதோ சமாளிக்கிறம்.வெளி நாட்டிலயிருந்து சியாமளா எண்டு ஒரு அன்ரி எங்களை மாதிரி கஷ்டப்பட்டவைக்கு கொஞ்ச உதவி செய்தவ.அவ அனுப்பின காசில கொஞ்சம் கோழியள் வாங்கி விட்டனான். அதுவும் வவுனியாவிலயிருந்துதான் வீரசிங்கண்ணை வாங்கி வந்து தந்தவர். வீட்டில மரக்கறி போட்டிருக்கிறன். அப்பிடி இப்பிடி ஏதோ சீவியம் போகுது“

வீட்டுக்கு வந்த பின் வீட்டின் மோசமான நிலையை உணர்ந்து கொண்டான். மேலே தகரம் போட்டு கட்டப்பட்ட மண்வீடு. தடவி தடவி முன் திண்ணையில் அமர்ந்து கொண்டான். வருமானத்திற்கு ஏதாவது வழி தேடிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு முந்திக்கொண்டு வந்து நின்றது. ஒரு நேரத்துக்கு எப்படியாவது சோறும் ஒரு கறியும் மலர் சமைத்து விடுவாள். மற்றைய நேரத்தில் வெறும் தேநீரோ பாண்துண்டோ அதை வைத்து சமாளித்துக் கொண்டார்கள். இப்போதெல்லாம் தன் சின்ன வயது நாட்கள் அவனுக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வந்தன. அன்று தான் இருந்த இடத்தில் இப்போது சேயோன் இருப்பதாக தோன்றியது. அந்த நினைப்பே பெரும் துயரத்தை தந்தது.

“ஏதாவது தொழில் செய்ய வேணும் மலர். என்ன செய்யலாம்“

“அதுதான் நானும் யோசிக்கிறன். சியாமளா அன்ரியிட்டதான் திரும்பவும் உதவி கேட்டனான். மா, தூள் அரைக்கிற மெஷின் வாங்கித்தந்தால் நாங்களே வீட்டில வைச்சு அரைச்சு பைக் பண்ணி கடைக்கு குடுக்கலாம்தானே. தான் வேற ஆட்களிட்டயும் கதைச்சுப் பார்த்திட்டு சொல்லுறன் எண்டவ. நீங்கள் வந்த பிறகு உங்களோடயும் கதைக்கிறன் எண்டவ. வாற ஞாயிறு இரவு கதைப்பா எண்டு நினைக்கிறன். அந்த மெஷினை மட்டும் வாங்க உதவி செய்திட்டால் காணும். சாப்பாட்டுப் பிரச்சனை தீர்ந்திடும். கொஞ்சம் நிம்மதி”

ஏதாவது உதவி கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பே பெரும் ஆறுதலாக இருந்தது.

அவன் வீட்டுக்கு வந்த பின் அவனைத் தேடி நிறைய நண்பர்கள் வந்து போனார்கள். ஒவ்வொருவரின் கதைகளும் கவலையையும் பதை பதைப்பையுமே தந்தது. தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சின்னண்ணா பற்றி விசாரிப்பான். யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இருக்கிறாரா…. இல்லையா என்ற கேள்வி எந்நேரமும் மனதை வருத்திக்கொண்டே இருந்தது. அவனுக்கு தெரிந்த பல பேரின் இல்லாமை மனதுக்குள் தாங்க முடியாத துயரத்தை தந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே வேந்தன் வீட்டுக்கு வந்தான்.

“அண்ணை அண்டைக்கு சாம்பவி அக்காவைப் பற்றி விசாரிச்சனீங்கள். நான் நேற்று தற்செயலாய் அவவைக் கண்டனான். மாறன் அண்ணையும் இல்லைத்தானே. ரெண்டு பிள்ளையளோட தனிய ஒரு சின்னக் கொட்டில் வீட்டில இருக்கிறா. அவவுக்கும் ஒரு கால் இல்லாமல் போச்சுதண்ணை. . நீங்கள் விடுதலையாகி வந்ததைச் சொல்ல சந்தோஷப்பட்டா”

அவனுக்கு மனம் பதறியது.

“வேந்தன். என்னை ஒருக்கா சாம்பவி அக்காட்ட கூட்டிப் போறியே”

“மலரக்காட்ட கேளுங்கோ அண்ணை”

“மலர், நான் போய் பார்த்திட்டு வரட்டே”

“சரி. நீங்க முதல்ல வேந்தனோட போய் பார்த்திட்டு வாங்கோ. நான் பிறகு போய் பார்க்கிறன்”

“அண்ணை. எட்டு கட்டை தூரம். சைக்கிளில இருப்பீங்கள.”

“நான் இருப்பன். வா”

சாம்பவி வீட்டை அவர்கள் அடைந்தபோது சூரியன் உச்சிக்கு ஏறி விட்டிருந்தது. முகத்தில் சுள்ளென்று அனல் அடித்தது. வேர்த்து விறு விறுத்துப் போய் இறங்கிய தங்களை அவள் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பாள் என்றே நினைத்தான்.

சாம்பவி அவன் கையைப் பிடித்து “நீ வந்திட்டாய் எண்டு அறிஞ்சு சந்தோஷமாய் இருக்குதப்பன்.. மலர், சேயோன் எல்லாரும் எப்பிடி இருக்கினம்”

அதே கனிவான குரல். குரலால் மட்டுமே அவன் உணர்ந்த சாம்பவிஅக்கா.

“நாங்கள் சுகமாய் இருக்கிறம். நீங்கள் எப்பிடி அக்கா இருக்கிறீங்கள்.”

கேட்கும் போதே அவனுக்கு தொண்டை அடைத்தது.

“ஏதோ இருக்கிறம். என்ர அம்மா அப்பாவும் சரி மாறன்ர அம்மா அப்பாவும் சரி இப்ப இல்லை. அவற்ர சகோதரங்களோடயும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் ஒருதரும் இல்லை. எப்பிடியோ வாழ்க்கை போகுது”

குரலில் ஆற்றாமை மின்னித்தெறித்தது.

“ஏதோ இந்த பிள்ளையளுக்காக வாழத்தானே வேணும்.எனக்கு ஒரு காலும் இல்லாமல் போச்சு.தோள் மூட்டில இன்னமும் சன்னம் இருக்கு. ஒரு பக்கம் சுள் சுள்ளெண்ட வேதனை. வெளி நாட்டில இருக்கிற எங்கட ஊர்ப்பிள்ளைதான் கொஞ்ச காசு தந்து இந்த கொட்டிலை போட்டனான். வேலி அடைச்சு கொஞ்ச வாழையளும் போட உதவி செய்தது.இந்த வருமானம் என்னத்துக்கு காணும். எங்களுக்கு படிப்பும் இல்லை. கூலி வேலை செய்யக்கூட போய்வர ஏலாது. அக்கம் பக்கத்து சனம் அப்பப்ப ஏதாவது தரும். கையேந்தி சாப்பிடுற நிலை போல அவமானம் வேற இல்லை. என்ர கதையை விடு. நீ என்ன செய்யப்போறாய்”

“பாப்பம் அக்கா. என்னாலயும் என்ன செய்ய ஏலும். ஏதும் இருந்த இடத்து வேலைதான் செய்ய வேணும்”

பகிர்ந்து கொண்ட அத்தனை வார்த்தைகளும் துயரத்தையே அதிகரிக்கச் செய்தது. சாம்பவி அக்கா கரைத்துத் தந்த தேசிக்காய் தண்ணியை குடித்துவிட்டு திரும்பினார்கள்.

“பாவம் அண்ணை. சாம்பவி அக்கா முந்தி எப்பிடி இருந்தவ. இப்ப தனிய இருந்து ரெண்டு பிள்ளையளையும் எப்பிடி வளர்த்தெடுக்கப் போறாவோ தெரியேலை”

பாரமாகிப் போன மனதுடன் அவன் அமைதியாய் வந்தான்.

வீட்டுக்குப் போனதும் ஆவலோடு மலர் கேட்டாள்.

“சாம்பவி அக்கா எப்பிடி இருக்கிறா”

அவன் எதுவும் பேசவில்லை. வேந்தன்தான் போனதிலிருந்து நடந்தவைகளை மலருக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.

தன்னைச் சுற்றி படர்ந்திருந்த இருட்டுக்குள் அவன் ஆழ்ந்து போனான். மூச்சு திணறியது. திண்ணையிலேயே சரிந்து படுத்து விட்டான்.

மலர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். “என்னப்பா செய்யுது” கவலையுடன் கேட்டாள்.

“ஒண்டுமில்லை. கொஞ்ச நேரம் இதில படுத்திருக்கிறன்“

“சரி. படுத்திருங்கோ”

உறங்கினானா இல்லையா…..அவனுக்கே தெரியவில்லை. ஒரு அடர்ந்த காட்டின் நடுவே நீண்டிருந்த ஒற்றையடிப் பாதையில் அக்கா அழுது கொண்டே வருவது போல் கனவு வந்தது. அக்கா என்று அவன் கூப்பிட்ட போது மலர் அவன் தோளைத்தட்டி எழுப்பினாள்.

“சியாமளா அன்ரி உங்களோட கதைக்கவாம். இந்தாங்கோ கதையுங்கோ”

கைபேசியை அவன் கையில் வைத்தாள்.

“ஹலோ…”

“தம்பி நான் சியாமளா அன்ரி கதைக்கிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ. உங்களுக்கு ஒரு வருமானம் வாறதுக்கான ஒழுங்கைச் செய்யலாம். மா அரைக்கிற மெஷின் வீட்ட இருந்தால் வீட்டிலயே இருந்து தொழில் செய்யலாம் எண்டு மலர் சொன்னவ. எங்கட அக்கா ஒருலட்சம் காசு உங்களுக்கு தாறாவாம். அந்த காசுக்கு நீங்க மெஷினை வாங்குங்கோ.வங்கியில உங்கட கணக்கில காசைப் போட்டு விடுறம்.”

அவன் ஒரு வினாடி மௌனமாய் நின்றான்.

“சரியா தம்பி.”

“அன்ரி. கஷ்டத்தில இருக்கிற எங்களுக்கு உதவி செய்யிறீங்கள். அது எவ்வளவு பெரிய விஷயம். ஆனா எங்களுக்கு தெரிஞ்ச ஒரு அக்கா இருக்கிறா. அவவுக்கு ஒரு கால் இல்லை. அவரும் இல்லை. சொந்த பந்தம் எண்டும் ஆரும் இல்லை. தனிய ரெண்டு பிள்ளையளோட சரியாய் கஷ்டப்படுறா.இந்தக் காசை அவவுக்கு குடுத்தா மெஷினை வாங்கி வீட்டில இருந்தபடி வருமானம் எடுத்துக் கொள்வா. அந்த அக்காக்கு குடுக்கிறீங்களா”

அவன் குரல் கர கரப்பாய் ஒலித்தது.

சில வினாடி சியாமளா அன்ரியின் குரல் கேட்கவில்லை.

“அன்ரி”

“ஓம் தம்பி. உங்கட விருப்பப்படி அவவுக்கு குடுப்பம். அப்ப உங்களுக்கு….”

“பரவாயில்லை அன்ரி. ஏதோ ஒரு நேரம் எண்டாலும் எங்களுக்கு சாப்பிட வழியிருக்கு. அதுவும் உங்கட உதவியாலதான். ஆனா அந்த அக்காவுக்கு அதுக்கும் வழியில்லை”

“சரியப்பன். காசை உங்களுக்கு போட்டு விடுறம். நீங்கள் அவவுக்கு குடுத்து விடுங்கோ”

“சரி அன்ரி. தாங்ஸ்”

கைபேசியை கீழே வைத்தான்.

“மலர்.”

“ம்.”

“பாவம் சாம்பவி அக்கா.”

அவன் கை மீது மலரின் கை அழுத்தமாய் படிந்தது.

அவனுக்குத் தெரியும். மலரின் கண்களும் இப்போது கலங்கிப் போயிருக்கும் என்று.

 

நிறைவு..

 

– தாமரைச்செல்வி

நன்றி : தாய்வீடு பத்திரிகை – கனடாLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *