மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி செய்தால் கைது: எச்சரிக்கும் இராணுவம்


மாவீரர் துயிலும் இல்லம்க்கான பட முடிவுகள்"

அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த பணியை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடின் கைது செய்வதாக எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளதாகவும் மாவீரர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளை செய்வதற்காக முன்னேற்பாடுகளாக இந்த சிரமதானப் பணிகள் தாயகப் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு, மட்டக்களப்பு, மாவடி முன்மாரி, தாண்டியடி, வாகரை கண்டலடி திருமலை ஆலங்குளம்,செம்மலை உள்ளிட்ட 7 மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

அம்பாறை- கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவின் தலைவரான குட்டிமணி மாஸ்டர் என்று அழைக்கப்படும் நாகமணி கிருஷ்ணபிள்ளை கூறுகையில், “கார்த்திகை 27 தாயக விடுதலைக்கான ஆகுதியான மாவீர செல்வங்களை நினைவுகூரும் முகமாக இந்த முன்னேற்பாடுகள் இவ் வருடமும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க இருப்பதனால் இன்று சிரமதான பணிகளை முன்கொண்டு செல்கிறோம்.

ஆனால் அங்கு வந்த இராணுவ தரப்பு சிரமதான பணிகளை இடைநிறுத்த கோரியது. இல்லையேல் கைது செய்து கொண்டு செல்ல நேரிடும் என அச்சுறுத்தியுள்ளது.

அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது தடவையாக வருகை தந்த அதே இராணுவத்தினர், சிரமதான பணியினை மேற்கொள்ளும் அனைவரையும் புகைபடம் எடுக்க வேண்டும். அத்தோடு தங்களது சுய விபரத்தையும் வழங்குமாறு கோரினர்.

இதனை மறுத்த பின்னர் இவற்றை பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்து, அவருடைய அட்டையையும் புகைப்படம் எடுத்த பின்னர் அங்கிருந்து அகன்று சென்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தாயக பிரதேசங்களில் கார்திகை 27 புனித நாளாகவும் அன்று மாவீரர்களை வணங்க இந்த அரசும் இராணுவத்தினரும் தடுத்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் சர்வதேசமும்  இலங்கை அரசும் அனுமதியழித்த பின்னரும் இராணுவமும் புலனாய்வு பிரிவும் தடுப்பதேன்” என மாவீரர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க  தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *