தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!


சுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என்று தெரியமலேயே உள்ளனர். தைராய்டு என்பது பட்டாம்பூச்சி வடிவில் கழுத்தின் முன்புறம் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பியாகும். இந்த சுரப்பியில் சுரக்கப்படுவது தான் தைராய்டு ஹார்மோன்.

இது உடலில் பல முக்கிய பணிகளை செய்கிறது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். பொதுவான தைராய்டு கோளாறுகளான ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, தைராய்டிட்டிஸ். பெரும்பாலான தைராய்டு கோளாறுகள் இயற்கையாக மரபணுக்களால் வருவதாகும். தைராய்டு கோளாறை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அது மெட்டபாலிசத்தைப் பாதித்து, இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். பெரும்பாலான தைராய்டு பிரச்சனைகளை எளிதில் மருத்துவ உதவியுடனும், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இக்கட்டுரையில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மன அழுத்தத்தைக் குறைக்காமல் இருப்பது:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், மன அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியம். அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உட்பட்டால், அதனால் தைராய்டு பிரச்சனை தீவிரமாகும். சொல்லப்போனால் ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வருவதற்கு மன அழுத்தமும் ஓர் காரணம். ஏனெனில் மன அழுத்தத்தின் போது வெளிவரும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் வெளியிடப்பட்டு, தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தி, பிரச்சனையை தீவிரமாக்கும். எனவே தினமும் யோகா, தியானம், மசாஜ், ஆரோக்கியமான டயட் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இதனால் மன அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், புகைப்பிடிக்கவோ அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதையோ தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பதால் அதிலிருக்கும் தீங்கு விளைவிக்கும் உட்பொருட்கள், தைராய்டு நோயின் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். எனவே உங்களுக்கு தைராய்டு இருந்தால், புகைப்பிடிப்பதை அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.

மருந்துகள் மற்றும் பரிசோதனைகளைத் தவிர்ப்பது:

தைராய்டு கோளாறு இருந்தால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை வழங்குவர். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுக்காமல் இருந்தால், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியில் பிரச்சனை அதிகரித்து, தைராய்டு கோளாறு மேலும் தீவிரமாகும். எனவே தினமும் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுப்பதோடு, அடிக்கடி தைராய்டு பிரச்சனையை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவும் வேண்டும். அதிலும் குறைந்தது வருடத்திற்கு 1-2 முறையாவது தைராய்டு ஹார்மோன்களின் அளவைப் பரிசோதிக்க வேண்டும்.

காலை காபியுடன் தைராக்ஸின் மாத்திரைகளை எடுப்பது:

தைராய்டு பிரச்சனைக்கு தைராக்ஸின் மாத்திரைகளை எடுத்து வந்தால், அதை சரியாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுங்கள். இதனால் அது உடலால் எளிதில் உறிஞ்சப்படும். முடிந்த அளவு இந்த தைராக்ஸின் மாத்திரையை உணவு உண்பதற்கு 30-60 நிமிடத்திற்கு முன் எடுங்கள். இல்லாவிட்டால், இரவு தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன்பே எடுத்திடுங்கள்.

முக்கியமாக தைராக்ஸின் மாத்திரையை நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் பால் வகை உணவுகளுடன் சேர்த்து எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் காபி, டீயுடன் எடுப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். எப்போதுமே மாத்திரைகளை நீரில் எடுப்பதே நல்லது. அதேப் போல் மருத்துவர் பரிந்துரைத்த நேரத்தில் எடுப்பதே சிறந்தது.

அதிகளவு பச்சை இலைக் காய்கறிகளை உண்பது:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், பச்சை இலைக் காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல.

ஏனெனில் இவற்றில் உள்ள க்ளுக்கோலைனோலேட்ஸ் தைராய்டு ஹார்மோனின் தொகுப்பில் இடையூறை ஏற்படுத்தும். ஆகவே பச்சை இலைக் காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை பச்சையாக சாப்பிடாதீர்கள்.

சோயா பொருட்களை அதிகம் உண்பது:

பச்சை இலைக் காய்கறிகளை அளவாக சாப்பிடுவது போன்று, சோயா பொருட்களை உட்கொள்ளும் முன்பும் மருத்துவரிடம் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். சோயாவில் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் காய்ட்ரோஜெனிக் பொருட்கள், தைராய்டு செயல்பாட்டைப் பாதிப்பதோடு, தைராய்டு சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும்.

ஆகவே தைராய்டு பிரச்சனை இருந்தால் சோயா உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். அதோடு சோயா சப்ளிமெண்ட்டுகளையும் தவிர்த்திடுங்கள். மேலும் சோயா ஜங்க் உணவுகளான சோயா சீஸ், சோயா எண்ணெய், சோயா ஐஸ் க்ரீம் மற்றும் சோயா பர்கர் போன்றவற்றையும் தவிர்த்திடுங்கள்.

கொழுப்பு நிறைந்த உணவுகள்:

கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களான வெண்ணெய், இறைச்சி மற்றும் அனைத்து வகையான எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் தைராய்டு ஹார்மோனின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். முக்கியமாக கொழுப்புக்கள் தைராய்டு சுரப்பியில் ஹார்மோன்களின் உற்பத்தியைப் பாதிக்கும். ஆகவே இம்மாதிரியான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

சர்க்கரை உணவுகள்:

ஹைப்போ தைராய்டு இருந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கும். இந்நிலையில் சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான கலோரிகள், தைராய்டு சுரப்பியை பெரிதும் பாதித்து, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைப் பாதித்து, பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும். எனவே சர்க்கரை உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்கள்.

அதிகளவிலான நார்ச்சத்து எடுப்பது:

ஒருவர் போதுமான அளவு நார்ச்சத்தை எடுப்பது நல்லது. ஆனால் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அது ஹைப்போ தைராய்டிசத்தை மோசமாக்கும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 20-35 கிராம் நார்ச்சத்து அவசியம். இதற்கு அதிகமாக ஒருவர் நார்ச்சத்தை எடுத்தால், அது செடிரமான மண்டலத்தைப் பாதித்து, தைராய்மு ஹார்மோனின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும்.

நன்றி : மகாலஷ்மி.s | tamil.boldsky.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *