புதிய அரசியல் சட்டம் நிராகரிப்பு | தாய்லாந்து


தாய்லாந்து நாட்டில் யிங்லக் ஷினவத்ரா என்ற பெண் பிரதமர், ஆட்சி நடத்தி வந்தார். அவருடைய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்து வந்தன. இதன் எதிரொலியாக அவரது ஆட்சியை கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ராணுவம் கவிழ்த்தது.

இதையடுத்து ராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

உடனே அவர் அதுவரை அமலில் இருந்து வந்த அரசியல் சட்டத்தை ரத்து செய்தார்.

புதிய அரசியல் சட்டத்தை எழுதுவதற்கு உதவியாக அவர் 247 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சீர்திருத்த கவுன்சில் ஒன்றை ஏற்படுத்தினார்.

புதிய அரசியல் சட்ட வரைவு தயார் ஆனது.

இது, நேற்று தேசிய சீர்திருத்த கவுன்சிலில் ஓட்டுக்கு விடப்பட்டது. இந்த ஓட்டெடுப்புக்கு 7 உறுப்பினர்கள் வரவில்லை.

ஒவ்வொரு உறுப்பினரும் ஓட்டெடுப்பின்போது பெயர் சொல்லி அழைக்கப்பட்டனர். அவர்கள் புதிய அரசியல் சட்டத்துக்கு ஆதரவு, நிராகரிப்பு குறித்த தங்கள் முடிவை வாய் வார்த்தையாக கூறினர். இதில் புதிய அரசியல் சட்டத்துக்கு எதிராக 135 பேரும், ஆதரவாக 105 பேரும் வாக்களித்தனர். மெஜாரிட்டி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததால் அரசியல் சட்ட வரைவு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக தேசிய சீர்திருத்த கவுன்சிலின் ஆயுள் முடிவுக்கு வந்து விட்டது.

அடுத்தகட்டமாக 21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சட்ட வரைவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு புதிய அரசியல் சட்ட வரைவை தயாரிக்க 180 நாட்களை எடுத்துக்கொள்ளும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய அரசியல் சட்ட வரைவு தயார் ஆனதும் 4 மாத காலத்தில் பொதுமக்களிடம் வாக்கெடுப்புக்கு விடப்படும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *