தீயாய் எழுந்த திருமால்.


ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலை நிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள், பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள்.

உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள். திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞானத்தால் உணர்ந்த பிரம்மன், உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார்.

உடனே மகாவிஷ்ணு (அன்றைய தினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சமாக்கினார்.

தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து அக்னி வடிவில் மாய நலன் என்ற ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. அக்னி வடிவில் யாகத்தை அழிக்க வந்த அசுரனை பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்னியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் விளக்கொளிப் பெருமாள் (தீபப்பிரகாசர்) என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர், என்னும் பெயர்களைக் கொண்டு விளங்குகிறார். இறைவி பெயர் மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். விமானம் ஸ்ரீகர விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. மேலும் லட்சுமி, ஆண்டாள், வேதாந்த தேசிகர் மற்றும் ஆழ்வார் சிலைகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் அஷ்டபுயக்கரம் கோயிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.

பெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று, காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோயில். சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி “தூப்புல்’ எனவும் “திருத்தண்கா’ எனவும் அழைக்கப்படுகிறது.

ஆச்சாரியரான “வேதாந்த தேசிகன்’ இங்கு அவதாரம் செய்ததால் அவர் “தூப்புல் வேதாந்த தேசிகன்’ என அழைக்கப்பட்டார். திருமங்கை யாழ்வாரால் 2 பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும்படி அருட்பாலித்தார்.

இதனால் தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின் போது மணி அடிப்ப தில்லை என்றும் கூறுவார்கள். 1268ம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகன் 1369 வரை நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த்தார்.

அத்துடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது “அடைக்கலப்பத்து’ என்ற பாமாலையைப் பாடினார். இவரது புதல்வர் நயினவரதாச்சாரியார் என்பவர் இந்த பெருமாள் கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என்றும் கூறுவார்கள்.

கோயிலுக்குள் தாயார் சந்நதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சந்நதி உள்ளது. தேசிகன் வணங்கிய லட்சுமி ஹயக்கிரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது.

சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 46வது திவ்ய தேசம். தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை.

குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று.

வைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக்கும் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதத்தில் விளக்கொளி பெருமாள் தேசிகர் சந்நதிக்கு புறப்பட்டு செல்வதும், மார்கழி, சித்ரா பவுர்ணமியில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதையும் காணக் கண்கோடி வேண்டும்.

– ப. பரத்குமார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *