திருட்டுத்தனமாக திறக்கப்பட்ட அலுவலகத்தால் என்ன செய்ய முடியும்? தீபச்செல்வன்


நேற்று அதிகாலையில் இருட்டுடன் இருட்டாக காணாமல் போனோர் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சியே இவ்வாறு யாழ் பிராந்திய அலுவலகம் திருட்டுத் தனமாக திறக்கப்பட்டுள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டுத் தனமாக திறக்கப்படும் ஒரு அலுவலகத்தால் திருட்டுத்தனங்களைத்தான் செய்ய முடியும். இந்த அலுவலக திருப்பே திருட்டுத்தனமாக காணப்படுகின்றபோது இதன் செயற்பாடுகள் எப்படி இருக்கும்?

எதிர்வரும் ஓகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமாகும். அன்றைய நாளில் பாரிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடாத்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள்ஆகின்றன. எனினும் இந்தப் பத்து ஆண்டுகளிலும் இத்தகைய போராட்டங்களை கடந்தபோதும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதே துயரமானது.

போர் முடிவடைந்த நாட்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தாய்மார்களும் தந்தையர்களும் மரணித்து காணாமல் போகும் அவலங்களும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காய் போராடுபவர்களையும் காணாமல் ஆக்கிவிடுவதே நல்ல தீர்ப்பு என்பதைப் போல இருக்கிறது இலங்கை அரசு. ஆட்சிகள் மாறினாலும் இந்த விடயங்கள் குறித்து வாய் திறக்கப்படாத நிலையே நீடித்து வருகின்றது.

போரின் இறுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். இவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியாத நிலையே காணப்படுகின்றது. அத்துடன் அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் பல நூற்றுக் கணக்கான புலிப் போராளிகள் அரச படைகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பேருந்தில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டமை பற்றி அவர்களின் குடும்பத்தவர்கள் பலரும் அரச  ஆணைக்குழுக்களின் முன் சாட்சியமாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் தம்மிடம் இல்லை என்றது மகிந்த அரசு. இலங்கையில் இரகசிய தடுப்பு முகாங்கள் இருக்கின்றன என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆட்சி மற்றத்தின் பின்னர் இலங்கையில் இரகசிய முகாங்களை சர்வதேச பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர். எனினும் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை கூறாமல் காலத்தை ஓட்டுகின்றது அரசு.

இன்றைய ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கிற்கு வரும்போதெல்லாம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டங்களை நடாத்தி தது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசிய, அவர்களை சந்தித்த ரணில், இன்று பிரதமராகிவிடட நிலையில், அந்த மக்களை தெரியாத மாதிரிச் செல்கிறார். கள்ள மௌனம் காக்கிறார்.

theepachelvan க்கான பட முடிவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தில் எமது அரசியல் தலைமைகள் வெறும் அறிக்கையுடன் கடந்து விடாமல், சம்பிரதாயமான போராட்டங்களுடன் கடந்து விடாமல் சிங்கள அரசை பதில் சொல்ல வைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். ஈழத் தமிழ் தலைவர்களின் நிபந்தனையற்ற ஆதரவில் நகரும் இன்றைய அரசு, இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருப்பது எத்தகைய அயோக்கியத்தனமானது.

இந்த நிலையில், போர் குற்றம் மற்றும் இனப்படுகொலையுடன் தொடர்புடைய சவேந்திரசில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிகழ்வாகி விட்டது. இனப் படுகொலையாளிகளுக்கும் போர்க் குற்றவாளிகளுக்கும் உயர் பதவிகளை வழங்குவதன் வாயிலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்ல சேதியைதான் தமிழர்களுக்கும் உலகத்திற்கும் சொல்ல வருகின்றார். ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடு, உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாட்டிலும் பெரும் எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.

சர்வதே அழுத்தங்களை குறைக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற, காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் அரசியலை அறிந்தே மக்கள் அதனை கடுமையாக எதிர்த்தார்கள். இந்த நிலையில் இருட்டில் திறந்து, காணாமல் போனோர் அலுவலகம் எத்தகைய அரசியலையும் ஏமாற்று வேலைகளையும் செய்யப்போகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது அரசு.

வணக்கம் லண்டனுக்காக தீபச்செல்வன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *