கவிதை | காணாமல் போன அண்ணன் | தீபச்செல்வன்


1924821_10152068612657881_565623880_n

 

ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக்
கொண்டு செல்லும்பொழுது
வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில்
அண்ணன் எங்கே என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப்
பார்க்கும்போதும்
அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன்
விளையாடச் செல்லும்போதும்
அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்வில்லை

யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும்
கொண்டாட்டநாட்கள் வரும்போதும்
அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தூங்கி எழும்பும்போதும்
பள்ளிக்கூடம்செல்லும்போதும்
அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

வருடங்கள் பல ஓடிய பின்னரும்
யாரைப் பார்த்தாலும்
எங்காவது அண்ணாவைக் கண்டீர்களா?
என்பதைத் தவிர
அவள் வேறெதையும் கேட்கவில்லை.

 

 

-தீபச்செல்வன்-

நன்றி | ஆனந்த விகடன்

 

 

விபூசிகா கடத்தப்பட்டாள்!

13.03.2014  வெளியான ஆனந்த விகடனில் வெளியான இரண்டு கவிதைகளில் ஒன்று விபூசிகாவைப் பற்றியது. “காணாமல் போன அண்ணன்” என்பது அக் கவிதை. அந்தக் கவிதை இன்று வெளியாகியிருக்கிறது என்று நான் அறியும்போது அந்த விபூசிகாவும் கடத்தப்பட்டிருக்கிறாள் என்று செய்தியையும் அறிகிறேன். குழந்தைகள் காணாமல் போகும் தேசத்தில் என்னதான் இருக்கும்? – தீபச்செல்வன்-

 

 One thought on “கவிதை | காணாமல் போன அண்ணன் | தீபச்செல்வன்

  1. மனத்தை உருக்கும் விடயங்கள் முடிவில்லாது தொடர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *