தமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி | பரந்தனில் இன்று இறுதிச்சடங்கு


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலையில் மரணமடைந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கான உலகத் தமிழர்கள் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுமாறு, வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மகரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயகுமரன்) நேற்று அதிகாலை மரணமானார்.

அவரது உடல், நேற்றுமாலை பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட, அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும், அவரது உடலுக்கு நேற்றிரவு அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறுதிச்சடங்கு இன்று பரந்தனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில்,

“உலகெங்கிலும் இருக்கின்ற எமது தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்.

அத்தோடு எமது பகுதியில் இருக்கின்றவர்கள் முடியுமானால் இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருக்கும்அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *